அடுத்து வரும் அனிதாக்கள்
 
 
            	    
                அடுத்து வரும் அனிதாக்கள்
நீ வீரியமிக்கவள்
அதனால்தான் 
வீரத்தமிழ் மண்ணில் 
விளைந்திருக்கிறாய் 
நிறைந்த அறிவும்
ஓயாத உழைப்பும் 
உன் உதிரத்தில் 
கலந்திருக்கிறது 
அதனால்தான் 
வறுமையை வென்று 
கல்வியில் சிறந்தாய்
பெற்ற மதிப்பெண்கள் 
மதிப்பிழக்க
பெறாத மதிப்பெண்கள் 
உன் வாழ்வை
தீர்மானித்தன
ஊடகங்கள் உறுமுகின்றன
அரசியல் அறிக்கைகள்
பறக்கின்றன 
சமூக ஊடகங்கள் 
சாலை ஓரங்கள் 
அனைத்திலும் 
அனிதாவே 
பேசுபொருளாகிறாள் 
உன் இறப்புக்கு 
இவ்வளவு வீரியமெனில்
உன் இருப்புக்கு ?
காரணம் எதுவாயினும் 
கலைகின்ற கனவுகளுக்கு 
தற்கொலைகள் தீர்வெனில்
தரணியில் வாழ்வதற்கு 
உயிர்கள் மீதமிருக்குமா?
அடுத்து வரும் அனிதாக்களே 
அரசியல் புரிந்துகொள்ளுங்கள் 
சமூக சங்கடங்கள் 
கடந்து வாருங்கள் 
அறிவை விரிவு செய்து 
எழுந்து எதிர்த்து நில்லுங்கள் 
உயிரை மாய்த்துக் கொள்வது 
வலி
உயிரை காத்து போராடுவது 
வலிமை 
வலியறுத்து வலிமையுடன் 
வாழுங்கள்
 
                     
	    
                
