நட்பு – கலி விருத்தம்

கெட்டேம் இதுவெம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந்(து) ஆற்றவும்
எட்டவந்(து) ஓர்இடத்(து) ஏகி நிற்பவே. 48 வளையாபதி

பொருளுரை:

ஒருவர் தம் கைப்பொருள் இழந்து வறுமையுற்று யாம் பெரிதும் கெட்டொழிந்தோம் இப்பொழுது எம்முடைய நிலைமை பெரிதும் இத்தகைய இன்னாமையுடைய வறுமை நிலை கண்டீர் என்று சொல்லி ஏனையோரிடம் செல்லும் பொழுது, உண்மையாக நட்புச் செய்துள்ளவரையன்றி ஏனையராகிய மிகமிக நெருங்கிய சுற்றத்தார் தாமும் தாம் விரும்பிய குறிப்பு மொழி கூறி மிகவுந் தொலைவிலே சென்று ஓரிடத்தே தம்முட் கூடி மிகவும் இகழ்ந்திருப்பார் என்பதாம்.

விளக்கம்:

நட்டவரும் அல்லாரும் சுற்றமும் என எண்ணும்மை கொடுத்து நட்டவரும் ஏதிலரும் சுற்றத்தாரும் என ஓதினும் ஆம்.

நட்டவர் அல்லார் என ஓதி இச்செய்யுள் நட்பின் சிறப்பினைக் கூறுவதாகக் கொள்க.

இனி, இதனை,

இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு குறள், 752

என்னுந் திருக்குறளானும் உணரலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-17, 8:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

மேலே