நமக்குள் நானும் ஒருவன்

ரசித்திருக்கும்பொழுது
காற்று
மௌனமாக வீசுகிறது
யாரையும் காயப்படுத்தவில்லை

இரண்டு சிகரெட்
துண்டுகளையும்
ஒரு காலி
மது பாட்டிலையும்
கையில் வைத்தபடி
நின்றுகொண்டிருக்கிறேன்

பக்கத்துக்கு
சலூன் கடையில்
குப்பையில் போட்ட
பூமாலையை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

தீடிரென மழை பொழிகிறது
என்னை போலவே
மழைக்கு ஒதுங்கும்
காற்று
சிகரெட் புகைக்க
எத்தனிக்கிறது
இன்று சுதந்திரதினம்

இருவரும் சுதந்திரமாக
புகைத்துக்கொண்டிருக்கிறோம்
நாடு எங்களை பற்றி
கவலைபடாததைப்போல
நாங்களும்.......


பசிக்கிறது
உணவில்லை
குளிர்கிறது
போர்வையில்லை
சிறுவன் பணம் கேட்கிறான்
இல்லை .

நீங்கள் தேசியக்கொடியை ஏற்றுங்கள்
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
பசிக்கு உணவு போதும்
என்று சொல்ல
வெட்கமாக இருக்கிறது

பலத்து பொழிகின்ற
மழையின் செவிகளில்
மௌனமாக சொல்கிறேன்
அடையாள அட்டையில்லாத
பிச்சைக்காரனென்று

எனது முகவரி பலகையில்
கீழ்காணும் வாசகமிருக்கும்

சுதந்திரமாக
அடிமைதான்
நான் பசிக்கு

அதில் சிறு தேசிய கொடியை
ஏற்றி வைத்திருக்கிறேன்
இன்று சுதந்திரதினம்
யாருக்கு என நான்
கேட்கப்போவதில்லை .....!

எழுதியவர் : கோபிரியன் (15-Aug-17, 12:42 pm)
பார்வை : 622

மேலே