தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 17--முஹம்மத் ஸர்பான்
161.உலகில் விளைகின்ற பாவங்களில்
கண்களின் பங்கே முதன்மையானது
162.குருட்டுப் பிச்சைக்காரனின் கவிதைகள்
எப்போதும் கர்வம் கொண்டவை
163.பணத்தை நேசிக்கும் பூலோகத்தில்
உள்ளத்தை நேசிப்பவரும் உண்டு
164.ரசித்ததை பாராட்ட மறுப்பவன்
கலையெனும் சொல்லின் பகைவன்
165.என்னுடைய வானவில்லை களவாடி
வானத்தை அழவைத்தது காலம்
166.ஒரு கையில் மெழுகை ஏந்தி
மறு கையில் நெருப்பை மூட்டி
இரு விழிகளால் பாதை போட்டு
சிறு மனதால் கனவுகள் கண்டு
கடல் நீர் போக கானல் நீரிலும்
எதிர் நீச்சல் போடும் யுத்தம் 'வாழ்க்கை'
167.நரம்புகளை பாடையாக்கி
என்புகளை விறகாக்கி
பார்வைகளை சாணமாக்கி
உணர்வுகளை ரணமாக்கி
கொழுந்து விட்டெரியும் தீ 'காமம்'
168.எழுதும் கைகள் தளர்ந்தாலும்
ஊடகமான மொழிகள் அழிவதில்லை
169.குண்டூசியை இமை முன் நிறுத்தி
கேள்விகள் கேட்கிறது நெஞ்சம்
170.இரவுகளின் நீளம் மிகவும் அழகானது
அது தனிமையும் இனிமையும் கலந்தது