மலைகள்

=========
மனுச காகங்கள் காடு குஞ்சுகளை
கொத்திச் செல்லாதவாறு தன்
மண் ரெக்கைகளினால் காப்பாற்றி
வைத்துக்கொள்ளும் தாய்கோழி.

பலதாரம் கொண்ட
கடல் கணவனுக்கு
வாழ்க்கைப்பட்ட நதி நங்கைகளின்
தாய் வீடு.

கடல் தாண்டி ஓசோன் தீவுக்குள்
நுழைந்து விட எத்தனிக்கும்
திரவ அகதிகள் மறைமுகமாய்
பயணிக்கும் மேக கப்பலுக்கு
அடைக்கலம் கொடுக்கும் தேசம்

வானக் கிளைகளில் ஊர்கின்ற
பூமி நத்தையின் கூடு.

தாவரக் குழந்தைகள்
தாய்ப்பால் குடிக்கும் மார்பு.

மேகப்பறவைகள் தங்கிச் செல்லும்
மா மரங்கள்.

கருமுகில் போர்த்தி உறங்கும்
நிலா கன்னியின் கயிற்றுக்கட்டில்.

ஒவ்வொரு மனிதனும்
தன்னைப்போல் தலை நிமிர்ந்து
வாழவேண்டும் என்ற தத்துவம் தந்து
நிமிர்ந்திருக்கும் மலைகள்
பசுமை என்னும் துகிலுரிக்கும்
துச்சாதணர்கள் நம்மிடமிருந்து
நிலமடந்தையாள் மானம் காக்க
நதிகள் என்னும் நீள் சேலை வழங்கும்
கிருஷ்ணபரமாத்மாக்கள்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Aug-17, 3:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : malaikal
பார்வை : 303

மேலே