உன் மீதான என் பிரியங்கள்
உன் மீதான என் பிரியங்கள் எத்தகையது தெரியுமா என்றேன்..
முன்காலை பொழுதில் நான் தூங்கியெழும் போது எனக்காக வெந்நீர் சுட வைத்து குளிப்பதற்க்கு ஏதுவாய் தயார்படுத்தி வைத்திருப்பாயே அதுதானே என்றாள்..
அடுப்பில் தீ பற்ற வைத்து நானே விறகாய் எரிந்திருந்தாலும் உன் தியாகங்களுக்கு ஈடினை முடியாது என்பதால் இல்லை என்றேன்.
பட்டுப்புடவை கட்டும் போது மண்டியிட்டு மடிப்பு எடுத்து விட்டு குறுக்கு வலித்தாலும் புன்னகை செய்வாயே அதுதானே என்றாள்..
இதுவரை உனக்காக மாடி படியேறி மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு பிட்டு பட்டு துணியையும் வாங்கி தந்ததில்லையே என்ற குற்றஉணர்வு தடுத்ததால் அதுவும் இல்லையென்றேன்.
சாப்பிடும் போது கடைசி கவள உணவை எனக்கு ஊட்டி விடுவாயே அதுதானே என்றாள்..
நானே சம்பாதித்து நானே என் கையால் சமைத்து ஒரே தட்டில் ஒரு பருக்கை சோறு கூட ஊட்டியதில்லையே என்ற வைராக்கியத்தில் இல்லவே இல்லை என்றேன்..
வெளியிடங்களுக்கு செல்லும் போதெல்லாம் நான் கேட்டதையெல்லாம் மனம் கோணாமல் வாங்கி தருவாயே அதுதானே என்றாள்..
உனக்காக நீ கேளாமல் எந்த விலையுயர்ந்த பரிசு பொருளையும் வாங்கி கொடுக்குமளவு என்னிடம் பணம் இல்லாததிருந்ததை நினைத்து அது இல்லையே என்றேன்.
நான் இறந்து விட்டால் நீங்க யாரையாச்சு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றதற்க்கு மாட்டேன்னு சொன்னீங்களே அதுதானே என்றாள்.
இருவரும் ஒன்றாய் இறந்து மீண்டும் இறைவனிடத்து ஒன்றாய் உயிர்தெழும் காலம் சமீபத்தில் இல்லையே என இல்லை என்றேன்.
எப்போதாச்சு என் குழந்தை உன் குழந்தை என பிரித்து சொல்லும் போது,நீயோ எப்போதுமே நம் புள்ளையென அழுத்தி சொல்லி அன்பை உணர்த்துவாயே அதுதானே என்றாள்.
நீ நான் இருவரும் தனிதனியாய் பிறரிடம் பேசும்போது என் பிள்ளையென்று சொந்தம் கொண்டாவதால் அதுவும் இல்லையென்றேன்..
நான் சண்டையிட்டு கடினமான வார்த்தைகளை பேசும் போது அமைதியாய் கடந்து விட்டு,
சில மணி நேரத்திலேயே உன்னோடு சண்டையிட்டதற்கான அறிகுறி ஏதுமின்றி பேசும் போது,கோபப்படாமல் பேசுவாயே அதுதானே என்றாள்.
நாமிருவரும் வார்த்தைகளால் காயப்படுத்தி கொண்டாலும்,மனசால் காயப்படுத்தி கொண்டதில்லையே என்பதால் அதுவுமில்லையென்றேன்..
போடா நான் எதை சொன்னாலும் இல்லை என்கிறாய்.
நீயே சொல்லி விடு என மௌனமாய் புன்னகைத்தாள்..
என் கடந்த காலமும் நிகழ்காலமும் தெரிந்தவள் நீ ஒருத்தி மட்டுமே என்றேன்..
என்னை விட என்னை நேசிக்கும் உயிர் நீ மட்டும்தான் என்றேன்.
என் இரண்டாம் தாய் மடி நீ மட்டுமே என்றேன்.
என் முதல் குழந்தையும் நீ மட்டுமே என்றேன்.
இது ஒற்றை பதில்தான் ஆனாலும் இதற்குள் ஓராயிரம் புரிதல்கள் கொட்டி கிடக்கிறது என்பதை இருவரும் அறிவோம்.
உன் மீதான என் பேரன்பின் பிரியங்களை இன்னும் எப்படி சொல்வேனோ ...