உன்னை நான் காணாமல் இருந்திருக்கலாம்

அவளை நான்
அன்று அங்கு
பார்க்காமல் இருந்திருக்கலாம்
இன்று விழியில்
நீர்பூக்காமல் இருந்திருப்பேன்

அந்த நொடி
என் கடிகாரத்தில்
இல்லாமல் இருந்திருக்கலாம்
இன்று மனம்
நொடியாமல் இருந்திருப்பேன்

அவள் என்னவள்
என்று இதயம் அன்று
சொல்லாமல் இருந்திருக்கலாம்
இன்று என்னிதயம்
இறவாமல் இருந்திருக்கும்

பேசாத உதடுகளோடு
சேர்ந்து உன் விழிகளும்
பேசாமல் சென்றிருக்கலாம்
இன்று என்விழிநீர் குருதியின்
நிறம்கொண்டிராமல் இருந்திருக்கும்

வீசாத வாசனையை
உன் பெண்மை
என் ஆண்மைக்குள்
சேர்க்காமல் இருந்திருக்கலாம்
அன்று கிறங்கி மீளாமல்
இன்று வரை தாளாமல்
அழுதுகொண்டு இருக்கிறேன்

என் இளமையின்
மீசையை முறுக்கேற்றிய
உன் தரிசனத்தை
தராமல் இருந்திருக்கலாம்
இன்று என் மீசை
உகுக்கும் கண்ணீரில்
பனித்திடாமல்l இருந்திருக்கும்

என் ஆண்மையின்
ஆசையை மெருகேற்றிய
உன் ஓரவிழிப் பார்வைகள்
வீசாமல் இருந்திருக்கலாம்
இன்று என் விழியோரங்கள்
ஏமாற்றத்தின் சுருக்கங்கள்
காணாது இருந்திருக்கும்

உன்னை நான்
காணாமல் இருந்திருக்கலாம்
நான் மாறாத
நானாகவே இருந்திருப்பேன்
இன்று நான்
உன் விழியால்
அர்ச்சிக்கப்பட்டு
அர்த்தநாதீஸ்வரனாக ....
பாதி நீயாக
உன் மனம் போல
இது வேண்டாமென்று
சொல்லும் ஒருபுறம் .....
பாதி நானாக
உனைகொண்ட என் மனம்
நீ மட்டும் வேண்டுமென்று
சொல்லும் மறுபுறம்


உன்னை நான்
காணாமல் இருந்திருக்கலாம்

எழுதியவர் : யாழினி வளன் (30-Aug-17, 2:37 am)
பார்வை : 260

மேலே