பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 9 அ இறுதிப் பகுதி

.............................................................................

பெண் மனது ஆழமென்று..

பாகம் 9 அ (கடைசி பாகம்)

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து....


ஆபிஸ் முடித்து இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன்.. என் வீட்டுக்கு..! அதாவது திவாகரின் வீட்டுக்கு..

நான் பழைய பஞ்சாங்கமல்ல.. நவீன யுகத்துப் பெண்..!

விதவைப் பெண் மறு மணம் செய்து கொள்வது நியாயமானதே..! ! !

விதவையாக்கி மறு மணம் செய்து கொள்வது ???

திவாகருக்கு மனநோய் ஏற்பட்டிருக்கலாம்.. இதனால் திவாகரின் மரணம் விபத்தாக இருக்கலாம் என்ற யூகத்தில்தான் இது நாள் வரை இருந்தேன். என் யூகத்தை தவிடு பொடியாக்கியது அன்று கூரியரில் வந்த துணி பார்சல்..!

ஊட்டியில் ஓட்டல் சிம்பிள் டிம்பிளில் சிப்பந்திகள் அனைவருக்கும் என்னைத் தெரியும்- மிஸஸ் திவாகராக..!

மற்றபடி சரண்யா என்கிற பெயர் அவர்களுக்கும் தெரியாது.. எந்த லெட்ஜரிலும் இல்லை.. !

திவாகர் வீட்டு விலாசத்துக்கு பார்சல் அனுப்புவது நோக்கமெனில் என் பெயருக்கு என்ன தேவை ?? திவாகர் பெயரே போதுமே??

என் பெயர் இடைச்செருகல்.. ! எதற்கு? என் பெயர் இருந்தால்தான் என் மாமனார் நான் இருக்குமிடத்துக்கு பார்சல் அனுப்புவார்.. அந்தத் துண்டுக் காகிதம் என் கண்ணில் பட வேண்டுமென்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு..!

நான் ஏமாளிதான்..! ஆனால் ஒரு விஷயத்தை சரியாகச் செய்தோமா இல்லையா என்பது கூடவா எனக்குத் தெரியாது??

நான்தான் நன்கு உதறி அந்தத் துணிமணிகளை அன்றைக்கே சோதனை போட்டு விட்டேனே?

இதனால் திவாகர் பெண் விஷயத்தில் குற்றமுள்ளவராகிறார்.. குற்றவாளிக்கு என் இதயத்தில் இடமில்லை..!

திவாகரை- அவர் நினைவை என் இதயத்திலிருந்து முற்றிலும் அகற்றத்தான் அன்று நான் கண்டிராத இந்த துண்டுச்சீட்டு இன்று வந்திருக்கிறது..! ! !

அப்படியானால்...

திவாகர் விவகாரத்தில் என்னைத் தெரிந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்..!

திவாகர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் - அந்த மாத்திரையின் தாக்கத்தினால்..! கரோலின் பங்களாவிலிருந்த அறையைப் பார்த்தபோது நோயோ, மாத்திரையோ இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று யூகித்திருந்தேன்..

அந்த மாத்திரைகளை அவருக்கு அளித்தது உதய்..! எப்படி இந்த மாத்திரைகளை திவாகர் உட்கொண்டார் என்று தெரியவில்லை.. அநேகமாகப் பாயாசத்தில் கலந்து கொடுத்திருக்கலாம்... ஏனெனில் கரோலின் பங்களாவுக்குப் போன அன்றிரவு அவர்கள் சாப்பிட்டது அதைத்தான்..!

வேதாக்கா கொடுத்த பாயாசம்..!

உதய்யின் பொருட்களில்தான் அந்த மாத்திரை அட்டை இருந்தது..! உதய்தான் மாத்திரைகளைக் கொடுத்திருக்க வேண்டும்..

யார் இந்த உதய்? அவனுக்கும் திவாகருக்கும் என்ன பகை ???

என் அடுத்த கேள்வி இதுதான்..

உதய் ஒரு வெளியாள் என்று நினைத்திருந்தேன்..!

உதய்யின் அடையாளமாக அந்த லாண்டரிப் பையன் சொன்னது, டீக்கடை பெரியவரோ, கோபி மாமாவோ சொன்னது.. சீட்டில் இருந்தது எல்லாம் சேர்த்துப் பார்த்தால்...

சிரித்தால் தெரியும் தங்கப்பல்..

ஓ பாசிட்டிவ் ரத்த வகை..!

அய்யாக்கண்ணுவின் தம்பி பையன்.. அண்ணனுக்கும் தம்பிக்கும் உருவ ஒற்றுமை மட்டுமல்ல பெயரிலும் ஒற்றுமை இருக்கும்..

அப்படிபட்டவனை எங்கு சென்று தேடுவேன் ??

அன்று கரோலின் பங்களாவுக்கு எதிரே நின்று கொண்டிருந்தோம் நானும் அண்ணனும்.. என் ஆசிரியை இப்ப நீ எங்க இருக்க என்று கேட்டார்..

அப்பாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்திருக்கும்போது பொய் சொல்ல வேண்டிய சூழல்.. அத்தனை கவனமாகப் பேசுகிறேன் என்றால் நான் எதைச் சொன்னேன் எதைச் சொல்லவில்லை என்பது எனக்கு மறந்தா போகும்??

மேட்டுப் பாளையம் என்றுதான் நான் சொன்னேனே தவிர ஊட்டி என்று கூட என் வாயிலிருந்து வரவில்லை..!

கரோலின் பங்களா என்கிற பெயர் எப்படி என் அம்மா காதுக்கு எட்டியிருக்கும்??

உதய் கொடுத்த விலாசத்தை மோகனிடம் சொன்னேன்.. அதன் பிறகுதான் அப்பா எங்களுக்கு ஃபோன் பண்ணினார்..

மோகன் மேல் சந்தேகம் விழுந்தது அப்போதுதான்..

வானதியிடம் மோகனின் அப்பா பெயரை கல்லூரிப் பதிவேட்டில் பார்க்கச் சொன்னேன்..

நல்லகண்ணு என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்..!

“ அண்ணன் தம்பி இருவருக்கும் உருவம் மட்டுமல்ல, பெயரும் ஒத்துப் போகும் ” – கோபி மாமா..!

நிச்சயதார்த்தமன்று அவன் என்னைப் பார்த்து சிரிக்கும் வரை அவனுடைய தங்கப்பல் என் கவனத்தில் இல்லை....

தங்கப்பல்லை பார்த்தேன்..!

அவன் ரத்தவகை ஓ பாசிட்டிவ்..!

அப்போதே அதிர்ச்சியால் தாக்கப்பட்டேன்..

இருந்தும் மோகனை நல்ல நண்பனாகவே பாவித்திருந்த மனது இதனை ஏற்கவில்லை..!

மோகனின் அக்கா மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவள்.. மனச்சிதைவு நோய்..! அவள் உபயோகப்படுத்திய மாத்திரைகள் மோகன் வசம் இருக்க வாய்ப்பிருக்கிறது ..

மோகனுக்குத் தங்கை கிடையாது. அவனை விட ஏழு வயது மூத்தவளான அவன் அக்கா திவாகருடன் காதல் கத்திரிக்காயில் எல்லாம் சம்பந்தப்பட வாய்ப்பில்லை...! !

இதுவரை திவாகரின் கோணத்திருந்தே எல்லாவற்றையும் பார்த்து வந்தவள் என் கோணத்தில் பார்த்தேன்..

மோகன் என்னைக் காதலித்தான்.. நான் கை நழுவிப் போனேன்..

என்னை அடைவதற்காக ஈவு இரக்கமின்றி திவாகரைக் கொன்றிருக்கிறான்..! ! !

அன்று உதய் சட்டையோடு இருந்த – அதாவது மோகன் கொடுத்த விலாசத்தை மோகனிடமே ஃபோனில் சொல்லியிருக்கிறேன்..

இந்த விலாசம் எனக்கு கரோலின் பங்களாவில்தான் கிடைத்திருக்கும் என்று மோகனுக்குத் தெரிகிறது..! மோகனைத் தவிர வேறு யாருக்குத் தெரிய வரப் போகிறது?

என்னை அங்கிருந்து கிளப்பி விட மோகன் காற்று வாக்கில் அந்தப் பெயரை உச்சரித்து, நான் சொன்னது போல அம்மா காதில் சேர்த்திருக்கிறான்..!

என் வீட்டுக்கு வந்திறங்கிய சோபா கம் பெட்டை பார்த்த மாத்திரத்தில் எனக்கு கரோலின் பங்களா ஞாபகம் வந்தது.. ஏனென்றால் அந்தப் பழைய பங்களாவிலிருந்த புதிய பொருள் அதுதான்..

முகேஷுக்கும் அப்படி இருந்திருக்கலாம்..

மோகனுக்கும் அந்த பங்களா ஞாபகம் வந்தது எப்படி?

எனென்றால் உதய்யாக அவன் அங்கு போயிருக்கிறான்.. தங்கியிருக்கிறான்.. ஊட்டியே போனதில்லை என்று முகேஷிடம் தெரிவித்த மோகன், பீட்டர்ஹெட் ரோடு என்ற வார்த்தையை தன்னை மறந்து உச்சரித்திருக்கிறான்.. பீட்டர்ஹெட் ரோட்டில் தானே கரோலின் பங்களா இருக்கிறது..! என்னைக் கண்டதும் தன்னை மறந்த தவறு அது..! !

மோகனை நல்ல நண்பனென்று நம்பினேனே.. அந்த நம்பிக்கைதானே என் கண்களை மறைத்தது...

நேருக்கு நேர் அந்தத் தங்கப்பல்லும் அவன் சொல்லிய சொல்லும் உண்மையை உணர்த்தின..

மோகன்தான் உதய்..! ! ! !

என் திவாகரைக் கொன்றது மோகன்தான்..! கள்ளம் கபடமில்லாத திவாகர்..! ! !

எல்லாம் முடிந்து விட்டது..!

இதையெல்லாம் வெளியே சொல்லத்தான் நினைத்தேன்..! ஆதாரமில்லையே??

முதல் கேள்வியே உதய்யை நீ நேரில் பார்த்திருக்கியா என்பார்கள்..

என் பதில் இல்லை என்பதாகத்தானே இருக்கும்? நேரில் பார்ப்பதை விடுங்கள்.. போட்டாவில் கூடப் பார்த்ததில்லையே??

சட்டத்தின் பிடியில் மோகனை மாட்ட இயலாது..!

கன்னாபின்னாவென்று கத்தத் தோன்றியது..! இந்த விஷயம் அப்பாவுக்கோ அண்ணனுக்கோ தெரியவந்தால் வெட்டரிவாளுக்கு வேலை வைத்து விடுவார்கள்.. ஏற்கெனவே கணவரை இழந்து விட்ட எனக்கு அப்பாவையும் அண்ணனையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் பார்க்கிற திராணி இல்லை..!
வேண்டாம்..!

மோகனை என்னால் எதுவும் செய்ய இயலாது.. இருப்பினும் அவன் நோக்கத்தை சிதைக்க இயலும்..!

அவன் இருக்கும் வரை அவன் மோகித்த இந்த உடலுக்கு அலங்காரம் கிடையாது..! என் இயலாமையும் வெறுப்பும் என்னுடல் மீதே திரும்பியது..!

திவாகரின் விதவையாக வாழ்க்கையைத் தொடரப் போகிறேன்..! இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை..! !

திவாகர் வேறொரு பெண்ணை மணந்திருந்தால் இன்று அமோகமாக வாழ்ந்திருப்பார்..

என் மேல் தவறில்லை என்றாலும் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு..

மகனை இழந்த குடும்பத்துக்கு மகனாகவும், மருமகளாகவும் நான் வாழ வேண்டும்..! ! அந்தக் குடும்பத்தில் நான் வாழும்போதுதான் திவாகர் குற்றமற்றவர் என்று ஊர் நம்பும்..!

நான் இங்கு வந்து இறங்கியபோது என் கோலத்தைக் கண்ட மாமியார் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார்.. மாமனார் ஏதோ முணுமுணுத்து என்னை வெளியே போகச் சொன்னார்..

நான் போகவில்லை.. என் வீடு இதுதான் என்று காட்டினேன்.

இது என் தவக்கோலம்.. கெட்டதைச் சுட்டெரிக்கவும், நல்லதை தழைக்கச் செய்யவும்..!

சிந்தனை கலைந்தது..

சே..! என்ன இப்படி உட்கார்ந்து விட்டேன்??

திவாகரின் தங்கை மீராவுக்கு இது முதல் பிரசவம்.. அவளை பிறந்தகம் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.. ஏகப்பட்ட வேலை இருக்கிறதே??


***


மோகனின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

நாட்கள் நின்று விட்டன..

என் நாட்கள் நின்று விட்டன..! !

மூன்று வருடம் ஓடி விட்டது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்..

மஞ்சள் புடவையில் மயிலாக வந்த சரண்யாவோடு.. என் நாட்கள் நின்று விட்டன..! !

ஒரு முறை தவற விட்டால் வருத்தம் அவ்வளவாக வராது. இவ்வளவு முயற்சித்தும் இரண்டாம் முறை நூலிழையில் தவற விட்டால்...??

நாட்கள் செல்லச் செல்ல நிகழ்ச்சியின் தாக்கம் குறையும் என்பார்கள்..

எனக்குக் குறையவில்லை..! சரண்யா என்னைப் பார்த்து சிரித்தது நேற்று நடந்தது போலிருக்கிறது..!

விடு மச்சி..! ஒரு சரண்யா இல்லாட்டி ஒரு கவிதா என்கிறார்கள் நண்பர்கள்..

சரண்யாவோ கவிதாவோ பொருட்டல்ல.. இலக்கு முக்கியம்..! வெற்றி பெறுவது முக்கியம்..!

வெற்றி பெறுவதற்காக எந்தளவு ரிஸ்க் எடுத்திருக்கிறேன் தெரியுமா?

வெளியுலகுக்குத் தெரியாது..!

கொலை செய்திருக்கிறேன்... ! ! கொலை..!

சரண்யாவை மனதுக்குள் புதைத்துக் கொண்டு, வேலையுண்டு நானுண்டு என்று இருந்த நேரம்..

தேனிலவு கொண்டாட திவாகர் ஊட்டி வந்த செய்தி என் காரியதரிசி மூலம் என் காதுக்கு எட்டியது.. அவன் ஊட்டியில் தனியாக இரண்டு நாள் இருப்பான் என்று கேள்விப்பட்டபோது தான் திட்டம் தீட்டினேன்.. கொலைத் திட்டம்...! ! !

நான் ஊட்டிக்கே போனதில்லை என்று முகேஷிடம் சொன்னது பொய்.. என் விடலைப் பருவம் கழிந்தது ஊட்டியில்தான்..! ஊட்டியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி..!

என்னுடையது மேற்பார்வையாளர் பணி.. எந்தக் கிளையில் நானிருப்பேன் என்று யார் கவனிக்கப் போகிறார்கள்?? ஊட்டிக்கு வேலை விஷயமாக ராம்குஷ்கலை அனுப்பி விட்டு உதய்யாக ஹோட்டல் சிம்ப்பிள் டிம்ப்பிளுக்குப் போனேன்..

அந்த திவாகரை கரோலின் மாளிகைக்குத் தள்ளிக் கொண்டு போக, மானேஜருக்கு இருபதாயிரம் பணம் கொடுத்து வாயில் வந்தபடி திட்டச் சொன்னேன்..

புது இடத்தில் ஒரே மாதிரி சங்கடம் இருவருக்கு நேர்ந்தால் அந்த இருவரும் நண்பர்களாகி விடுவார்கள்..

திவாகர் கரோலின் மாளிகைக்கு வந்து விட்டான்..!

மனோ நோயாளியான அக்கா இறந்த பின்னும் அவள் சாப்பிட்ட பிராண்ட் மாத்திரை இன்னமும் கூரியரில் வந்து கொண்டிருந்தது. அந்த மாத்திரைகளைத்தான் திவாகருக்குக் கொடுத்தேன்..!

சூடான பாயாசத்தில் கூழாகிப் போன சேமியாவோடு இருபத்தெட்டு மாத்திரைகளை உட்கொண்ட திவாகர் சுவை மாறுபாட்டால் முகம் சுளித்தான்.. எனினும் நாகரிகம் கருதி நம்பி, அத்தனையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டபோது எனக்கே பரிதாபமாக இருந்தது...! !

சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் திவாகருக்கு உருவம் தெரிய ஆரம்பித்தது..! அது சரண்யாவின் உருவமாக இருந்தது..! மனைவியுடன் அவன் போட்ட ஆட்டமென்ன, பாட்டமென்ன ?? இதில் போட்டோ வேறு..! போட்டோவில் நான் விழாதிருக்க என்ன பிரயத்தனம் செய்தேன் தெரியுமா ?? அவன் அலைபேசியைப் பிடுங்கி விட்டு ஒரு செவ்வகக் கல்லை கையில் கொடுத்து விட்டேன்..!

மனதின் அடியாழத்து விஷயம்தானே உருவமாக வெளிப்படும்..?? திவாகருக்கு சரண்யாவின் மேல் இருந்த காதலை கண்முன் கண்டேன்.. என் நாடி நரம்பெல்லாம் எரிந்தது. அப்படியே அவன் கழுத்தை நெரிக்கலாம் போல இருந்தது..!

மருந்தின் தாக்கத்தால் போகப் போக பயங்கர உருவங்கள் தெரிய ஆரம்பிக்கும்.. எங்கு நோக்கினும் எதிர்மறை காட்சிகள் புலப்படும்.. ! உருவம் தோன்றிய நான்கு மணி நேரத்திலிருந்து எழுபத்திரெண்டு மணி நேரத்துக்குள் மன அழுத்தம் அதிகமாகி தற்கொலைக்கு முயல்வார்கள்.. திவாகரின் பிணத்தை பள்ளத்தாக்கில் எறிந்து விடும் எண்ணத்தோடு இருந்தேன்.. நரி நடமாடும் பள்ளத்தாக்கு.. எதுவும் மிஞ்சாது..!

படுபாவி நன்றாக ஆடிவிட்டு, ஆடிய களைப்பில் தூங்கி விட்டான்..!

நாற்பத்தெட்டு மணி நேரம் அறையில் வைத்து காவல் காத்தேன்..! அவனுக்கு மருந்து கொடுத்தது வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும், மருத்துவ உதவி கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவும்..! ! ! ! !

பிறகு என் காரில் அவனை வெளியே கொண்டு வந்தேன்.. விஸ்கியை வாயில் ஊற்றி, மெயின் ரோட்டில் தள்ளினேன்.. ஒரு சுற்று சுற்றி விட்டு மூன்றாம் மனிதனைப் போல் வாடகைக் கார் பிடித்து ஏற்றி அனுப்பினேன்.. யார் பேரில் புக் செய்வது?? இருக்கவே இருக்கிறது கம்பெனி..

திவாகரின் மரணச் செய்தியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன்.. ஆவலை அடக்குவதுதான் எத்தனை பெரிய கஷ்டம்..! ! இந்த பாலா பயல் தாமதமாகத்தான் விஷயத்தைச் சொன்னான்..

அதிர்ச்சியுற்றது போல அழகாக நடித்தேன்..!

சரண்யாவின் குடும்பம் அநேகமாகப் போலிசுக்குப் போக மாட்டார்கள்..

ஒரு வேளை போலிஸ் விவகாரமாகி விட்டால் என்ன செய்வது??

போலிஸ் கேட்டால் ஆமா சார்.. ரெண்டு பேர் வந்தாங்க.. ரூம் வரைக்கும் வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.. அதுல ஒருத்தர் செல்லுல ரூமுல தங்குன மாதிரி பீலா விட்டு பேசிட்டிருந்தாரு.. என்று லாண்டரிப் பையனிடம் சொல்லுமாறு சொல்லி வைத்திருந்தேன்..! அதற்கேற்றாற் போல் ஒரு ஜன்னலையும் திறந்து வைத்திருந்தேன்..!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போலிசுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள்..! என்னிடத்தில் பங்களா அறை சாவியிருப்பது போலிசுக்குத் தெரிய வராது..

பங்களா ஓனர் எங்கோ வெளிநாட்டில் இருப்பவர் நம்மூர் போலிசுக்கு உதவி செய்ய மாட்டார்.. அவரிடம் சாவி வாங்கி, பங்களாவைத் திறந்து அங்குள்ள கைரேகையையும் என் கைரேகையையும் ஒப்பிட்டுப் பார்த்து.. நடக்கிற காரியமா இது?

நான் நினைத்தபடி போலிஸ் விவகாரமாகவில்லை.. திவாகரின் பிணமும் எரிக்கப்பட்டு விட்டது..!

இந்த சரண்யா அங்கு போனது நான் எதிர்பாராதது.. ! அதையும் முளையில் கிள்ளி சமாளித்தேன்.. ! !

திவாகர் மோகனாக என்னைப் பார்த்ததில்லை.. சரண்யா உதய்யாக என்னைப் பார்த்ததில்லை.. நான்தான் உதய் என்று இந்த நிமிடம் வரை யாருக்கும் தெரியாது..! குறிப்பாக சரண்யாவுக்கு..! ! !

சரண்யாவுக்கு திவாகர் மேல் வெறுப்பு வரவேண்டுமென்பதற்காக அந்தப் பார்சலை அவள் கையில் சேரும்படி அனுப்பி வைத்தேன்..! அது ஒரு பிரயத்தனம்..!

சரண்யாவுக்கு என் கையெழுத்து தெரியும்..!

அந்த துண்டுச்சீட்டிலுள்ள எழுத்து ஒரு ஸ்டேஷனரி ஆளுடைய எழுத்து..! கையில் க்ரைம் நாவலை வைத்துக் கொண்டு பேனா வாங்கினேன்.. பேனா நன்றாக எழுதுகிறதா என்று கடைக்காரர் சில பெயர்களை எழுதி செக் செய்தார்.. ஒரு வாக்கியமாக எழுதுங்கள் என்றேன்.. க்ரைம் நாவலை வாசிப்பது போல அந்த வரிகளைச் சொன்னேன்.. அவரும் எழுதினார்.. சந்தேகம் வராதபடிக்கு அந்த துண்டுச்சீட்டை எடுத்துக் கொண்டேன்..!

கூரியர் பையன் கோயமுத்தூர் விலாசம் எழுதினான்..

நிச்சயதார்த்தமன்று முகேஷோடு என்ன பேசினோம் என்று நினைவில்லை..!

முகேஷ் மறுகல்யாணம் குறித்து என்னிடம் பேச வந்தபோது நன்றாக பிகு செய்து கொண்டேன்.. அவன் தவிப்பதை ரசித்தேன்.. அணு அணுவாக... ! !

இப்படி நாலாப்பறமும் வெற்றி, வெற்றியைத் தவிர ஒன்றுமில்லை என்று ஆர்ப்பரித்து வந்த என்னை, என் ஈகோவில் தடாலடியாய் அடித்து விட்டாள் சரண்யா..!

சரண்யாவின் மனதில் என்னதான் இருக்கிறது??

என் மேல் சந்தேகமா ?? – ஒரு போதுமில்லை..!

பழைய கட்டுப்பெட்டியா?? –

என்னை மணக்க தனக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறாளா ???

திவாகர் மேல் காதலா??

ஒரு மண்ணும் புரியவில்லை..

நான் தோற்று விட்டேன்.. ! ! ! !

அசிங்கமாக, பரிதாபமாகத் தோற்று விட்டேன்.. ! ! ! !

எனக்கு மனைவியாக வரத் தகுதி பெற்றவள் சரண்யா..! சரண்யா மட்டுமே..!

அவள் எனக்கு இல்லை..!

காமமும் அகங்காரமும் என் மனதை இரண்டு துண்டுகளாக்குகின்றன. ! !

தோற்றவன் வாழலாமா ? ? மேலும் நான் உயிரோடிருந்தால் நான் செய்த கொலையை நானே உளறி விடுவேன் போலிருக்கிறதே??

“சரண்யா என்னை மன்னித்து விடு ” என்று எழுதி, ஒரு கவரில் வைத்து கோயமுத்தூர் விலாசம் எழுதி கூரியரில் அனுப்பினேன். அக்காவின் மாத்திரைகளை ஒவ்வொன்றாகத் தண்ணீரோடு விழுங்கினேன்..!

எனக்குள் ஏதேதோ மாற்றங்கள்..! ! ! திவாகர் தெரிந்தான்.. “ டேய்..! போடா.. ! ! போடா.. ” அவனை விரட்டிக் கொண்டே ஓடினேன்..! ! !


***


பிணத்தைச் சுற்றி நின்ற போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் காவலாள் சொல்லிக் கொண்டிருந்தான்..

“ இதுதாங்க மோகன் ஐயா.. மொட்டைமாடியிலிருந்து கீழே குதிச்சிட்டாரு..! ”


...........................................

பின் குறிப்பு

மோகன் காலமானதை பாலா மூலம் கேள்விப்பட்ட சரண்யா வெள்ளைப் புடவையைக் களைந்து, சாதாரண புடவை உடுத்தினாள். சில மாதங்களுக்குப் பிறகு தன் மாமியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சின்ன மாமியாரின் மகனையே மறுமணம் செய்துகொண்டு திவாகரின் வீட்டிலேயே வாழ்வைத் தொடர்ந்தாள். அவள் எதற்கு திடீரென்று விதவைக் கோலம் பூண்டாள், எதற்கு அதைக் களைந்தாள் என்பது... யாருக்கும் தெரியவில்லை..!


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Aug-17, 10:59 am)
பார்வை : 285

மேலே