தவறாமல் எடுத்துச்செல்

சில காலங்களில்
பல கணவர்களுக்கு
காலை காப்பிக்கும்
இடையில் இட்லிக்கும்
நடுவில் சோறுக்கும்
இறுதியில் முத்தத்துக்கு
மட்டுமானவர்களாய்
மாறிவிடுகிறார்கள்
எல்லாமுமாய் இருக்கவும்
எப்போதும் உடனிருக்கவும்
தொடரும் பந்தமாய் வந்த
மனைவி என்ற சொந்தம்

உடல் உரச மறக்கும்
ஒரு காலத்தில்
உள்ளங்கள் உரசி வாழும்
அந்த உயிர்
உன்னோடு கனிவில்

பின்னொரு நாள்
உன் இயலாமையில்
இறகுகள் கொண்டு
மெல்ல வருடும்

அந்த நாளில்
உன் அறியாமை கண்டு
ஒருவேளை நீ அழக்கூடும்
உன் புரியாமை உணர்ந்து
மனம் பிரளக்கூடும்

சோர்ந்து போகும்
உன் முதுமையில்
தன் தோள் சேர்க்கும்

உன் மரணத்தில்
உன்காலடி சாயும்
அந்த உயிர் ஒருநாள்

கண்ணீரால் உன்னை
குளிப்பாட்டி உன்
பாவம் கரைப்பாள்

கண்மூடாமல் உன்னை
வெறித்து பார்த்து எப்படி
விட்டுச்சென்றாய்
என்னை என்று
விடாமல் கேட்பாள்

போகும் போது
உன் புண்ணியங்கள்கூட
தவறாமல் எடுத்துச்செல்
அவள் உயிரையும்
அங்கும் உனக்கு
துணைவர தான்
விரும்புவாள் அவள்

ஒருவேளை நீ மறந்தால்
அவள் இதயம்
பதுக்கிய நினைவுகளையும்
உன் நினைவுகள்
உறங்கும் வீட்டையும்
துளசி மாடமாய்
சுற்றி கொண்டிருப்பாள்
சிறு குழந்தையாய்
உன்மடி சேரும் நாளையெண்ணி !!!


யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன் (8-Aug-17, 8:23 pm)
பார்வை : 136

மேலே