குறள் வெண்செந்துறை
பெற்றோர்
**********
கருணை மனத்துடன் கடவுளாய்க் காத்திடும்
பெருமைக் குரியோர் பெற்றோர் தாமே!
அன்பிற் சிறந்த அன்னை தந்தையை
என்றும் வணங்கிட ஏற்றம் கிடைக்குமே!
ஒழுக்கம்
**********
தன்னிலை மாறாத் தகைமை யாளனாய்
நன்னெறி காத்திடில் ஞாலம் போற்றுமே!
ஒழுக்க முடைமை உயர்வை நல்கும்
இழுக்கு நீக்கி இனிமை பயக்குமே!
கல்வி
*******
உற்ற துணையாய் உடன்வரும் வாழ்வில்
கற்ற கல்வியே கைக்கொடுக் கும்மே!
அழியாச் செல்வம் அவனியில் கல்விதான்
விழிப்புணர் வோடு விளங்கிடு வாயே!