வாசிப்பு, அறிவியல்கல்வி – கடிதங்கள் ------239 2017--அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும் ----நாம் ஏன் படிப்பதே இல்லை

1
அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

அன்புள்ள ஜெ.எம்

நான் முறையாக ஒரு பொறியாளர். பொறியியல் படித்த பிறகு இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இந்த வேலைக்கு வருவதுவரை நான் எதைப்பற்றியும் சிந்தனையே செய்ததில்லை. இப்போது எனக்கு நல்ல சம்பளம் உண்டு. சிறைவான வாழ்க்கைதான். ஆனால் எனக்கு இந்த வேலையில் இருக்கவே முடியவில்லை. ஏன் இந்த வேலையை பார்க்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. பொறியியல் படிப்பு படிக்கும்போது நானெல்லாம் கடுமையாக உழைத்து படித்தேன். மற்ற கலைப்படிப்பு மாணவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு படிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் அவர்களைப்பற்றி மதிப்பாக நினைத்தது கிடையாது. நான் படிப்பதுதான் உருப்படியான படிப்பு என நினைத்தேன். ஆனால் இன்றைக்கு சந்தேகமாக இருக்கிறது. திரும்பத்திரும்ப ஒரேபோல மெக்கானிக்கலான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். இதிலே அறிவுக்கு ஒரு இடமும் இல்லை. இதற்காகவா இந்த உழைப்பு என்று நினைப்பு வருகிறது

ஆனால் என்னுடைய தோழர்களுக்கு பிரச்சினையே இல்லை. அவர்களுக்கு வேலையும் சனிக்கிழமை கொண்டாட்டமும்தான் வாழ்க்கை. எதைப்பற்றியும் உருப்படியாக எதுவும் தெரியாது. நெட்டில் மேய்ந்து சில தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா. சங்கீதம் என்றால் அதேமாதிரி அமெரிக்க சங்கீதம். பேஷன். கொஞ்சம் மேலோட்டமான அரசியல். எல்லாவற்றையும் கிண்டலும் நக்கலுமாக பேசிக்கொள்வது. டிவிட் செய்வது .எஸ்ஸெம்மஸ் அனுப்புவது. எல்லாரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இவர்களுடன் சேர என்னால் முடியவில்லை

சிலசமயம் நான் இதையெல்லாம் உதறிவிட்டு என்னுடைய மூளைக்கு சவாலான ஏதாவது துறைக்கு போனால் என்ன என்று நினைப்பேன். ஆனால் அதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு படுகிறது. என் வடது 32. குடும்பம் இருக்கிறது. எப்படியோ இங்கே வந்து மாட்டிக்கொண்டேன். இந்த வேலைக்கு எதற்கு இவ்வளவு படிப்பு? நண்பர்களிடம் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால் நாம்தான் கிரீம் என்று. கிரீமே இப்படி என்றால் தமிழ்நாட்டிலே அறிவுத்துறை என்றால் ஒன்று உள்ளதா? நான் இதை விட்டு வெளியேறலாமா?

சிவா ராம்சந்தர்



அன்புள்ள சிவா

நீங்கள் சொல்வது உண்மைதான், இந்தியாவில் அறிவியல்மாணவர்கள் கலைப்படிப்பு மானவர்களை விட கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. அறிவியல் மாணவர்களை விட தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். ஆகவே அந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களை முதல்தரத்தினர் என நினைத்துக்கொள்கிறார்கள்

உண்மையில் நம்முடைய படிப்புகள் இங்கே கையாளப்படும் விதம்தான் அந்த வேறுபாட்டை உருவாக்குகிறது. சரியான முறையில் கற்பிக்கப்பட்டால் கலைக்கல்விக்குத்க்தான் மிக அதிகமாக படிக்கவேண்டியிருக்கும். இலக்கியம், வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் உண்மையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமே இருக்கமுடியாது. காரணம் அவை கருத்துநிலைகளைப்பற்றிய, கருத்தியல்களை பற்றி படிக்கின்றன. அவை ஒவ்வொரு வருடமும் வளர்ந்து உருமாறிக்கொண்டிருக்கின்றன. புதியபுதிய கொள்கைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. யோசித்துப்பாருங்கள். இன்றைய பொருளியல்படிப்பு உண்மையில் இன்றைய பொருளியலை படிப்பதாக இருந்தால் அதைவிட சிக்கலான,சவாலான ஒரு படிப்பு இருக்கமுடியுமா?

ஆனால் இங்கே உள்ளது மனப்பாடக்கல்வி. நம் கல்விநிலையங்களில் குறிப்பிட்ட சில பாடங்களை வைத்து அவற்றை மனப்பாடம் செய்து அவற்றுக்குள் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்தப்பாடங்களைக்கொண்டே பதில் சொன்னால்போதும் என்ற நிலை உள்ளது. அப்படி கச்சிதமான பதில் சொல்லும் மாணவர் சிறந்தவராக மேலே எழுந்து வருகிறார். ஆகவே கலைக்கல்வி படிக்காமல் கடைசிநிமிடத்தில் ஒப்பேற்றவேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு புத்தகம் கூட படிக்காமல் பொருளியலில் இலக்கியத்தில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்று வெளிவர முடிகிறது.

இன்றுகூட இக்கல்வியை கல்லூரிப்பாடத்திட்டத்துக்கு வெளியே தானாக முனைந்து வாசிக்க முயலும் மாணவர்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டிருக்கவேண்டிய நிலைதான் உள்ளது. ஒரு சாதாரண சமூக நிகழ்வை புரிந்துகொண்டு சமூகவியல்கோட்பாடுகளுடன் இணைத்துக்கொள்ள பலகோணங்களில் பற்பலநூல்கள் வழியாக அதை அணுகியாகவேண்டும். ஏன், தமிழிலக்கியத்தை ஒருவன் முறையாகவும் முழுமையாகவும் முதுகலை படிப்புக்குள் படித்து முடிக்கவேண்டும் என்றால் அவன் படிக்கவேண்டிய, உள்வாங்கவேண்டிய நூல்கள் எவ்வளவு? குறைந்தது ஐந்நூறு நூல்களாவது வரக்கூடும்.

அடுத்தபடியாகவே அறிவியல் கல்வி. அதுவும் பாடத்திட்டத்தின் எல்லைக்குள் உள்ளது. ஆனாலும் அதில் இங்கே அடிப்படை தகவல்களை மனப்பாடம் செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளதனால் படிப்பு ’சுமை’ அதிகம். என் மனைவியில் வேளாண்மை இளங்கலை பாடத்திட்டத்தை பாத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு செடிகள், பூச்சிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகள் பற்றிய வெறும் தகவல்கள். மிகக்குறைவாகவே கொள்கைகளும் கோட்பாடுகளும் இருந்தன. அதாவது புரிந்து உள்வாங்கிக்கொள்ளவேண்டியவை மிகக்குறைவு.

பொறியியல், மருத்துவப்படிப்புகள் இதைவிட அதிகமான வெற்றுத் தகவல்குவியல் கொண்டவை.செய்து பார்க்கவேண்டியவையும் இருப்பதனலால் ’சுமை’ இன்னும் அதிகமாக ஆகிறது. ஆனால் நான் கவனித்தவரை கருத்துநிலைகளும் கருத்தியல்களும் மிகமிகக் குறைவாகவே இப்படிப்புகளில் உள்ளன. சுயமாக சிந்திக்கவேண்டிய சவால்ம் அனேகமாக இருப்பதில்லை. தெரிந்துகொண்டாகவேண்டியவையே உள்ளன.

ஆகவே உண்மையில் சரியானபடி கற்பிக்கப்பட்டால் கல்வியில் இவற்றின் முக்கியத்துவம் நேர் தலைகீழ் வரிசையில் இருந்தாகவேண்டும். இவற்றுக்குச் செலுத்தப்படும் உழைப்பும் அதே வரிசையில் இருந்தாகவேண்டும். சமூகத்தின் மிகச்சிறந்த மூளைகள் முதலில் கலைக்கல்விக்கும் அதன்பின் அறிவியலுக்கும்தான் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு சமூகத்தின் கனவுகளை வடிவமைப்பவன், கொள்கையை வகுப்பவன் கலைக்கல்வி கற்று வெளிவருபவனே. நானறிந்தவரை வளர்ந்த நாடுகளில் அந்நிலைதான் உள்ளது.

இங்கே அப்படி இல்லை என்பதனால்தான் நாம் வெறுமே தொழில்நுட்ப ஊழியர்களை மட்டும் உற்பத்தி செய்யும் சமூகமாக இருக்கிறோம். அந்த ஊழியர்களை நம் நாட்டுக்காக பயன்படுத்திக்கொள்ள நமக்கு தெரியவில்லை. அவர்களை ஏற்றுமதிசெய்து சம்பாதிக்க மட்டுமே முடிகிறது.

என்ன சிக்கல் என்றால் நம்முடைய மிகச்சிறந்த மாணவர்கள் இளமையிலேயே தொழில்நுட்பக் கல்விக்கு ஆற்றுப்படுத்தப்படுகிறார்கள். அதன் தகவல்களை மூளைக்குள் நிரப்பவும் திருப்பி கக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். காலப்போக்கில் அவர்களின் புரிதல்திறன் மிகமிக குறைவாக ஆகிறது. ஒரு அசலான கருத்தை புரிந்துகொள்ளவே அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. அவர்களால் தகவல்களை மட்டுமே உள்வாங்க முடியும். தகவல்களை மட்டுமே சொல்லமுடியும். தகவல்களை மட்டுமே விவாதிக்கவும் முடியும். ஒருபோதும் கருத்துக்களை நோக்கி வரமுடிவதில்லை.

இதனால் இவர்களின் ரசனையும் தர்க்கத்திறனும் பரிதாபகரமானவையாக உள்ளன. நான் பார்த்தவரையில் இங்குள்ள மருத்துவர்கள் அளவுக்கு ரசனை மழுங்கிய ,மூளைத்திறன் குறைந்த மனிதர்களே இல்லை. ஒரு சராசரி மருத்துவரிடம் நம்முடைய நோய் தவிர எதைப்பற்றியும் பேசமுடியாது. சிலசமயம் ரயிலில் ஒரே கூபேயில் அவர்களுடன் பயணம்செய்ய நேரும். அவர்கள் பேச்சைக்கேட்டால் ரயிலை விட்டு இறங்கி ஓடிவிடத்தோன்றும். சமீபத்தில் எர்ணாகுளம் சென்றபோது கூபேயில் ஓர் இருதயநிபுணருடன் பயணம்செய்தேன். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏதாவது மூளைவளர்ச்சி பிரச்சினை உண்டா என்றுகூட ஐயப்பட்டேன்.

அடுத்தபடியாக பொறியியலாளர்கள், கணிப்பொறியாளர்கள். பெரும்பாலும் அவர்களை சுந்தர ராமசாமி சொன்னது போல ‘அறியாமை மட்டுமே அளிக்கும் பரிசுத்தமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்’ என்றே சொல்லமுடியும். அவர்களுக்கு அவர்களின் துறைசார்ந்த அடிப்படைத்தகவலறிவு தவிர எதுவுமே தெரியாது.அந்த துறையிலேயே கருத்துக்களை, கோட்பாடுகளை, புதியநகர்வுகளை மிகச்சிலர் தவிர பிறரால் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான அறிவுப்பயிற்சியே அவர்களிடம் இல்லை.

ஆனால் தாங்கள் உயர்கல்வி கற்றவர்கள், அறிவுஜீவிகள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கும். ஆகவே எதையும் ஏளனம் செய்ய, அலட்சியம் செய்ய அவர்களால் முடியும். எதிலும் துணிந்து கருத்துச்சொல்ல அவர்களால் முடியும். இத்தகைய இளைஞர்களை நாம் உருவாக்கி எங்கும் நிரப்பிக்கொண்டிருக்கிறோம்.

சிலரே உங்களைப்போல சுய விமர்சனம் செய்து பார்க்க முடிகிறது. ஆனால் அதற்குள் காலம் கடந்துசெல்கிறது. நீங்கள் கேட்டதற்கு என் பதில் நடைமுறையில் இனி ஒன்றும் செய்யமுடியாதென்பதே. முப்பது வயதுக்குள்தான் எந்த துறையினாலும் அதன் அடித்தூர் பற்றி மேலேறிச்செல்லும் மன ஆற்றல் இருக்கிறது. இலக்கியவாதி என்றால்கூட முப்பது வயதுக்குள்தான் கிளாஸிக்குகளை வாசித்து உள்வாங்க முடிகிறது. அசாதாரணமான சிலரால் எல்லைகளை மீறிச்செல்லமுடியும் . சாதாரணமாக சாத்தியமில்லை.

ஜெ
----------------
நாம் ஏன் படிப்பதே இல்லை?

பிரபல மின்னூல் தயாரிப்பு மென்பொருளான மற்றும் ஒலிப்புத்தகத் திட்டமான நிறுவனர் Hugh McGuire எழுதிய “Why Can’t we read anymore?” என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் தி ஸ்ரீனிவாசன்

நாம் ஏன் படிப்பதே இல்லை?

இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பனவற்றை பல சொற்களில் நான் முன்னரே பலமுறை சொல்லியிருக்கிறேன். கூடுதலாக இதில் அறிவியல்செய்திகள்தான் உள்ளன. ஆனால் எளிமையான நேரடியான கட்டுரை,

*

வாசிப்பைப் பற்றி நான் எழுதும்போது தொடர்ந்து எனக்கு வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகளிலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். மெய்யாகவே இணையப்போதையில் இருப்பவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் மிக அறிவார்ந்த ஓர் உலகில் இருப்பதாகக் கருதிக்கொள்கிறார்கள். அதோடு வாசிப்பை கைவிடுவதனால் தாங்கள் இழப்பதென்ன என்று அறியாமலுமிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஒருவகைக் குருடர்கள். நிறம் பற்றி அவர்களிடம் விவாதிக்கமுடியாது. போதைகளின் இயல்பு இது.

வாசிப்பைப்போலவே இங்கே கைவிடப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் நேரடியனுபவம். மக்களுடன் களப்பணிகளில் ஈடுபட்டோ, பயணங்கள் செய்தோ, கூட்டுச் செயல்களில் ஈடுபட்டோ, எதையாவது தொடர்ச்சியாக பின் தொடர்ந்து ஆராய்ந்தோ அறிந்துகொள்வது இணையப்போதையால் மிகமிகக்குறைந்துவிடுகிறது.சென்றகாலங்களில் உண்மையான அறிவை அடைந்தவர்கள் அனைவருமே அலைந்து திரிந்து கண்டு கேட்டு விரிவுகொண்டவர்கள் என்பதை இன்றைய தலைமுறை அறிவதில்லை.

நேரடியனுபவத்தை வாசிப்பனுபவம் சந்திக்கையில்தான் உண்மையில் அறிதல் நிகழ்கிறது. அறிதலென்பது செய்திகளைத் தெரிந்துகொள்வது அல்ல. செய்திகளிலிருந்து நாம் அடையும் ஒரு திறப்பு அது. ஒரு நகர்வு. ஒரு புதிய கோணம். அத்தகைய அறிதல்களின் புள்ளிகளின் வழியாக முன்னால் செல்வதற்குப்பெயர்தான் அறிவுச்செயல்பாடு.அது நம்மை மெல்லமெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறது. நம் மொழி மாறிக்கொண்டிருக்கும். நம் தர்க்கங்கள் வலுப்பெற்றபடியே இருக்கும். நம் உள்ளுணர்வு கூர்கொள்ளும்.

இன்று, இணையத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இணையத்தினூடாக அறிவதையே இணையத்தில் திருப்பிச் சொல்வதே நிகழ்கிறது என்பதுதான்.வெவ்வேறு ஊற்றுமுகங்களில் இருந்து அறிவு இணையத்திற்கு வந்து நிறைவது மிகமிகக் குறைந்துவிட்டது. உலகளாவ கோடிக்கணக்கானவர்களை இணைத்திருக்கும் இணையவெளி ஒருவர் மூச்சை பிறிதொருவர் சுவாசிக்கும் சிறிய அறையாக மாறிவிட்டிருக்கிறது. நூல்களைப்பற்றி, கருதுகோள்களைப்பற்றி, ஒட்டுமொத்தச் சித்திரங்களைப்பற்றி பேசப்படுவது அரிதினும் அரிதாகிவிட்டிருக்கிறது. இங்கல்ல, உலகம் முழுக்க.

மிகப்பெரிய தகவல்சேகரிப்புகள், நூல்தொகுப்புகள் இணையத்திலுள்ளன. ஆனால் அவை வாசிக்கப்படுவதில்லை. அவற்றுக்குச் செல்பவர்களே குறைவு என அத்தகைய பெரும் தகவல்தொகைகளை உருவாக்கியவர்கள் பலர் என்னிடம் வருந்திச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இணைப்புச்சுட்டிகள் வழியாகவே அங்கே வருகிறார்கள். அந்த உதிரிச்செய்தியை மட்டுமே வாசித்துவிட்டுச் செல்கிறார்கள். சொல்லப்போனால் ஓர் இணையதளச் செய்தியிலுள்ள மேலதிக ஆதாரத்துக்கான சுட்டியைச் சொடுக்குபவர்களே நூற்றுக்கு ஒருவர்தான். இது என் இணையதள வாசகர்களுக்கும் பொருந்தும்.

ஐயமிருந்தால் மதுரைத்திட்டம் சைவம் போன்ற மாபெரும் தரவுத்தொகுப்புகளுக்கு எப்போதெல்லாம் சென்றீர்கள், அவற்றுக்கான சுட்டிகளை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.

ஹ்யு மெக்யூர் சொல்வதைக்கொண்டு நோக்கினால் நம் மூளையில் ஒரு செயற்கையான தூண்டுதலை அளிக்கும் ’இதமான மின்னதிர்ச்சிகளை’யே நாம் நாடுகிறோம். ஒட்டுமொத்தமானபார்வை, நடுநிலையான பார்வை, முழுமையான சித்திரம் அதற்கு உதவாது. ஒற்றைப்படையான பார்வை கொண்ட, மிகையுணர்ச்சி கொண்ட, கடும் கசப்பும் வெறுப்பும் கொண்ட அதிரடிக் கருத்துக்களே அதற்கு ஏற்றவை. அவை அதிகமாக வாசிக்கப்படுகின்றன. ஆகவே அவை மேலும் உருவாகின்றன. அவைபெருகப்பெருக அவையே எங்கும் கண்ணில்படுகின்றன. இணையத்தில்நுழையும் சராசரி வாசகன் அவற்றுக்கே பழகிப்போகிறான். அவற்றைமட்டுமே அவனால் வாசிக்கமுடிகிறது. இணையம் எப்போதுமே வசைகளால். நக்கல்களால் நிறைந்திருப்பது இதனால்தான். எப்போதுமே அது பற்றி எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவது இவ்வாறுதான்.

இவ்வாறு பற்றி எரிவதற்குத்தேவை சமகாலத்தன்மை. ஏனென்றால் அதைத்தான் மானுடமனம் உடனடியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. நாளிதழ்களிலேயே பற்றி எரிய எரியத்தான் செய்திகள் அளிக்கப்படுகின்றன. மேலும் சூடும்காரமும் தேடி இணையத்திற்கு வருகிறார்கள். அவற்றை பெற்றுக்கொண்டு மும்மடங்காக திருப்பி அளிக்கிறார்கள்.

இந்த சமகாலத்தன்மை ஒவ்வொன்றையும் பெருக்குகிறது, கூடவே ஒவ்வொன்றையும் அழிக்கவும் செய்கிறது. ஒன்றை மிகைப்படுத்திக்கொண்டால் நூறு விஷயங்களை அது மறைத்துவிடும். இன்று ஜல்லிக்கட்டு ஏன் நடந்தது என எவருக்கும் தெரியாது. கோரக்பூர் குழந்தைகளுக்காக இணையம் எரிந்தது என்பதே நினைவில் இல்லை. கும்பகோணம் பள்ளிவிபத்தில் குற்றகரமான அலட்சியத்தால் குழந்தைகளைக் கொன்றவர்கள் வழக்கை அரசு ஒழுங்காக நடத்தாத காரணத்தால் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்ட செய்தியை எவருமே அறியவில்லை. இன்றைய செய்தி மட்டுமே இன்றைய அனல். அதிலும் எது பற்றிக்கொள்ளுமோ அது மட்டும்.

இணையப் போதையடிமைகள் உண்மையில் பிறரை தாக்குகிறார்கள், அவமதிக்கிறார்கள். இன்று ஒரு கல்வெட்டு அறிஞர் தன் ஆய்வில் மூழ்கியிருந்தால் அவரிடம் ‘நீட் தேர்வால் நாடே பற்றி எரிகிறது, உனக்கு கல்வெட்டு ஒருகேடா? ‘ என்பார்கள். பெருந்தார்மீக எழுச்சியுடன் இதைச் சொல்வதாகப் பாவனைசெய்கிறார்கள். உண்மையில் ஒரு போதையடிமையின் நிலைகொள்ளாமை மட்டும்தான் இது. ஐந்தே நாட்களில் இந்த போதையடிமைக்கு நீட் தேர்வே மறந்துவிட்டிருக்கும்.

நீடித்த ஆர்வமும், தொடர்ச்சியான கல்வியும் நிகழமுடியாத சூழல் இன்று உள்ளது. அர்ப்பணிப்புள்ள எச்செயலுக்கும் எதிராக உள்ளது இணையமென்னும் போதை. அதை வெல்லாமல். கடக்காமல் எவரும் எதையும் இங்கே சாதிக்கமுடியாது.

என் இணையதளம் அடிப்படையில் ஒரு மின்னணுச் சிற்றிதழ். இதில் வரும் நீளமான கட்டுரைகளை ஆரம்பம் முதலே வேண்டுமென்றேதான் போடுகிறேன். ஒவ்வொருநாளும் கட்டுரை மிக நீளம் என எனக்குக் கடிதங்கள் வரும். இளையவாசகர் என்றால் நீளமானவற்றை ஏன் படிக்கவேண்டும் என விளக்கமாக பதில் அனுப்புவேன்.

நீளமான கட்டுரைகளே சமநிலைகொண்ட, முழுமையான நோக்கை அளிக்கமுடியும். அனைத்துக்கோணங்களையும் சொல்லமுடியும். நீளமானவையே கட்டுரைகள், மற்றவை குறிப்புகள்தான். அவை ஒற்றைப்படையாகவே பேசமுடியும். வெறும் சீண்டலை மட்டுமே அவை அளிக்கும். நீண்ட கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கமே தொடர்ச்சியாக யோசிக்கும் திறனை அளிக்கிறது. சிந்தனைத்திறன் என்பது மொழியின் கூர்மைதான். அது அத்தகைய வாசிப்பால்தான் அமையும் – இதை மீண்டும் மீண்டும் எழுதுவேன்.

ஆனால் அதற்கப்பாலும் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்ட ஓர் இளைஞர் கடைசியாக எழுதியிருந்தார். ’உள்ளடக்கம் பற்றிய ஒரு பத்துவரி குறிப்பை ஒவ்வொரு கட்டுரையின்மேலும் அளிக்கலாம்.என்னை மாதிரி பரபரப்பாக வாழும் இளைஞர்களுக்கு உதவும்’. நான் நிலைமறந்த தருணங்களில் ஒன்று அது. “ஃபேஸ்புக்குக்குப் போடா வெண்ண. ஏன்டா இங்கே வர்ரே?” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருக்கு ஒருதுளி டோபோமினை நானும் அளித்திருப்பேன்.

***
---------

3
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

இன்று அறிவியல் மற்றும் கலை கல்விக்குமிடையே உள்ள வேறுபாடு பற்றி தங்கள் பதிவை பார்த்தேன்.



நீங்கள் கூறியது போல அறிவியல் கல்வி வெறும் தகவல் குப்பைகளை மனப்பாடம் செய்வதோடு நின்று விடுவது கிடையாது.



அறிவியல் கல்வி பல நிலைகளில் இயங்குகிறது.



1 ) முதல் நிலை அதன் அடிப்படையான அறிவியல் விதிகளை புரிந்துக் கொள்வது. இவ்விதிகளை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது. இதற்குத் தேவை பகுத்தறிவு, தர்க்க அறிவு மற்றும் ஆழ்ந்த கணித அறிவு. இந்த நிலையில் தேர்ச்சியானவர் அறிவியில் விதிகளை புரிந்து அதை வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ள முடியும்.



2 ) அடுத்த நிலை புதிய அறிவியல் விதிகளை தானே உருவாக்குவது. இதற்கு கற்பனை திறன் இல்லாமல் முடியாது.



“The greatest scientists are artists as well,”

என்ற எய்ன்ஸ்தீனின் கூற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது தொடர்பான ஒரு வலைப்பதிவின் சுட்டியும்


3 ) மூன்றாம் நிலை புதிய கருத்தியல்களை உருவாக்குவது. இது அறிவியல் துறையின் பெரும் ஆளுமைகளாலே முடியும். இதற்குத் தேவை தர்க்க அறிவு, கற்பனைத் திறன் மட்டுமல்ல இந்த உலகை நீங்கள் எவ்வாறு தத்துவார்த்தமாக அணுகுகிறீர்கள் என்பதை பொறுத்தது. எய்ன்ஸ்ட்டின் போகர் இடையே நிகழ்ந்த கருத்தியல் மோதல்கள் வெறும் அறிவியல் ரீதானது மட்டுமல்ல ஆழ்ந்த தத்துவார்த்தமானதும் கூட.



அறிவியல் துறையின் பெரும் ஆளுமை தர்க்க அறிவு, கணித அறிவு, ஆழ்ந்த கற்பனைத் திறன் மற்றும் தத்துவ ஞானம் கொண்டவராகவே இருப்பார்.



அறிவியல் கல்வியை வெறும் தகவல் குப்பையாகவோ அல்லது கருத்தியல் ரீதியாக அணுகுவதோ அதை படிப்பவரை பொறுத்தே அமையும். பெரும்பான்மையான அறிவியல் மாணவர்கள் அதை வெறும் தகவல் குவியலாக அணுகுவது தான் கவலைக்கிடமான விஷயம். இது அறிவியல் துறை மட்டுமன்று எல்லா துறைக்கும் பொதுவான குறைபாடாகவே இருக்கிறது.



ஒரு நாட்டிற்கு அறிவியல் கல்வி அல்லது கலைக் கல்வி இது இரண்டில் எது முக்கியம். மேலை நாடுகளில் அறிவியல் கல்வி மீதான ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. ஆனால் இருக்கும் வேலை வாய்ப்புகள் அனைத்திற்கும் அறிவியல் கல்வி மிகவும் அவசியமாகிறது. அதனால் வேலை வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கு தகுதியானவர்கள் குறைவாகாவே இருக்கிறார்கள். இது மேலை நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கிறது. அந்த வேலை நிரப்ப வரும் ஆசிய மக்கள் மீது அங்கிருக்கும் குடிமக்களுக்கு வெறுப்பும் வருகிறது.



இதற்கு நேர் எதிர் சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆசிய தேசத்து கல்வி இருக்கிறது. இங்கு வெறும் அறிவியல் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. கலைக் கல்விக்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால் நாம் உருவாக்கும் மாணவர்களுக்கும் எந்திரங்களும் எந்த வேறுபாடும் இல்லாமலிருக்கிறது.



நம் அன்றாட வாழ்க்கையின் பொருளியல் தேவைக்கு அறிவியல் கல்வி அவசியம். இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும். ஆனால் வாழ்க்கை பற்றிய விரிவான பார்வைக்கு கலை மற்றும் தத்துவார்த்தமான கல்வி தேவை. இது எந்தக் கல்லூரியிலும் கற்க முடியாது. இதற்குத் தேவை சுயமாக கற்கும் ஆர்வம் மற்றும் நல்ல mentor அமைவது.



ஆகவே உங்கள் வாழ்க்கையின் தேவைக்கு கணிதத்தையும் அறிவியலையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சுயத்தை விசாலப்படுத்துவதற்கு நல்ல இலக்கியம் மற்றும் தத்துவ புத்தகங்கள் நீங்களே தேடி படியுங்கள். நல்ல mentor உடன் அதைப் பற்றி விவாதியுங்கள்.



மேலும் சிவா எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில் pessimist ஆக முடித்திருந்தீர்கள். அவருக்கு 32 வயதாகி விட்டதால் அவரால் அவர் வாழ்க்கையின் போக்கை மாற்ற முடியாது என்று கூறியிருந்தீர்கள்.



இதற்கு என் பதிலும் திரு . கமல்ஹாசன் அவர்கள் பதிலும் ஒன்று தான்.



“கல்வி என்பது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகே துவங்குகிறது.”



இது முற்றிலும் உண்மை. என் கல்லூரி வாழ்க்கையின் போது எனக்கு புரியாத விஷயங்கள் பல இருந்தன. ஆனால் இந்த 45 வயதில் அதைத் திரும்ப படிக்கும் போது புது கோணம் தென்படுகிறது.



கல்வி என்போது வாழ்க்கையின் ஒரு கட்டத்தோடு முடிவதல்ல. அது மரணம் வரை தொடரும் விஷயம். அது கற்பவரின் மன நிலையம் ஆர்வத்தையும் பொறுத்த விசயமே ஆகும்.



நன்றி.

சத்திஷ்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘நாம் ஏன் படிப்பதே இல்லை?’ கட்டுரை படிக்க நேர்ந்தது, தாங்கள் கூறியபடி இன்று ‘இணைய போதை அடிமைகள்’ நிறைந்த ஒரு மொண்ணை சமூகம் உருப்பெற்று வளர்ந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், அதன் ஆரம்ப வேர், இணையம் என்பது ஊடுருவாமல் இருந்த தொண்ணூருகளில் ஆரம்பித்துவிட்டது.

இப்படி நான் கூற காரணம், எண்பதுகள் வரை ஏதோ ஒரு வழியில் வாசிப்பதை கராரகவோ, பொழுது போக்காகவோ அன்றாட நிகழ்வாக்கிக் கொண்ட ஒரு சமூகக் கூட்டம் இருந்தது ( எந்த சமூகத்திலும், எந்த காலகட்டத்திலும் வாசிப்பை முற்றும் நிராகரிக்கும் ஒரு பத்து சதமானம் மக்கள் போக). ஏதோ ஒரு வாசக சாலையில் எவராவது ஒருவர் அரசியல், சினிமா, பத்திரிக்கை, வரலாறு, என புத்தகங்களை தேடி வாசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு பொழுது போக்கு என்றால் அது வானொலி அல்லது திரையரங்கம், அல்லது வாசிப்பு, அவர்கள் என்ன வாசித்தார்கள்?, அது இலக்கியமா, வார இதழா, பழைய புதினமா, புராணமா என்பது முக்கியமல்ல, மாறாக அவர்கள் ‘வாசித்தார்கள்’ என்பது இங்கே நான் சொல்ல முற்படுவது.

இந்த பழக்கம் மெல்ல மறைய ஆரம்பித்தது தொண்ணூருகளில், தொலைக்காட்சி எண்பதுகளில் வந்திருந்தாலும், கேபிள் ஒளிபரப்பு முழு மூச்சாக வந்தது அப்பொழுதுதான், பொழுது போக்க ஒரு புது பழக்கம் என ஆரம்பித்து, பின் அது அன்றாட நிகழ்வாக ஆகி பின் அத்தியாவசிய தேவையாகி, ஆழ வேரூன்றிவிட்டது.

ஆறு மணி நேர ஒளிபரப்பு, பன்னிரெண்டு மணி நேரமானது, பின் இருபத்தி நாலு மணி நேரம், பின் சானல்களின் என்ணிக்கை கூடியது, பின் வார சீரியல், பின் மெகாசீரியல், அதற்கு பின் இன்று பிக் பாஸ் வரை எத்தனை வகை போதைகள்.



இந்த போதை ஆசாமிகளுக்கு ஒரு மாற்று போதையாக கிடைத்தது இணையம், அது வரை உட்கார்ந்து ‘என் கடன் சானல் மாற்றிக் கடவது’ என ரிமோட்டும் கையுமாக இருந்தவர்களுக்கு, கையில் இணைய பயன்பாடு மேலும் போதை தேட வைத்துவிட்டது.



உண்மையில் வாசிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இருந்து அறுபட ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது.

நானும் எண்பதுகளில் பிறந்த குழந்தைதான், தொண்ணூருகளில் கேபில் சானல்களின் விஸ்வரூபத்தை கண்டவன் தான், ஆனாலும் நான் ஏன் வாசிக்கிறேன் என்று காரணம் தேடினால், அதற்கான் காரணம், தொடர்ச்சியாக வீட்டில் வாங்கப்பட்ட வாரப் பத்திரிக்கைகள், எங்கள் வீட்டின் கீழ் வீட்டில், ஒரு வயதான தம்பதியர் வைத்திருந்த பழைய அலமாரி, அதில் முழுக்க பழைய ‘பூந்தளிர்;’ புத்தகங்கள், நான் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அங்குள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்று அவர்கள் அனுமதித்திருந்தார்கள், பின் என் தாத்தா வீட்டில் இருந்த அதே போன்ற அலமாரியில் பழைய புதினங்கள், சிற்சில மாயாஜாலக் கதைகள்(விக்கிரமாதித்தன் கதைகள், ஹாத்திம் தாய்), மற்றும் நான் படித்த காமிக்ஸ் கதைகள்.



இவைகள் தான் நான் வாசிக்க ஆரம்பிக்க காரணமாய் இருந்தன, முதலில் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன், சுஜாதா என்று வாசிக்க ஆரம்பித்தேன், பின் அவர்களுக்கு அப்பால் செல்வதற்கு வழிகாட்ட ஆள் இல்லை, எதேச்சையாக தங்களது கன்னியாகுமரியை ஒரு நூலகத்தில் கண்டெடுத்தேன், அது ஒரு புதிய வெளியை காண்பித்தது, அதைப் பற்றி என் நண்பன் ஒருவனுக்கு சொல்ல அவன், தங்களது விஷ்ணுபுரத்தை படிக்கச் சொன்னான், அது ஒரு மாபெரும் உலகை விரித்தது, பின் இன்று வரை பல புதினங்கள், பல ஆளுமைகள், ஒரு முடிவிலியாக என் வாசிப்பின் பயணம் தொடர்கிறது.



எனக்கு வாய்த்த அந்த அலமாரிகளைப் போன்ற Goldilocks zone அமையப் பெறாதவர்களுக்கு, வாசிப்பு ஒரு வகை வெட்டி வேலை, அவர்களுக்கு சுஜாதாவும் , சு.ரா.வும் ஒரே வகை, அதாவது எழுத்தாளர்கள். விஷ்ணுபுரமும், சிவகாமியின் சபதமும் புராண வகை புதினங்கள்.



அவர்களுக்கு வாசிப்பின் வாசனை கூட ஆகாது, நான் முயன்று பார்த்துவிட்டேன், ஐந்தில் வளையாது விட்டதனால் இனி வளைப்பது சாத்தியமில்லை என அம்முயற்ச்சியை விட்டுவிட்டேன்.



இனி வரும் தலைமுறைக்கேனும் அலமாரிகள் செய்வது நம் போன்ற வெட்டி வேலை ஆசாமிகளுக்கு உசிதம் என நினைக்கிறேன்.

சந்திரமௌலி ராமு

எழுதியவர் : (23-Sep-17, 4:35 am)
பார்வை : 239

சிறந்த கட்டுரைகள்

மேலே