சிக்காத நிலவு
 
            	    
                வானத்து நிலவினை 
வலை வீசி பிடித்து 
தாலாட்டி வைத்திடும் 
காட்சியிது அழகு..!
தூங்காத நிலவினை 
தூளியிலே ஆட்டிவிட்டு 
சிணுங்கிடும் மரத்தின் 
சிங்காரம் அழகு..!
கண்ணுறக்கம் மறந்து 
மின்னுகின்ற நிலவை 
கையிரண்டில் ஏந்திக்கொள்ள 
தாவுது கிளைகள் ..!
எட்டாத கரத்தினில்
சிக்கவில்லை நிலவு 
சிக்காத கோபத்தில் 
கிளைகளின் முனகல்..!
அந்தி வந்த நிலவை 
சிறை பிடிக்குது இரவும் 
மஞ்சள் வெயில் வரவில் 
வழியனுப்பிடும் பகலும்..!
எவர் வலை விரிக்க 
சிக்குமிந்த நிலவு - நித்தம் 
ஏய்ப்பதில்தானே 
வரும் பகலிரவு..!
#சொ. சாந்தி 
(மீள் பதிவு - வாங்க பேசலாம் குழுமத்திற்காக படம் 
பார்த்து எழுதிய கவிதை - குழுமத்தாருக்கு என் நன்றிகள்)
	    
                
