ஓணம் கவிதை
முற்றத்தில் முன்பெல்லாம்
அத்தப்பூ சிறு
கொத்துக் கொத்தாய்
வட்டத்துக்குள்
உட்கார்ந்திருக்கும்,
ஓணக்கோடி உடுத்தி
ஊஞ்ஞாலாடிக்கொண்டு
ஓணப் பாட்டு பாடுவது
இன்னும் என்
ஓர்மையில் உண்டு.
பக்கத்து வீட்டுப்
பிரேமாவோடு பிரேமம் கொண்டு
மலையாளம் கற்று
‘ஞான் நின்னே பிறேமிக்குந்நு’
என்று மொழியைக்
கடித்துத் துப்பிய தருணங்களும்,
அதைக் கேட்டதும்
சந்தன நெற்றியும்
வெண்ணிறக் கண்களும்
செந்நிறச் சூரியனாகி
அவள்
வெடித்துத் திட்டிய காலமும்,
புழையோரத்தில் தோணி நிறைய
சோகம் தின்று,
அதை விட அதிகமாய்
‘நாணமில்லே’ எனும் அவள்
வார்த்தையை
ஜீரணிக்கத் திராணியற்று
அசைபோட்ட மாதங்களும்,
மனசுக்குள் ஏனோ
மெல்ல மெல்ல மிதக்கின்றன.
காலத்தைப் போல அந்த
தாமரைக் கால்கள் நீளமானவை,
இன்னும் அவை
அதே பூவை
தண்ணீருக்கு மேல்
தாங்கிப் பிடித்திருக்கின்றனவே !
‘ஆத்மார்த்த பிறேமம்
நினிக்கொந்நும் அறியில்ல’
என்று
மீண்டுமொருமுறை
மொழியை கண்ணீர் தொட்டு
காயப்படுத்தி
அவள் முன் எறிந்து விட்டு வந்து விட்டேன்.
ஆயிற்று
ஆறு வருடங்கள் !
துபாயின் தெருக்களில் ஆரம்பித்து
ஊரில் ஓர்
மாடி வீடு கட்டும் எண்ணத்தில்,
இப்போது தான் மீண்டும்
என்
திண்ணைக்குத் திரும்புகிறேன்.
‘சுகமாணோ…
கண்டிட்டு கொல்லம் கொறயே
ஆயல்லோ’…
பிரியமாய் சிரிக்கிறாள் !
இத்தனை வருடங்களுக்குப் பின்னும்,
அதே பிரேமா.
யாரு ? என்ற
உள்ளறைக் கணவனின் கேள்விக்கு
என்ன பதில் சொல்லியிருப்பாள்
எனும் யோசனையில்
நானும்,
யாரது எனும் கேள்வியோடு
என் அருகில்
என் மனைவியும்.

