நண்பனே நண்பனே நண்பனே

நண்பனே! நண்பனே! நண்பனே!
=======================================ருத்ரா

பெண்ணியத்தின் உரிமைக்குரல் இது.
அது என்ன பெண்ணியம்?
பெருங்கடலில்
துளியைத்தேடினால்
அவளே தனி யொரு பெண்!
அவள் கடல் அலைகளின்
மூச்சாக நிற்கும்போது
ஓ! ஆண் தோழனே
உன் காதல் பீலிகளைக்கொண்டு
அவளை வருடிக்கொடுப்பதைக்காட்டிலும்
அவள் இதயச்சிமிழுக்குள்
உதிக்கும் ஓராயிரம் சூரியன்களுக்கு
முடிந்தால்
நீயும் உன் சிந்தனைகீற்றுகளை
தழல் பூத்துக்கொடு!
பத்தாம் பசலியாய்
"தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" என‌
ஒரு ஈசிச்சேர் கூட்டுக்குள்
அடைந்து கொள்ளாதே.
வள்ளுவர் சொன்ன உயர்வு நவிற்சி அணியை
உன் சமுதாய முக மூடி ஆக்கிக்கொள்ளாதே.
உனக்கு பருப்பு சாம்பாரும்
கறிக்குழம்பும் அவள் சமைப்பது இருக்கட்டும்!
சமுதாய எரிமலைக்குழம்பைக்கூட‌
அவள் அநாயசமாய்
சமைக்கத்தொடங்கிவிட்ட்டாள்
என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறாய்?
உனக்கு அருகம்புல் மீசை
வரும்போது தான்
அவளும் "சமைந்து" நின்றாள்.
ஆம்..
மூளியாய் கிடக்கும் இந்த‌
மண்ணுக்கு
விழியின் இமையுரிக்க‌
அவளும் சமைந்து நின்றாள்.
இந்த சமுதாயம் பக்குவமாக சமைக்கப்பட‌
ஒரு "பெண்ணிய சீற்றம்"
தேவைப்படுகிறது.
ஆண் நண்பனே
உன் ஆழ்மனத்து ஆதிக்க‌
வெண்கொற்றக்குடைகளை
ஒதுக்கிவைத்துவிட்டு
இந்தச்சீற்றத்தோடு சங்கமம் ஆகு!
பெண் என்பவள் வெறும்
கலிதொகை அல்ல.
புலித்தொகையும் தான்.
ஒரு விடியலின் வீர விளிம்பை
அவள் ஒரு கோலம் போட்டு
அந்த தெருவாசல் மட்டும் அல்ல‌
உலகத்தின் எல்லா இருட்டு மூலைகளுக்கும்
உயிர் வெளிச்சமாய் படர முடியும்.
பாலியல் உறவுகளை விட‌
பாலியல் நட்பே
நம் புதிய யுகத்தை படைத்துக்காட்டும்!
அறிவு நுட்பத்தின் ஆட்சியில்
பெண் எனும் ஆண்
ஆளப்பிறந்தவளாய் ஆகப்போகும்
ஒரு பரிணாமம்
உன் இமையோரத்தின்
வெகு அருகில்
நங்கூரம் இட்டுக்கொண்டிருக்கிறது
பார்!
நண்பனே! நண்பனே! நண்பனே!

==========================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (10-Sep-17, 5:43 am)
பார்வை : 289

மேலே