இரட்டை நாக பந்தம்

ஒரு நேரிசை வெண்பாவும் ஒரு இன்னிசை வெண்பாவும் புதைந்து கிடப்பது இந்த இரட்டை நாக பந்தம் !

நேரிசை வெண்பா : (சைவம்)

ஈசனடி யாக வணிய வுலவியே
மாசுறு தீவிடந் தொட்டபடி - தேசுறும்
பாம்பே சிவனி னடியாள் மனையினுள்
போம்பணி யாஞ்சிந்தை போக்கு !

இன்னிசை வெண்பா : (வைணவம்)

வாசவனச் சின்னகை தேடிநாட கஞ்செய்து
நாசம்பட் டஞ்சி வுயிரடக் கும்நாக!
மேனி புனல ரியடியார் சேரிடம்
மான வபயம்நீ போற்று !

பொருள் :
நேரிசை வெண்பா :

ஈசனின் திருவடியில் ஓரங்கமாக ஆக, அவர் எடுத்து அணிய அவர் தோள்களில் உலவியபடியே, மாசு நிறைந்த அவர் கழுத்தின் தீய விடத்தினைத் தொட்டு உரசியபடி மின்னிக்கொண்டு இருக்கும் பாம்பே !

சிவனின் திருவடி ஆள்கின்ற (அல்லது) சிவனின் அடியாள்(ர்) வாழ்கின்ற மனையினும் நீ போகும் படியாக எந்தப் பணி இருந்தாலும் அந்த சிந்தனையை உடனே போக்கு !

(சிவனடியாரை மறந்தும் தீண்டிவிடாதே என்பது சொல்லவந்த முடிபு !)

இன்னிசை வெண்பா :

வாசவன் (திருமால்), அவனின் சின்ன கை உன் வாலைப் படிக்க எண்ணி அதைத் தேடி யமுனை நதிக்கரையில் பதுங்கி அவர் வந்ததும் நாடகம் செய்து அவரால் நாசப் பட்டு அஞ்சி உயிரை அடக்கிக் கொண்டு வாழ்ந்த நாகமே !

மேனியைப் புனல் போன்று குளிர்ச்சியாகக் கொண்ட அரியின் (திருமாலின்) அடியார்கள் சேர்கின்ற இடத்தில் நீயே மான(பெரிய) அபயம்(காப்பரண்) ஆகி அவர்களைப் போற்று !

(மாலடியாரைக் கண்ணகைக் காத்தது போலக் காத்தருள்வாய் என்பது சொல்லவந்த முடிபு)

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 9:14 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 161

மேலே