கருத்துரை

தேன்வந்து பாயட்டும் காதினிலே -- கருத்துரை

தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
நோய்தன்னை நீக்கிடவும் நோகாமல் தாய்மொழியை
வாய்திறந்துப் பேசிடவும் வகையாக வனைந்திடவும்
தாய்போல நமைக்காக்கும் தமிழ்மொழியே நீவாழ்க !! எனத் தமிழ்த் தாயை வணங்கி விட்டு , சான்றோர்கள் நிறைந்த இச்சபை முன்னே என் கருத்துரையைத் துவங்குகின்றேன் ,

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே . --- என்றான் நம் எட்டையபுரத்து முண்டாசுக் கவிஞன் பாரதி . அவன் வழியே என் கருத்துரைத் தலைப்பு " தேன்வந்து பாயட்டும் காதினிலே " . மிக அருமையான தலைப்பு . படித்தவர் முதல் பாமரர் வரை யாவருக்கும் சென்று சேரும் தலைப்பு . தலைப்பை உற்று நோக்குங்கள் தேன்வந்து என்றால் தேனின் சுவை நம்மிடம் வருதல் என்பது பொருள் . பாயட்டும் என்றால் நிற்காமல் நிலைத்து நின்று பாய்கின்ற அருவியைப் போன்றது என்று பொருள் . காதினிலே எனும் போது தான் தலைப்பின் உறுதிப்பாடு புலனாகிறது . காதினில் பாயவேண்டும் என்றால் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை விடவும் தேனின் சுவை மிகுந்தது வேறொன்றும் உண்டோ . ஆம் செந்தமிழ் தேனாகி தேமதுர தேனிசையாகி நம் காதுகளில் பாயட்டும் என்றென்றும் என்பதே தலைப்பிற்கான பொருள் .

"யாதுமாகி நிற்கும் தமிழன்னை போற்றும்
தீந்தமிழே ! தினந்தோறும் சீர்மிகு உன்னைச்
சீலத்தின் சிந்தையென செய்திடு மெந்தன்
செந்தமிழைக் காப்பாய் நிதம் ." என்று சொல்லும் போதே நம்முள் காக்கும் கடவுளாய்த் தமிழ் நிற்கின்றது என்பதே உண்மை .

செந்தமிழை வணங்கிவிட்டு செப்பு கின்றேன் சேதிகளைக் கருத்தரங்கில் சபையின் முன்னே .
நந்தமிழாம் நற்றாயாம் உன்னை நாளும் நன்றியுடன் தொழுகின்றேன் அருள்வாய் என்றும் .
பைந்தமிழர் கூடிநிற்க ஒலிக்கும் பாடல் பசுமையாக காதினிலே பாயட்டும் பாரீர் .
எந்நாளும் காத்திடுவாள் தமிழின் அன்னை . ஏற்பீரே என்கருத்தை உரைப்பேன் இங்கே .

நம் தமிழ்மொழியில் என்னதான் இல்லை . இயல்பில் சிறந்தவள் , இனிமையின் பிறப்பிடம் , இன்பத்தைத் தருபவள் , இச்சகத்தை ஆள்பவள் .

தாய்மொழி நன்றாம் பேசுதல் கேட்டல் தமிழ்மொழி சுகந்தரும் காண்க !
வாய்ப்பது வந்த போதினில் தோழா வகையுற மொழியினைப் பேசு !
நோய்விழும் நேரம் நோக்கினும் மருந்தாம் நோய்பிடி அகலுமே நம்பு !
காய்ந்ததோர் நெஞ்சம் கருவறை என்றே காவியம் படைத்திடும் தமிழே ! ஆம் !! காவியம் படைத்திடும் தமிழ் நம் காதுகளில் பாயட்டும் .

முத்தமிழாம் எங்கட்கு முக்கனியைப் போலவே
எத்திசையில் கேட்டாலும் இன்பமாய்த் தித்திக்கும்
உள்ளுசுவை இன்பம் உணரச் சுவைதரும்
தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேன் வந்து பாயட்டும் காதினிலே . உண்மைதான் . ஔவை முதல் அப்துல் ரகுமான் வரை ஆதியாய் நிற்கின்றாள் நம் தமிழன்னை .

ஆத்திச்சூடி , அறம் செய விரும்பு என்று ஆரம்பித்த நம் தமிழ் , அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று வள்ளுவன் வாய் மொழியாய் வந்த தமிழ் கம்பனின் வீட்டுக் கட்டுத் தறியிலே கவி பாடிய தமிழ் , இரட்டைக் காப்பியத்தை ஆம் ! மணிமேகலையும் , சிலப்பதிகாரமும் என இளங்கோவும் , சீத்தலை சாத்தனாரையும் ஒன்று சேர்த்த நம் தமிழ் , பாரதியையும் , பாரதிதாசனையும் உலகிற்குத் தந்த தமிழ் , பட்டுக் கோட்டை , மருதகாசி , கண்ணதாசன் , வைரமுத்து என்று ஜீவநதியாய் தேனாக அமிழ்தமாகி பாய்ந்து கொண்டே இருக்கின்றது நம்மின் காதுகளில் என்றால் மிகையில்லை .

தமிழ்மொழி சுகம்தரும் தனிநிகர் மொழியினால்
அமிழ்தமும் திகட்டும் அற்புதம் தரவே
செந்தமிழ் நிதமும் செம்மையாய்ப் பயிலச்
சிந்தையில் சிறப்பைக் காண
என்றன் நெஞ்சம் நாடுதல் தமிழே !!!! உண்மைதான் , அமிழ்தமும் திகட்டும் அற்புதமே நம்முடைய தமிழ் . ஒருவரின் சிந்தையில் சிறப்பைக் காண வேண்டுமென்றால் , தமிழை நாடுதல் வேண்டும் . அதுவே அருமருந்து . தமிழ்மொழி சுகத்தைத் தருகின்ற தனிநிகர் மொழி . இப்படிப்பட்டப் பெருமைக்குரிய மொழி நமது காதுகளில் தேனாகப் பாயட்டும் .

நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்க கனிபோல் இனித்திடும் காசினி உய்யும் .
உலகில் தனித்தமிழ் நிலைக்கும் . பதமுடைச் சொற்கள் பாய்ந்திடும்
செவிகளில் தேனாகத் தமிழோசை ஓங்கிடும் !!! எவ்வித மறுப்புமின்றி ஓங்கிடும் . கனிபோல் இனித்திடும் தமிழ் . இந்தக் காசினி , இவுலகம் நிலைபெற வேண்டுமென்றால் உலகில் தனித்தமிழ் நிலைக்க வேண்டும் . பதமுடைச் சொற்கள் நம் செவிகளில் பாயட்டும் தேனாக . அப்போதுதான் தமிழோசை ஓங்கும் .

வீசுகின்ற காற்றினிலே, வீழ்கின்ற அருவியிலே, மாசற்ற அன்பினிலே, மங்காத சுவையுடனே ,புள்ளினங்கள் இசை பாட, புவிமகளும் சேர்ந்தாட, எங்கும் மலர்வனங்கள் பேசிடவும், மணமெங்கும் கமழ்கின்ற ,காதல்மொழி கண்பேசக் ,கன்னித்தமிழ் தேனாகித் ,தேமதுரத் தமிழோசைப், பாயட்டும் காதினிலே !!!! .

செந்தமிழ் வாழவே செப்பிடு மானிடா
பைந்தமிழ்ப் போற்றிப் பசுமையான கீதமே
தீந்தமிழ்ச் சொற்களால் தீண்டிட வேண்டுமாய்
தெள்ளுதமிழ்ப் பேச தேன்வந்து பாயட்டும் காதினிலே .

வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும் நாழிகை தோறுமாய் நம்முன்னே நிற்கவே ஊழியம் செய்வோம் உவந்து மகிழவே
ஆழியாய் மாந்துவோம் அன்பாலே செவிதனில் .

சங்குகொண்டே ஓதுவோம் சந்ததி மேம்பட ,பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ் தங்கிடுமே நாட்டில் தழைக்கவே . ஆம் . நம் செந்தமிழில் அனைத்தும் அடக்கம் .

நேரம் கருதி இறுதியாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கின்றேன்

பாரினிலே தமிழ்மொழியே ஆளுதலும் வேண்டும் .ஊரினிலும் உலகத்திலும் உன்னதமும் தமிழ்மொழிதான்
காரிருளும் சூழ்ந்தாலும் கறைபடியா மொழி நம் தமிழ் மொழி .சீரிளமைத் திறத்தாலே சிறப்பாக ஒலித்திடுமே எவ்விடமும் . பொய்மையற்ற உலகினையும் படைக்க வேண்டும் . பொறுமையினால் நாட்டினையும் தமிழால் ஆள வேண்டும் . மெய்வருத்தி உழைத்திடலும் என்றும் வேண்டும் . மெய்யாக தேனாக தமிழ்மொழியும் பாய்ந்திடலும் வேண்டும் . தெய்வங்கள் துணையிருக்கும் அன்னைத் தமிழால் . தேசத்தின் மீஎன்றும் பற்றுதலும் வைப்போம் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி என் கருத்துரையை நிறைவு செய்கின்றேன் , நன்றி ! வணக்கம் !.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Sep-17, 4:54 pm)
பார்வை : 123

மேலே