உழவனின் கண்ணீர்

வெள்ளிக் கம்பி கேசம்.
வெளுக்காத நேசம்.
வெகுளியாய் பேசும் -உன்
பேச்செல்லாம் பாசம் வீசும்.

ஒத்த ஏர்பூட்டி
தொத்த மாடு ரெண்டு கூட்டி
வெயிலுன்னு பாக்காம
ஒத்தையில நீ உழச்சதெல்லாம்
உனக்கா சொந்தம்..!!??

ஒத்தமகன் ஓடியாந்து மொத்தத்தையும் எடுத்துப் போரான்.
உன் இரத்தம் கூட மிச்சமில்ல
அத்தனையும் உறிஞ்சு போரான்.

பெத்த மக ஒருத்தி
இராசாத்தி பேரு வச்சு
இராணியாத்தான் வளத்தெடுத்து
அக்கா மகனுக்குதான் ஆசையா கட்டி வச்ச

அக்காவா இருந்தாலும் சம்பந்தி முறுக்கு வர
போட்டதெல்லாம் பத்தாது போடினு தொரத்திவிட
வருசத்துக்கு நாலு மொற உம்பிள்ள வாசல் வர.

பச்சோந்தி சொந்தமெல்லாம் பணத்துக்கு தான் ஓடி வரும்
உனக்கு எங்க கூடி வரும்.

உன் இத்துப் போன இரும்புப் பெட்டி மொத்தம்
பாசத்த தான் சேத்து வச்ச
காசு பணம் சேக்கலியே.

எள்ளுன்னு வெதச்சதெல்லாம் புல்லாகி போனதையா
சொல்லுதச்சு மனசெல்லாம் புண்ணாகி போனதையா.

வத்தி போன நதியால ஒருநாளும் கவலயில்ல
வத்தாத நதியாக கண்ணு ரெண்டு உள்ளதய்யா.

மழபேஞ்சா மஞ்செவரு கரைஞ்சோடும்
மறுநாளு எடுத்து வைக்க ஒருநாளு ஓடிப் போகும்

செத்துப் போக நெனச்சாலும் - உன்
செல்லக் கருப்பன் விட மாட்டான்
உன் மொகத்த பாக்காம
புண்ணாக்கும் தொட மாட்டான்

கயித்துக் கட்டிலில கால்மேல கால்போட்டு
வானத்த தான் பாத்தபடி
கனவுலதான் உம்பொஞ்சாதி கூட
கொஞ்சம் கொஞ்சுறது
போதுமய்யா நீர் போர வர..

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (18-Sep-17, 8:26 pm)
Tanglish : ulavanin kanneer
பார்வை : 1296

மேலே