கவிதை திருவிழா- உழுபவன் சாபம்

• வீரும் போரும்
விடைதரும் தமிழா
நீரும் சோறும் பெருவோம்
என
பாரும் திரண்டிட
வேரும் அசைந்தது

பார்த்தது பார்த்தன் கண்கள்
மெல்ல
கோர்த்தது வேர்த்ததும் கைகள்
அதிரும் காவல் அடிதடியாலே
அவலம் தொடர்ந்தழு குரல்கள்

• இனி
எழுபவன் உழுபவன்
எவனும் புவிதனில்
எதிரியோ? முழங்கிடு தமிழால்

• வித்தில்லா உயிரினமாய்
விதையில்லா விவசாயம்.
பிஞ்செல்லாம் நஞ்சாக்கும்
பெருமையில் என்தேசம்

• ஓடி உழைத்து
ஊர்முழுதும் பசி போக்க
தேடித்திரிகின்ற உழவன்

அவன்
பயிர்செய்து உயிர் செய்த
வயல்கள்

இன்று
கள்ளி முளைக்கும் காடாய்
வானம்
வெள்ளி முளைத்த மேடாய்

• நீரோடிப் பாய்ந்த நதியெல்லாம்
இன்றுவரை
வேர் ஓடக் காய்ந்தநிலை

நீர் விட்டுப் போனாலும்
ஊர் விட்டுப் போகாத
உழவன்
அவன்தான்
நாட்டின் கிழவன்

• இனி
கலப்பைச் சிலுவை சுமக்கும்
வியர்வை
கருப்பு உயிர்கள் எல்லாம்
முள் தலைப்பை சுமந்த யேசு
தமிழ் தரணியே
அவன்புகழ் பேசு

• உழுபவன் சாவதும் இங்கே
கிடந்து
தொழுபவன் வாழ்வதும் இங்கே
அழுவதும் விழுவதும்
அவனவன் விதியெனில்
பழுதவன் படைப்பினில்
அங்கே

• ஏழையின் வயிறு
ஒட்டியே கிடக்கட்டும்
ஏய்ப்பவன் உறவு
எட்டியே இருக்கட்டும்
அட
உனக்கென்ன லாபம்தான்டா
கிடைக்கும்
உழுபவன் சாபம்தான்டா.

-கரு. அன்புச்செழியன்

எழுதியவர் : கரு. அன்புச்செழியன் (18-Sep-17, 8:43 pm)
Tanglish : ulubavan saabam
பார்வை : 99

மேலே