உடைசல்
மோதி மோதி சேதிசொல்லும்
மொட்டவிழும் வாசனை
மொட்டவிழும் வாசனையில்
மூளையில் ஓர் யோசனை
ஆதி நாளில் மானிடர்கள்
அடையவில்லை வேதனை
அப்படியா? அடபோடா
யாரு செய்தார் சோதனை?
ஆசை, பயம் நாளும் நாளும்
ஆட்டுவிக்கும் வாழ்விலே
அன்றுநன்று இன்றுமோசம்
என்றுசொல்லல் எவ்விதம்?
ஓசை கூடும் காடழித்தோம்
உண்டு செய்தோம் வீடுகள்.
உண்டு, கூடி குடும்பமென்ற
ஒன்றுசெய்த போதிலே.
ஒன்றில் ரெண்டு, மூன்று, நான்கு
உடைசல் ஆகிப் போனது
உடைசலையே கடைசலாக்கும்
உன்முயற்சி பெரியது.
என்றும் வாழ்வில் ஏதோ ஒன்று
இதயம் குடைசல் செய்திடும்
இல்லை என்றே உள்ளதையும்
எண்ணில், உண்டா நிம்மதி!