வரப்போகுது

(இங்கு தம்பி எனக் குறிப்பது மனத்தையுமாம்)

மழைவரப் போகுது தம்பி - நீ
. மகிழ்ந்து குதித்திடு எம்பி
அழைத்திடும் போதினில் எல்லாம் - இது
. அவதரிப்பதும் இல்லை !

மேகம் கருத்திடல் ஆச்சு - மயில்
. மேனி சிலிர்த்திடல் ஆச்சு !
தாகம் தணிந்திட வேண்டும் - வந்து
. தண்ணீர் மழையினில் ஆடு !

மின்னல் அடிக்குது மேலே - நீ
. மிரளக் கூடாது கீழே !
ஜன்னல் நெருங்குது காற்று - வான்
. சாற்றிடும் கருமையின் பூச்சு !

வேக இடிவரும் வேளை - அதை
. வேதனை என்பவன் கோழை !
ராகம் அதுவெனச் சொல்லி - தினம்
. ரசிப்பதே நம் வேலை !

ஆடிக் குதித்திடு தம்பி - மழை
. அம்பிகை தந்தது தம்பி !
பாடிப் பரவசம் கொள்ளு - வரும்
. பயத்தை எட்டிநீ தள்ளு !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 9:16 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : varappOkuthu
பார்வை : 62

மேலே