ஆராதனை

உயிரெங்கும் புரியாத ரணவேதனை - என்
. ஊமைக் கவியுனக்கு ஆராதனை !
கயிறாய் இழுக்குமுன் எழிலாடலே - அதில்
. கனிந்தாடும் பலகோடி இசைப்பாடலே !

நமக்கொரு புதுதேசம் நான் காண்கிறேன் - அதில்
. நாளெலாம் மனப்பூக்கள் நான் வைக்கிறேன் !
இமையாடும் கணம்தன்னில் விழி கீறியே - என்
. இதயத்தைக் களவாடும் களவாணியே !

நீ போடும் சத்தங்கள் இசையாகவே - என்
. நிழலெங்கும் உன்தோற்ற அசைவாகவே !
சீ! போ எனும் சொல்லும் கவியாகவே - உன்
. சிறுகால்கள் நான்வாழும் புவியாகவே !

பூவொன்று கண்டாலும் உன்கைகளே - பெரும்
. புயலொன்றில் நின்றாலும் உன்சிந்தையே !
நீ வென்று நான் வென்று நாமாகவே - உயிர்
. நீட்டங்கள் நீசெய்யும் செயலாகவே !

காதலாம் உலகத்தில் சூரியன்நீ - ஒளிக்
. கடன்வாங்கி உறவாடும் நிலவாகநான் !
நீ தரும் சொல்லென்றும் புது சோதனை - என்
. நினைவெங்கும் உனக்கான ஆராதனை !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:58 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே