தமிழ் வேதம் - -சுவாமிநாதன்

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்



உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850



“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும் பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!



இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.



இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.



முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.



நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-





கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்



வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு



புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.



எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்



இதோ பாடலும் அதன் பொருளும்:



கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே



— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்



வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.





பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்); அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.



18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர், அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்



புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

எழுதியவர் : (15-Aug-17, 9:32 pm)
பார்வை : 149

மேலே