மருத்துவர் அனிதா

ஆடியில் சென்றவளல்ல !
ஆட்டுப் புலுக்கை
அள்ளிய விரல்களை
அலசிவிட்டு துப்பட்டாவில்
துடைத்துச் சென்றவள் !

சூடியது மல்லிகையல்ல !
முற்றத்து வெளியில்
மண்டிக் கிடந்த
சாமந்தியாய் இருக்கும் !

பார்க்கர் இல்லை !
திறந்தவுடன் - தலை
தேடும் ஏதோவொரு
பேனாவாய் இருக்கும் !

பர்க்கர் இல்லை !
பட்டாணியென பல்லிளிக்கும்
சோறும் - சாம்பாருக்கான
அறிகுறிகள் தென்படும்
குழம்புமாக இருக்கலாம் !

வாடி வந்ததும்
பழரசம் ஓடி வராது !
கருக்கருவாள் கைக்கொண்டு
வரப்பில் நின்றிருப்பாள்
ஆட்டுக்கு புல் அறுக்க !

கண் இனிக்கும்
ஏரி குழலாக இருந்திருக்காது !
கண்களை விரிய வைக்கும்
ஏரி குடுவையாகத்தான் இருக்கும் !

நாவாரை மட்டும் விடுத்து
மற்றவை கொள்ள
அவள் எத்தனை இரவுகள்
தூக்கத்தை எரித்திருப்பாள் ?

எழுதும் மூவிரலில்
எத்தனை வலியிருக்கும்
உயிர்கொடுத்த கனவுகள்
உயிரோடில்லை எனும்போது ?

அந்த போலி நம்பிக்கையை
சாக்கடைகள் தராதபட்சத்தில்
அவள் உயிரோடு மட்டுமாவது
இருந்திருக்கக் கூடும் !

குருணையையும்
அரிசியையும்
நெல்லையும் - ஒரே
சல்லடையில் சலிப்பவன்
எத்தனை பெரிய முட்டாள் ?

அந்த பிஞ்சருகே
நீங்கள் கூர்தீட்டி
நீட்டிய நீட்டால்
நா நீட்டி நாண்டாள்...

மகிழ்வுறுங்கள்...
ஒரு விருட்சத்தை
விதையிலேயே
கொன்றதற்காக !

வென்றதற்காக
அந்த ஸ்டெதஸ்கோப்
கனவுகள் அவளை
கொன்றிருக்க வேண்டாம் !

நிற்பாய்
என்றும் நினைவில்
மருத்துவர் அனிதாவாய்
வெள்ளாடை அணிந்தபடி !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (11-Sep-17, 4:52 pm)
பார்வை : 107

மேலே