வானம் பார்த்த பூமி- பாகம் 1

'எப்டியோ நாமலும் நாலு வருசம் இன்ஜினியரிங் படிச்சி முடிச்சிட்டோம்டா' என மாணிக்கம் கூற 'ஆமாம்டா முடிச்சாச்சி முடிச்சாச்சி, அடுத்து வேலைக்கி போற வழியப் பாக்கணும்' என முத்துசாமி பதில்கூற இருவரும் தங்களின் குக்கிராமத்தின் அருகேயுள்ள ஓடையருகே தங்களின் கல்லூரிப்பற்றிய நினைவுகளையே பேசிக்கொண்டிருக்க 'டேய் நீங்க இங்கதான் இருக்கீங்ளா?நா உங்க வீட்ல தேடிட்டு வாரேன்' என குப்பன் ஓடையருகே வந்தான்.'இது என்னாடா கதையா இருக்கு, ஆத்திர அவுசரத்துக்கு ஓடைக்கு வராம வூட்லயேவா உக்காந்துக்க முடியும்' என கிண்டலாக முத்துசாமி சொல்ல, வாடா குப்பா! வா வா என்னடா இன்னைக்கு 5 மணிக்குலாம் வந்துட்ட, அதுக்குள்ள வேல முடிஞ்சிடிச்சா' என மாணிக்கம் கேட்க, 'இல்லடா, கோவிலுக்கு போகனும்னு அம்மா காலையிலயே சொல்லுச்சி, அதான் மேஸ்த்திரிக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்' என்றான் குப்பன்.'எதாவது நாளு கிழமைன்னா கூட உங்க மேஸ்த்திரி 6 மணிக்குத்தான் விடுவான் இன்னைக்கு நீ கேட்டதும் 5 மணிக்குலாம் விட்டுட்டான்' என கிண்டலடித்தே பேசினான் முத்துசாமி. 'டேய் குப்பன நீ சாதாரணமா நெனைக்காத, எத்தன கொத்தனாரா இருந்தாலும் அத்தன பேருக்கும் அசால்ட்டா கலவ கலந்து கொடுப்பான்டோய், இன்னும் கொஞ்சநாள்ல குப்பன் பெரிய கொத்தனாரா வந்திடுவான் பாரு, குப்பன் இல்லனா அங்க பாதி வேலயே நடக்காது, அதனால குப்பன் மேல மேஸ்த்திரிக்கு நல்லா வேல செய்ற பையன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு' என்றான் மாணிக்கம்.'ஓகோ.. அதுக்குத்தான் குப்பன் கேக்கும்போதெலாம் மேஸ்த்திரி லீவு தராரா' என்றான் முத்துசாமி.மாணிக்கமும் முத்துசாமியும் சேர்ந்து குப்பனை பேசவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் பொறுமை தாங்காத குப்பன் 'யப்பா சாமிங்களா கொஞ்சம் நிருத்துங்களேண்டா டேய்' என்றான். 'சரி சரி.. மாணிக்கம் நா ஒன்னும் பேசலப்பா நீயும் பேசாம அப்டியே வாய மூடிக்க' என்றான் முத்துசாமி. 'நா என்னப்பா பேசப்போறேன், நீ சொன்னா சரிதான் நா ஏதும் பேசல' என்றான் மாணிக்கம். 'தன் நண்பர் இருவரையும் முறைத்துப் பார்த்த குப்பன் 'டேய் உங்கள திருத்தவே முடியாதுடா, நீங்க கழுவிட்டு வந்தா வாங்க இல்லனா ராத்திரிக்கு இங்கயே தூங்குங்க, நா கோயிலுக்குப் போகனும்' என உரத்தக்குரலில் கூற பின்னர் மூவரும் சேர்ந்தே சென்றனர்.

'வானம் வந்தா ஒரே அடியா வருது இல்லனா சுள்ளுனு வெளுத்து வாங்குது'
'நேத்து அடிச்ச மழைக்கு இந்த சனங்கெல்லாம் அதுஅதுங்க முடிச்சுவெச்ச வெதைங்கள எடுத்துக்கிட்டு வெதைக்க கெளம்பிடிச்சுங்க'
'வெயிலு உச்சிக்கு வர்றதுக்குள்ள சோறுத்தண்ணி எடுத்துக்கிட்டு சீக்கிரமா வந்து சேருடி' என தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே ஏர் கலப்பையை தோளில் சுமந்தபடியும் தன் இரு உழுமாடுகளையும் பிடித்துக்கொண்டும், அப்படியே கோவணத்தை கெட்டியாய் இறுக்கியபடி புஞ்சைக்காட்டுக்குச் செல்ல தயாரானார் மாணிக்கத்தின் அப்பா அமாவாசை.
'செத்த இருயா காப்பித்தண்ணி போடுறேன் குடிச்சிட்டுப்புட்டுப் போகலாம்' என மனைவி பூலாந்தேவி சொல்ல 'அது கெடக்குடி பொல்லாத காப்பித்தண்ணி' உங்க துரைய எழுப்பிக்கொடு' வெயிலு சுள்ளுனு அடிக்கறதுக் கூட தெரியாம இன்னும் சாரு தூங்குறாரு' என அமாவாசை கூற 'வரம் வாங்கிப்பெத்த ஒத்தப்புள்ள நம்ம மாணிக்கம்' கொஞ்சநேரம் தூங்குனா கொறஞ்சா போய்டும்' என தன் செல்ல மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் பூலாந்தேவி. 'ஆமா ஆமா இவ ஒருத்தி துரைய பத்தி எதாச்சும் சொன்னா இவளுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துடும்' வேகமா வந்து சேருடி' எனச் சொல்லி புஞ்சைக்காட்டுக்குச் சென்றார் அமாவாசை.'அடே மாணிக்கம்! கேட்டியாடா உங்க அப்பா சொன்னத' காப்பித்தண்ணியக் குடிச்சிப்புட்டு நீ படிச்சதுக்குத் தகுந்தாபடி சீக்கிரம் வேலக்கிப் போற வழியத் தேடுடா' உங்க அப்பாவுக்கும் வயசாயிக்கிட்டே போகுது' எத்தன நாளுக்குத்தான் அவரு ஒடம்பு ஒழச்சி ஒழச்சி ஓடா தேயுறது?! நீ தலயத் தூக்குனாதாண்டா குடும்பத்த ஒரு நெலைக்குக் கொண்டுவர முடியும்' எனப் பழைய அடுக்குப் பானையில் அரிசியை எடுத்துக்கொண்டே குடும்ப நிலையை பூலாந்தேவி எடுத்துக்கூற மாணிக்கமோ காதில் எதையும் கேளாதவனாய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். 'என்னடா இங்க ஒருத்தி உயிரக்கொடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்குறேன்? நீ எரும மாட்டுல சுள்ளான் கடிச்ச மாதிரி ஒறங்கிக்கிட்டு இருக்க' என ஓங்கிய குரலில் உரைத்தாள் பூலாந்தேவி. 'யம்மாவ் சும்மா வேல வேலனு பொலம்பிட்டு இருக்காத' வேலக்கிப்போகனும்னு எனக்கும் அக்கற இருக்காதா? நாலுவருசம் கஸ்ட்டப்பட்டுப் படிச்சதுக்கு நாலு மாசம் ரெஸ்ட்டு எடுத்தா கொறஞ்சாப் போய்டும்' என தூக்கத்திலிருந்து திடுக்கென விழித்துக் கத்தினான். 'அடே மாணிக்கம் ஒனக்கே தெரியும் நீ கேக்கும்போதெலாம் ஆயிரம் ரெண்டாயிரம் நாலாயிரம்னு கொடுத்து எந்தக் கொறையும் வெக்காம உன்னைய தனியாரு காலேஜில படிக்க வெச்சிருக்கோம்' எல்லாத்தையும் நெனப்புல வெச்சிக்கடா மாணிக்கம்' என அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டே உருக்கமாக எடுத்துரைத்தாள் பூலாந்தேவி.
அடுப்பில் சுள்ளிகள் சுடர்விட்டு எறிந்தன.
தாய் பூலாந்தேவி மனதிலும் ஏதோ ஒரு இனம்புரியா வலி பற்றத் தொடங்கியது...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (13-Sep-17, 6:55 pm)
பார்வை : 146

மேலே