நிழலாகும் நிஜங்கள்

நிழலாகும் நிஜங்கள் ( சிறு கதை )
***********************

​அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுரேஷ் காலையில் லேட்டாகத்தான் எழுந்தான் . ​அனிதா ​சமையலறையில் வேலையாக இருந்தாள். காபி என்று ஏதோ ஹோட்டலில் ஆர்டர் கொடுப்பது போல சத்தமாக கூறிவிட்டு பல் துலக்கத் தொடங்கினான். பிறகு வெளியில் சென்று வேடிக்கைப் பார்த்தான் ..சிலருக்கு அந்த பழக்கம் உண்டு ...வாயில் பிரஷை வைத்துக்கொண்டே வெளியில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பது...அது ஏனோ ? . அனைவரும் அறிந்திடவா ?? தெரியவில்லை. அப்போதுதான் பக்கத்து வீட்டில் சிறுவர்கள் சிலர் உரக்க பேசிக்கொண்டே விளையாடியதை கவனித்தான் . அந்த கூட்டத்தில் அவன் மகன் பிரபுவும் இருந்தான் . பிறகு காபி குடித்துவிட்டு அன்றைய நாளிதழை புரட்டத் தொடங்கினான் . அன்று முதல் பக்கத்தில் அனிதா மரணம் குறித்தும் , அதன் விளைவாக எழுந்த போராட்டங்கள் குறித்தும் , பலர் தங்களது ஆதங்கங்களை எதிர்ப்புகளை அறிக்கையாக வெளியிட்டமையும் , சில புகைப்படங்களும் கண்ணில் பட்டது . ஒரு நிமிடம் சுரேஷ் அந்த புகைப்படங்களை பார்த்ததும் முகம் மாறியது தெரிந்தது . கண்கள் கலங்கின . அனிதாவின் முடிவும் மக்களின் எழுச்சியும் அவனை மிகவும் சோகமாக்கியது . அதற்கு முதல் காரணம் மனிதாபிமானம் . மற்றொன்று தன் மகன் பிரபுவை எப்படியாவது டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற வேட்கை அவன் மனதில் ஆழமாக இருந்ததும் . ஆனால் அவன் மகன் மாநில பாடத்திட்டம் கொண்ட ( STATE BOARD ) பள்ளியில் படிக்கிறான். அவன் ஒரு நடுத்தரக் வர்க்கத்தை சேர்ந்தவன் தான் . பிறகு நிமிர்ந்து பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகனை பார்த்தான் . நேராக பேப்பரை மடித்து வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று அனிதாவிடம் கேட்டான் . அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை படித்தாயா ...அவ்வளவு மார்க் வாங்கியும் பாவம் , நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் அநியாயமாக இறந்து விட்டாள் . அவளை போலவே இன்னும் எத்தனைபேர் கனவு கண்டிருப்பார்கள் ..அவர்களின் நிலை என்னவாகும் ..மிகவும் வருத்தமாக இருக்கிறது அனிதா. அவர்கள் கிராமமே அழுகிறது இன்று அவளின் முடிவால் ...எனக்கு என்னவோ போல இருக்கிறது என்று மிகவும் மெல்லிய குரலில் கூறினான் . அதிலிருந்தே அவன் எந்த அளவு பாதித்துள்ளான் என்று அனிதா புரிந்து கொண்டு ...சரி சரி ...விடுங்கள் .அந்தப் பெண்ணின் தலையெழுத்து அவ்வளவுதான் என்று அவனை தேற்றும் விதத்தில் பேசினாள் .

என்ன அனிதா ...இதைப்போய் தலையெழுத்து என்று கூறுகிறாய் ? அரசாங்கங்களும் நீதிமன்றமும் சேர்ந்து மாற்றிய விதிகளும் , வழிமுறையுமே காரணம் . இவ்வளவு வருடங்கள் இப்படித்தான் நடந்ததா ? சட்ட விதிகளை மாற்றியதன் விளைவுதான் இது ...இதில் தலையெழுத்து என்பது எங்கு வருகிறது ..நம் நாடு மற்றொரு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை இழந்துவிட்டது . வருங்கால சிறந்த மருத்துவரை இழந்துவிட்டது இந்த சமுதாயம் ...அதுதான் உண்மை . தலையெழுத்து என்ற இல்லாத எழுத்தை , காணாத மொழியை , வகுக்காத விதியை பற்றி இன்றும் பேசுவது மூடத்தனம் , போலி சமாதானம் , பகுத்தறிவில்லாப் பார்வை அனிதா . எதிர்காலத்தில் நமது மகனும் இதே நீட் தேர்வை சந்திக்க வேண்டும் . அதற்குள் இன்னும் என்னென்ன விதிகள் மாறுமோ , முறைகள் மாற்றப்படுமோ , கட்டுப்பாடுகள் வருமோ தெரியவில்லை. காரணம் அரசின் கொள்கைகள் எப்படி வேண்டுமானாலும் மாற்றப்படும் அவர்களின் வசதிக்கேற்ப ...விருப்பத்திற்கேற்ப ...சுயநல எண்ணத்திற்கேற்ப . நினைத்துப்பார் . நமது கல்வித்திட்ட முறையில் படித்து உலகப் புகழ் பெற்ற தலைசிறந்த டாக்டர்கள் இருந்தார்கள் ...இன்னும் இருக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் . பலரை உதாரணம் கூறலாம் . அண்டை மாநிலங்களில் இருந்தும் , ஏன் , வெளிநாடுகளில் வாழ்பர்கள் கூட நம் மருத்துவர்களை நம்பி இன்னும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் . அடிக்கடி நாளிதழ்களில் , தொலைக்காட்சியில் பார்க்கிறோமே ... அவர்கள் எல்லாம் நீட் எழுதியா தேர்வு பெற்று சிறந்து விளங்குகிறார்கள் ...நினைத்துப்பார் .

சுரேஷ் ஆவேசமாக பேசியதை கண்ட அனிதா வெலவெலத்துப் போனாலும் அமைதியாக இருந்தாள் . அவனின் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதும் நீதி இருப்பதும் அவளுக்கு தெளிவாகவே புரிந்தது . அவனது கையைப் பற்றி நீங்கள் சொல்வதும் உண்மைதான் ...ஒப்புக்கொள்கிறேன் . இனி கிராமத்து பிள்ளைகளும் ,ஏன் ..நம்மைப்போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எந்த பிள்ளையும் மருத்துவர் ஆவது என்பதே வெறும் கனவாகிவிடுமோ ...பயமாக உள்ளது சுரேஷ் என்றாள் மிகவும் வருத்தத்துடன் . இதற்கு என்னதான் வழி சுரேஷ் ...என்று அவனையே கேட்டாள் . அனைத்து தவறுகளையும் நாமே செய்து கொண்டு இல்லாத தலையெழுத்து என்றெல்லாம் இனியும் பேசுவது முட்டாள்தனமானது .சிந்திக்க வேண்டும் ..ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் . எதிர்த்துப் போராடும் துணிவுடன் வாழ வேண்டும் . நியாயமான , நிலையான தீர்வு கிடைக்க பாடுபட வேண்டும் . நமது உணர்வுகளை எந்த ஒரு அரசாங்கமும் புரிந்து கொண்டு செயல்பட வைக்க வேண்டும் . காசுக்காக , மதத்திற்காக , சாதிக்காக ஒட்டுப் போடுவதை நிறுத்த வேண்டும் . நமது கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல திட்டங்களை வகுத்து நமக்கு நன்மை செய்பவர்களும் , சமுதாயம் தழைக்க வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்களுமே நம்மை ஆள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் அனைவரும் என்று கர்ஜித்தான். விக்கித்து போன அனிதா அவனையே பார்த்து கொண்டிருந்தாள் . அவனது பேச்சு அவளை மிகவும் சிந்திக்க வைத்தது . ஒரு நிமிடம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது .

அந்த நேரம் பார்த்து விளையாடிக் கொண்டிருந்த பிரபு ஓடி வந்தான் . அம்மாவை கட்டிப் பிடித்து சிரித்தான் . அனிதா ஏன் இவ்வளவு வேகமாக வந்தாய் ..என்ன செய்து கொண்டிருந்தாய் ..என்று கேட்டவுடன் ...அவன் உடனே அம்மா நான் டாக்டராகி விட்டேன் என்றான் சத்தமாக . அவளுக்கு ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் என்று ஆச்சரியமாக கேட்டாள் . இல்லைம்மா , எங்கள் விளையாட்டில் நான் டாக்டராக இருந்து நோயாளிகளை பார்ப்பது போல விளையாடினோம் என்றதும் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் . அவனது அடிமனதில் ஆழமாக பதிந்துள்ள ஆசையை , டாகடர் ஆக வேண்டும் எண்ணம் இருப்பதை உணர்ந்து கொண்டு அவனை வியப்புடன் பார்த்தார்கள் .

இதைப் போல எத்தனை பிரபுக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.
அரசாங்கங்கள் சிந்திக்குமா...மக்களுக்காக அரசா.. அரசுக்காக மக்களா... சமுதாயம் வாழ்வதற்குத் தானே ஆட்சியும் அரசாங்கமும்... இனி எத்தனை அனிதாக்களை பறிகொடுப்போம்... அந்த நிலையே வரக்கூடாது.
இன்று உலக அரங்கில் எல்லா துறைகளிலும் தமிழர்கள் அல்லவா உயர்ந்த நிலையில் இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் நடப்பதை பார்த்தால் தலைகீழாக மாறும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

வருங்கால தமிழ் சமுதாயத்தை எண்ணிப் பார்க்கும் போது கவலையே கூடுகிறது. சிந்தித்து செயல்படுவது இனியாவது நமக்கு நல்லது .

Dr. அனிதாவிற்கு அஞ்சலி.

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Sep-17, 11:49 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 313

மேலே