உயிரில் தீதானே-இசைப்பாடல்

வானம் குடையாய் ஆகாதோ -என்
அருகில் நீ வந்தால் ...
விண்மீன் நிலவாய் மாறாதோ -ஒரு
முத்தம் நீ தந்தால் ...

(வானம்)

கனவுகளில் உன்னுருவம்
கவிதை மழையைத் தூவுதடி
இரவுபகல் எப்பொழுதும்
இதயம் உன்னைத் தேடுதடி

வெயிலெரியும் பாலையிலே
மழையாய் வருவாயா
புதிர்போடும் தேர்வுகளில்
விடையாய் வருவாயா
உன் நினைவுகளோடு
தனியாய் போனால்
நிழலாய் தொடர்வாயா ...

(வானம்)

மலர்களிலே பனித்துளிகள்
உந்தன் விழிபோல் தோணுதடி
பறவைகளின் குரல்களிலே
உந்தன் பெயரே கேட்குதடி

துயிலெழுந்தால் முதல்நினைவாய்
வருவதும் நீதானே
தொடர்ந்துவரும் நினைவலைகள்
தருவதும் நீதானே
நீ ஒருநாள் பேச
மறந்தேபோனால்
உயிரில் தீதானே ...

(வானம்)

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (9-Sep-17, 8:02 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 121

மேலே