காதல் மங்கை

காதலாம் மங்கையே எனைவிட்டுச் சென்றாய்
மோதலாய் நெஞ்சிலே முழுதாகி நின்றாய்
நீயிலா நேரமோர் நெருப்பிடை புல்லாய்த்
தீயிலே வேகிறேன் திசைதேடித் தீர்த்தேன்
நெஞ்சில் உன்னுலா நினைவில் உன்கனா
மஞ்சக் கனவிலும் மனத்தில் உன்நிலா
காதலாம் தேவியே பிழையெது கண்டாய் ?
சாதலைத் தந்துநீ சமர்த்தாய் நகர்ந்தாய் !
எனக்குள்
உனகாய் ஒதுக்கிய இடம்பற் றாமல்
மனம்வெதுப் புற்று பிரிந்துவிட் டாயோ ?
ஆதர வதிகம் அடைந்தது தவறா ?
நீதான் உலகென் றிருந்தது பிழையோ ?
நீயாய் வந்தாய் நிழலாய் நின்றாய்
தாயாய்த் தாங்கித் தயக்கம் தீர்த்தாய் !
மாயா யின்பம் மனத்தில் காட்டி
நோயாய்த் திரிந்தாய் இவையேன் சொல்வாய் !
காதலில் தெளிதல் கடவுளர்க் கெளிதோ ?
கவிஞன் என்பதால் கணக்கிட விலையோ ?
எனைவிடு.....,
மல்லிகை மீது வண்டுறும் காமம்
அல்லியின் மீது அம்புலிக் காமம்
சூரியன் மீது தாமரைக் காமம்
வாரிதி நீர்மேல் முகில்கொளும் காமம்
இவையே காதல் இனத்தவை என்றால்
நங்கையும் ஆணும் நல்லுளம் நயந்து
தங்களை இழந்து தரணியை மறந்து
ஆனந்தக் கனவிலே அப்பாலுக் கேகும்
தேனந்தப் போழ்துகள் தேவையற் றவையா ?

இதுகேள் !
காதலாம் ராணியே கருணையில் லாமல்
நீதடு மாறிடும் நிலைகொள் வதுவோ ?
மண்ணில் காதலர் மகிழ்வைப் போக்கவும்
புண்ணாய் அவர்மேல் பூழ்தி அடிக்கவும்
ஈரம் உறிஞ்சி இனிமை பறித்துச்
சாரம் அறுக்கும் சாகசம் நிகழ்த்தவும்
கோடி ஆயுதங்கள் கொண்டிவண் ஏகினும்
ஏடிநீ அவற்றை எதிர்த்திடல் வேண்டுதும் !
காதலாம் சேவகீ ! கடமை அறிவாய் !
ஆதலால் நின்னை அன்பொடு குலவி
ஆயிரங் கோடி அரும்புமுத் திட்டுத்
தாயெனப் போற்றித் தவிப்பவன் கேட்பேன்
சொன்னவை மறவா நிலையில்
நின்று காதலரை நிலைகொளச் செய்யே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:21 pm)
பார்வை : 122

மேலே