சிறு எறும்பென இங்கு எழும் இளைஞர் கூட்டம்

இரும்புப் பெண்மணி இல்லாத தமிழகம்
துரும்பு துகளென ஆகிப் போனதோ

இருப்புக் கொள்ளாமல் தவிக்குது நெஞ்சம்
செருப்பு ஏந்தி போராடும் தமிழ் விவசாயி

சத்தியம் பேசிய வளர்மதியும் திருமுருகனும்
சட்டென்று சிறைக்குள் உண்மைகள் உறங்கிட

கதிராமங்கலம் என்ற ஒரு ஊரின் ஆற்றாமையின்
கதறல்கள் கேட்கப்படாமலே திறக்கப்படாத கதவுகள்

அம்மையாரின் தொண்டன் நான் இல்லை என்றாலும் சொல்ல வேண்டும்
அவரில்லாமல் தமிழகம் தகப்பன் இல்லாத வீடுபோல ஆகிப்போனதோ

நீட் எனும் கொடு விரல் நீட்டும் அராஜக அரசால்
போட்டு கசக்கப்படுகிறது என் மாணவனின் கனவுகள்

கோர்ட் படியேறும் அப்பாவிகளின் உயிர் குடித்து
மறுக்கப்படுகிறது என் மண்ணின் உரிமைகள்

விருப்பு என்று ஓன்று பிலகேட்ஸுக்கும் பீகாம்பரத்துக்கும்
இருப்பவனுக்கு இல்லாதவனுக்கும் ஓன்று உண்டடா

மறுப்பு சொல்லாமல் அவையில் மண்டையை ஆட்டும்
எம்.பி கூட்டம்போல நாங்கள் என்ன மந்தைக் கூட்டமா

வெறுப்பு கொண்ட மனங்கள் மெல்ல எழும்புதடா
கருப்பு கொடிகள் மெல்ல இந்த கைகள் ஏந்துதடா

சிறு எறும்பென சில காவிகளின் கண்கள் தான் நினைக்குதோ
சிறுதூசி ஒன்றும் சில பாவிகளின் கண்கள் கீறும் நேரம்டா

சிறு புல்லென பிடிங்கி எறியப்படும் சில அப்பாவி உயிர்கள்
பெரும் புயலைக் கிளப்பி பறக்கின்றன உரிமையின் கொடிகள்

சிறு எறும்பென இங்கு எழும் இளைஞர் கூட்டம் சொல்கிறது
ஒரு கரும்பென இனிப்பான எதிர்காலம் இனி உண்டென்று

சிரிப்பு மலரட்டும் தமிழ் மண்ணில்
உவர்ப்பு மறையட்டும் எம் கண்ணீரில்
சிந்தை துளிர்க்கட்டும் நம் மனதில்
சிறப்பு காணட்டும் இனி தமிழகம்

எழுதியவர் : யாழினி வளன் (6-Sep-17, 8:20 pm)
பார்வை : 950

மேலே