காலைப்பொழுதே வருக

காலைப்பொழுதே வருக !
கவிதை by : பூ.சுப்ரமணியன்


நம் இனிய
நினைவலைகளை
சூரியன் வந்து தன்
சுடர் விடும் விரல்களால்
தட்டி எழுப்புகிறான் !

காலைப்பொழுதே
கனிவுடன் வந்து
இனிய நிகழ்வுகளை
இதயத்தில் நிறுத்துவாய் !

புல்லின் நுனியில்
கிரீடம் சூடி மகிழும்
மார்கழிப் பனித்துளியே
மனம் குளிர வருவாய் !

மலரக் காத்திருக்கும்
மலர் மொட்டுக்களே
மொட்டவிழ்த்து
மணம் பரப்ப வருவாய் !

காலைப்பொழுதே
இன்று பொன்னாள்
என்று அனைவருக்கும்
நன்று சொல்லி
நின்று வரவேற்பாய்

இளம் சூரியனின்
வரவை சிறகடித்து
சிட்டுக் குருவிகளே
வரவேற்க வருவாய்

ஆடும் மயில்களே
பாடும் குயில்களே
துள்ளி ஓடும் மான்களே
துள்ளும் மீன்களே
காலைப்பொழுதை
வரவேற்க வாருங்கள் !

நாட்காட்டியில்
தேதி கிழிந்தாலும்
கிழியாவிட்டாலும்
கிழக்கில் ஆதவன்
வர மறப்பதில்லை !

காலைப்பொழுதே
கனிவுடன் வருக
இனியவை தருக !

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (1-Sep-17, 8:31 am)
பார்வை : 191

மேலே