அந்திமகள்

அந்திமகள் தந்தவொளி அற்புதமாய் வந்தவொளி
. அத்தனையும் முத்துவடம் கோக்குதே - என்
சிந்தனையில் சந்தவொலி சீவனுளே மந்திரமாய்ச்
. சித்திரமாய்த் தத்திவந்து பூக்குதே !

தென்னையிலும் மஞ்சளொளி திண்ணையிலும் வந்துநடம்
. தந்திடுஞ்ச லங்கையொலி கேட்குதே - அதன்
முன்னிலையில் பின்னெழிலில் சந்தமெழும் விந்தைதனில்
. முத்துக்கவி பொத்துவரப் பார்க்குதே !!

வெண்ணிலவோ வானமதில் வந்துவிளை யாடுவதில்
. வெந்தமனம் தண்ணொளியைக் காணுதே - இசைப்
பண்ணெனவே செந்திலவன் பாட்டினொலிக் கூட்டமுதம்
. பத்திரமாய் வந்துசெவி ஏறுதே !!

கம்பனவன் சிந்துகவி முந்தியென தண்மையிலே
. கந்துகமெ ரிந்துவிளை யாடுதே ! - அதில்
செம்புலமைப் பாட்டுநதி சேர்ந்துவிழ லானதடி
. செய்தயிள முள்ளமிதைப் பாடுதே !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:47 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 54

மேலே