காடுகள்
காடுகள்
===================================ருத்ரா
புத்தகங்கள் யாவும் காடுகள்.
எழுத்து இலைகளின் சராசரப்பில்
முணு முணுப்பது என்ன?
காகித திருப்பல்களில்
கைவிரல் பதிவுகளில்
கால விழுதுகளின் நரம்போட்டம்.
உருவமற்ற மனித சிந்தனைகள்
இந்த பேய்க்காடுகளில்
பிண்டம் பிடிக்கின்றன.
சமுதாயத்தின் நரி ஊளைகளும்
கொலை வெறியின் ஒநாய்ப்பற்களும்
மரண நிழல்களில்
மண்டியிடும் கூடங்கள் ஆகின.
வழிபாட்டு புனிதங்கள் ஆகின.
எழுதிய வரிகளில் சில
இந்த அழுகல் சுவடுகளை
அழிக்க வந்தன.
புத்தகங்களின் காடுகள்
சில அக்கினி ஆறுகளின்
கூடுகள் ஆகின.
தினம் தினம் இருட்டு சிந்தனைகளாய்
கழுவில் ஏற்றும் அந்த
நிழற்கூத்துக்களை அந்த
ஆறுகள் சுட்டெரித்தன.
அந்த புத்தகக்காடுகளில்
ஒரு பொந்திடை
அக்கினிக்குஞ்சை வைத்தது யார்?
புத்தகக்காடுகளிலும்
வெந்து தணிந்தது ஒரு காடு.
மூடத்தனத்தில் மூடிக்கிடந்த காடு
மூண்டு எரியுது பாரீர்!
மூண்டு எரியுது பாரீர்!
=========================================