மனிதநேயம் பேசுகிறேன்

உயிரோடு கலந்த
தனிமையின் தவிப்பிலிருந்து
தனை கொஞ்சம் மீட்க
ஓர் உயிரேனும்
உறவாக வருமா
என்ற ஏக்கத்தோடு
வழியோரத்தில்
விழியோரம் ஈரமாய்
வாழ்வதும் மனித இனமே ..
அதைக் கண்டும்
காணாமல் போவதுதான்
இன்று மனித குணமே....!

ஓடிச்சென்று
உதவி செய்த
உணர்விங்கே காணாமற் போனது ..
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தலே
இன்று உயர்வென்று ஆனது!!

மனிதனே நீ
சாதி எனும் சக்கரத்தை
மதம் என்னும் தேரில் பூட்டி
மனிதநேயமாகிய என்னை
மெல்ல மெல்ல
கொன்றேவிட்டாய்!!

ஒருநாளும் இனி நீ
எனைத்தேடி வரப்போவதில்லை ..
உனக்குத் தேவைப்படும்
வேளையிலே நான்
வந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள நீ , துணிவதில்லை....

ஏழ்மையின் வறுமையை
வளமாக்க
உன்னால் இயலவில்லை!
ஆனால்,
வளமையான
வழிகளையெல்லாம்
வறண்டுபோகச் செய்ய
இயல்கிறதே உன்னால்...!!

மனிதா ஒரு நிமிடம்,
நான்,
மனிதநேயம் பேசுகிறேன் ..
ஏழ்மையின் காயம் ஆற்ற
துணிந்துவிடு ,
மனிதநேயத்தோடு நீ
உன் வாழ்வை
தொடர்ந்துவிடு...
இல்லையேல் ,
முடிந்துவிடும்
இன்னும் சிலகாலத்தில்
மனிதம் மண்ணோடு
முழுவதுமாய் மடிந்து
புதைந்து விடும்.....

எழுதியவர் : தமிழ் (4-Aug-17, 9:52 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 136

மேலே