ஒரு பார்வை ,
என்னை ஏற்பது போல
ஒரு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புதிதாக பிறக்கிறேன்
சிறு குழந்தையாக .....
என்னை மறுப்பது போல்
மறு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புரியாமல் இறக்கிறேன்
ஒரு புழுதியாக ....
நீ சிரிப்பது போல
முகம் காட்டினாய்
அந்தப் புன்னகையில்
என் ஆண்மை
பூப்பெய்தியது ....
நீ முறைப்பது போல
முகம் நீட்டினாய்
அந்த பாவத்தில்
என் ஆசையின்
மலர் கருகுகிறது ....
நீ பிடித்தது போல
எனைப் பார்க்கிறாய்
ஒரு பார்வை
எனக்குள் புதிதாக
சிட்டுக்குருவிகள் பறக்கின்றன ...
நீ பிடிக்காதது போல
விழி தாழ்த்துகிறாய்
மறு நொடி
சின்னச் சிட்டுக்குருவிகளின்
சிறகுகள் முறிகின்றன ...
தூரமாய் நின்றால் வாவென
அழைக்கிறது உன் விழிகள்
என் மனவானில் ஆசைகளின்
வானவில்லை தீட்டுகின்றாய் ...
அருகில் வந்துவிட்டால் போவென
சொல்கிறது உன் விழிகள்
விழிவரைந்த வானவில்லை
விழிகொண்டே அழிக்கின்றாய் ....
நீ எனக்காக புன்னகை
ஒன்றை பூத்தாய்
அந்தப் பூக்களைச் சேர்த்து
கனவின் தோட்டம் வளர்த்தேன் ....
நீ என்னிடம் பகை
ஒன்றை வளர்த்தாய்
அந்த தீக்கனலைச் சேர்த்து
நினைவின் காடுகள் எரித்தேன் ....
நீ என்னை உயிராக
ஒருகாலம் பார்த்தாய்
மங்கை மனம்தந்த
மல்லிகைப் பூவில்
மனம் கொண்டவளுக்கு
மாளிகை வைத்தேன் ....
நீ என்னை யாராவோக
ஒருநாள் பார்த்தாய்
மனம் கட்டிய
மணல் வீட்டை
மனத்திடமே
அழிக்கச்சொன்னாய்....!
இதயத்தில் மணல் வீட்டை கட்டிய மனங்களும்
இயல்பாய் இறகு உதிர்த்து நடந்த மயில்களும்
இயற்கையாய் கொண்ட காதல் கானகம் உலகம் ...!
யாழினி வளன்
எழுத்து தளத்தில் இது எனது நூறாவது கவிதை என்பதில் பெருமகிழ்ச்சி என் சிறு எழுத்துக்களுக்கு :) கவியோடு எப்போதும் கைகோர்க்கும் நட்பு வட்டத்துக்கு என் நன்றி ...