நனைந்த இறகு

மழையின் கடைசித் துளிவரை
நனைந்த இறகொன்று
பறக்க முடியாமல்
திணறுவதுபோல்
அவளென்னும் அந்த
அழகிய முதல்காதல்,
மற்ற காதலின் இறகுகளை
நனைக்கும் மழைதுளியாய்


என்று, என்று?
இறந்த காலத்தின் வரைபடத்தில்
குண்டூசிகளால் குறித்து விடமுடியாது,
கண்களுக்கு காமம்
பழகாத காலத்திலேயே
உன்னை பார்ப்பது,
வானத்தில் பறக்கும்
நிகழ்வாகிப் போனது


நீ கட்டி வந்த
பச்சை சிவப்பு
பாவாடை தாவணியை
இன்னும் எந்த
மழையிலும் நனையாமல்
மனக்கொடியில் பத்திரமாய்
தொங்க வைத்திருக்கிறேன்


வைரமுத்து கவிதைகள்
சிறுவர்மலர் காகிதங்கள்
என்று முன்பே அழகானவள்
உன்னை இன்னும்
அலங்கரிக்க கவிதைகள்
தேடி அலைந்த
பசும்பால் வாசனைகள்
பலமுறை என் மாலைத் தேநீரில்


இருண்ட ஒரு மழைநாளில்
அழைத்து செல்ல யாருமின்றி
பள்ளிக் கதவருகே
நீ காத்திருக்க
அந்த காட்சியை
நான் வாங்கிய அனைத்து
கடிகாரங்களும் ஒருமுறையாவது
எட்டிப் பார்க்கும்


நாய்களுக்கு பயந்து,
குட்டிப் பூனைகளிடம்
நீ காதல் கொண்டு
கொட்டாச்சிகளில்
கொல்லையில் வளர்த்த
மின்மினிகளின்
ஜீவ காருண்ய ரகசியங்களை
என் மூளையின் தனியார்க்
கடற்கறை மணல் தவிர
வேறு யாருமே அறிந்ததில்லை


என் உலக வரலாற்றில்
சுடிதார் என்னும் புரட்சி,
நீ தும்பி பிடித்த தினத்திலிருந்துதான்
துவங்குகிறது

எனக்குள் இருக்கும் முதல்
பெண்ணுரிமையின் சீம்பால்
நீ ஒட்டிய சைக்கிதான்


உன்னையும் ரோஜாக்களின்
ஒவ்வொரு இதழ்களையும்
ரசித்த நல்ல கவிஞன்போல்
காதலித்தவன் உண்டு
உனக்குத் தெரியும்
நீயும் மறந்திருப்பாய்

நீ இப்போது எப்படி இருப்பாய்
என்பது பற்றி கேள்வியுண்டு
கவலைகள் இல்லை

காலம் பல முறை
உன் சமகாலத்தை
கோவில் மணியில் கட்டி
ஊர்க்கு சொல்ல,
நான் காதுகளை மூடி
கடலுக்குள் முங்கிப்போனேன்

எனக்கு பிடித்த
உன் நினைவுகளை
அப்படியே வைத்திருக்கும்
அவசியங்கள் எனக்குண்டு
அது என்னை அப்படியே
வைத்திருக்க உதவி
செய்யும் என்பதனால்


நம் காதல் வெற்றியடைந்திருக்கலாம்,
ஆனால் எல்லா யானைகளும்
தந்தத்தோடு புதைக்கப்படுவதில்லை

எழுதியவர் : விக்ரம் (5-Sep-17, 4:56 pm)
சேர்த்தது : Vikram S
Tanglish : nanaintha iragu
பார்வை : 120

மேலே