அராஜகம்

அராஜகம்

பரபரப்பாயிருந்த அலுவலகத்துக்குள், ராஜேந்திரன் கையில் அப்பாயிண்ட் மெண்ட் இருந்தும் அந்நியமாகத்தான் நுழைந்தான். என்னதான் வேலை கிடைத்து விட்டது என்னும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருந்தாலும் இப்படி பரபரப்பாயிருக்கும் அலுவலகத்துள் தனக்கு பணி இருக்கும் என்று நினைக்கவில்லை.
முன்னால் “உதவிக்கு” ஒட்டப்பட்டிருந்த மேசையில் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தன்னிடமிருந்த “அப்பாயிண்ட் மெண்ட்டை’ நீட்டினான்.
கவரில் போட்டு மூடப்பட்டிருந்த பேப்பரை உருவி படித்தவள் “அக்கவுண்ட் செக்க்ஷன்” போட்டிருக்கு. நீங்க இப்படியே நேரா போயி வலது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் போங்க. அங்க அக்கவுண்ட் செக்க்ஷன் போர்டு போட்டிருக்கும், அதுக்குள்ள நுழைஞ்சிங்கன்னா ‘ரிசப்சன்ல” ஆள் இருப்பாங்க.
பொறுமையாய் நிதானமாய் சொன்ன பெண்ணை ஆச்சர்யத்துடன் பார்த்தான், இந்த நகரத்தில் இப்படியும் ஒரு பொறுமைசாலியான பொண்ணா?
“ரொம்ப நன்றி” அவன் சொன்னதை சற்றும் காதில் வாங்காமல் அருகில் வந்த பெண் ஒன்றிடம் ‘ஹாய் அகிலா’ என்னடி ஒரு வாரமா காணோம்? உன் ஆளு கூட ஊர் மேய போயிட்டியா?
அதுவரை அவளின் பொறுமையை வியந்தவன், சட்டென முகம் சுருங்க அங்கிருந்து நகர்ந்து அவள் சொன்ன பாதையில் நடக்க ஆரம்பித்தான்.
இவ்வளவு பெரிய நகரத்துக்குள் முதன் முதலாக அலுவலகம் வந்து பணிக்கு சேர்ந்தது முதல் தடவை. இதற்கு முன் ஒரு சில கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவைகள் மிகச் சிறிய நகரங்களாகவே இருந்தன. அதை விட அந்த நகரம் இவனது சிறு வயது முதல் அறிமுகமான நகரமாகவே இருந்தது.
இந்த முறை இவனது பணிக்கு தகுந்தபடி வந்திருந்த விளம்பரம் கோயமுத்தூர் நகர ‘மையத்திலேயே’ இருந்தது. சரி அப்ளை செய்து பார்ப்போமே என்று விண்ணப்பித்து இருந்தான். மூன்றே வாரங்களில் இவனோடு சேர்த்து நான்கு பேர்களை அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்து அதே அலுவலகத்திற்குள் சேரும்படி அழைப்பித்திருந்தது.
வரவேற்பரை பெண் சொன்னபடி நடந்து வலது புறம் திரும்பி கொஞ்ச தூரம் நடப்பதற்குள் இடது புறமாக “அக்கவுண்ட் செக்க்ஷன்” போர்டை பார்த்தவுடன் உள்ளே நுழைந்தான்.
அங்கும் சின்ன நாற்காலி ஒன்று போடப்பட்டு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தன்னுடைய “அப்ப்பாயிண்ட் மெண்ட்” உறையை கொடுத்தான். பிரித்து பார்த்தவள் “ஸ்டெல்லா மேடம்” உங்களுக்கு ஆள் கேட்டிருந்தீங்கல்ல, வந்திருக்காரு. போங்க சார், அதா பாருங்க அந்த ‘கேபின்’ அதுல உட்கார்ந்திருப்பாங்க, அவங்க கிட்ட கொண்டு போய் இந்த கவரை கொடுங்க.
“ஸ்டெல்லா” மேடம் என அழைத்த பெண்ணிடம் பவ்யமாக கவரை கொடுத்தான்., அந்த கவரை வாங்கும் போதே நளினமாக வாங்கினாள். கைகள் ஒவ்வொன்றும் நீளம் நீளமாக இருந்தன, நகப்பூச்சும், விரல் நகங்கள் நீண்டும் இருந்தன.
இவ்வளவு நகத்தை எல்லாம் எப்படி உடையாம வச்சிருக்கு? ஒரு கணம் நினைத்தவன் சட்டென உதறிக்கொண்டான்.
ம்..ம்… அவள் அந்த அணைப்பாணையை வாசிப்பது போல சிறிது நேரம் பார்த்தவள், முரளி அழைத்தாள்.
அவளுக்கு எதிர்புறமாக உட்கார்ந்திருந்தவன் எழுந்து வந்தான். இவரை உன் கூட கூப்பிட்டு வச்சுக்க, மூணு மாசம் இருக்கட்டும். சரி என்று இவனை, ‘கை சமிக்ஞையில்’ அழைத்து சென்று தனது மேசையின் எதிர்புறம் உட்கார வைத்துகொண்டான்.
நாளைக்கு பக்கத்துல டேபிளை போட சொல்றேன். முதல்ல என்னென்ன வேலைகளை செய்யணும்னு சொல்றேன். இப்ப சும்மா உட்கார்ந்து நான் என்ன என்ன வேலை செய்யறேன்னு கவனியுங்க. தனது முன்னால் இருந்த கணிணியின் திரையில் பார்வையை கொண்டு போய் விட்டான்.
இவன் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். கணிணியின் முன் திரை வெளிச்சம் அவன் முகத்தில் இருந்த கண்ணாடியில் தெரிவரை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் களைத்து போய் எவ்வளவு நேரம்டா இப்படி சும்மாவே உட்கார்ந்திருப்பது? சலிப்பாய் முகத்தை குனிய முயற்சிக்க “மிஸ்டர்” இழுத்தான் எதிரில் இருந்த முரளி.
ராஜேந்திரன் சார் பவ்யமாய் சொன்னான், இப்ப முன்னாடி வாங்க, திரையில் அவனுக்கு கை காட்டியவன் இங்க பாருங்க, இன்னும் ‘அட்வர்டைஸ்மெண்ட் செக்க்ஷன்ல’ இருந்து நமக்கு வவுச்சர் வரலை, இந்த இடம் “பில் ஆகாம” இருக்கு. இப்ப நீங்க இங்கிருந்து போய் அந்த ‘செக்க்ஷன்ல’ சொல்லிட்டு வாங்க, வவுச்சரை உடனே இதுல போட சொல்லி.
சரிங்க சார் எழுந்தவன் சற்று திகைத்தான், சார் அந்த செக்க்ஷன்? அவனை உறுத்து பார்த்த முரளி இப்ப வந்த வழியிலயே போய் வெளியே கொஞ்ச தூரம் திரும்பி நடங்க, அங்க ‘லிப்ட்’ இருக்கும், அதுல மூணாவது ‘ப்ளோர்ல’ போய் ரிசப்ஷன்ல கேட்டீங்கன்னா, அவங்க யாருகிட்ட கேக்கணும்னு சொல்லுவாங்க.
சரி என்று எழுந்தவன் அவன் சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். அவன் தன்னை தாண்டி வந்த வழியே செல்வதை “ஸ்டெல்லா” உற்று கவனிப்பதை இவன் கவனிக்கவில்லை.
தடுமாறிப்போய்விட்டான், அவ்வளவு பெரிய பரபரப்பில் வந்த வழி தவறி தட்டு தடுமாறி ‘லிப்டை’ அடைந்தவன் ‘மூணாவது ப்ளோரை’ அடைந்து தேடி பிடித்து ஒரு வழியாக கண்டு பிடித்தான்.
இவன் போகும்பொழுதே இவன் கேட்கப் போவதை முதலிலேயே அறிந்தவள் போல அங்கு உட்கார்ந்திருந்த பெண் இப்பத்தான் முரளி போன் பண்ணாரு, அதை சரி பண்ணிட்டோம், சொல்லி விட்டு அவள் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.
ராஜேந்திரனுக்கு சட்டென கோபம் வந்தது. இதை “டெலிபோனிலேயே” பேசி முடித்திருக்கலாம், தன்னை எழுப்பி, இடம் தெரியாதவனை அலைக்களிக்க வைத்திருக்கிறான். நினைக்கும் போதே எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
மீண்டும் ஒரு வழியாக இவனது செக்க்ஷனை கண்டு பிடித்து முரளியின் முன் நிற்கும்போது அவன் முகம் கறுத்து போயிருந்தது.
நீங்க அதோ அந்த மேசையில உக்காந்துக்குங்க, நாளைக்கு சிஸ்டம் எல்லாம் “கனெக்ட்” பண்ணி கொடுத்துடுவாங்க, குனிந்தவாறே அவன் உட்கார போகும் மேசையை கையை காட்டினான்.
என்னடா இவன்? ஒன்றும் புரியாமல் அவன் காட்டிய மேசை முன் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவன் அடுத்து என்ன செய்வது? என்னும் யோசனையில் இருந்தான்.
அதற்குள் அங்கங்கு மேசையில் அமர்ந்து கணிணியை பார்த்து கொண்டிருந்த வர்கள் அவரவரவர் எழுந்து சென்று கொண்டிருப்பதை பார்த்தவன் எங்கு போகிறார்கள்? வியப்பாய் பார்த்தான்.
“மிஸ்டர் ராஜேந்திரன்” எதிர்புறமிருந்த ஸ்டெல்லா அழைக்கவும் பதறி எழுந்து அவள் முன்னால் நின்றான்.
இப்ப வந்த வழியே வெளியே போனீங்கன்னா கொஞ்ச தூரத்துல காண்டீன் ஒண்ணு இருக்கும். அங்க போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க. இந்தாங்க, “கார்டு” போன்று ஒன்றை கொடுத்தவள் சாப்பிட்டுட்டு இதை மட்டும் அவங்க கையில கொடுத்துடுங்க.
மறுபடியும் சுத்தும் படலமா? இப்படி நினைத்து கொண்டாலும், இந்த சமயத்தில் ஒரு டீயோ காப்பியோ குடிப்பது தெம்புதானே, ஸ்டெல்லாவை பாராட்டிக்கொண்டே சென்றான்.
அவன் போகும்போது எதிரில் முரளி டீயும் வடை ஒன்றையும் கையில் பிடித்தபடி நின்றாலும் இவனை கண்டு கொள்ளவில்லை. ராஜேந்திரனுக்கு அவன் செய்கையை பார்த்து என்னவோ போலிருந்தது. தான் புதியவன், இவன் தானே தன்னை அழைத்து இதை எல்லாம் காட்டியிருக்க வேண்டும்.
அன்று மாலை அவன் எதிரில் உட்கார்ந்திருந்த “ஸ்டெல்லா” தன் மேசையை விட்டு முன்னதாக எழுந்தவள் அவனை அருகில் அழைத்து ‘அஞ்சு மணிக்கு’ ஆபிஸ் முடிஞ்சிடும். நீங்க கிளம்பிக்குங்க, நாளைக்கு பர்சனல் டிபார்ட்மெண்டுக்கு போன் பண்ணியிருக்கேன். அங்க போய் ‘ஜாயினிங்’ புரொசிஜர்ஸ் எல்லாம் முடிச்சுட்டு வந்துடுங்க. நாளைக்கு ‘ராமய்யன்’ உங்க கூட வருவாரு, அவரு எல்லா ஏற்பாடும் பண்ணிருவாரு. நான் இப்ப கிளம்பறேன்.
அவள் அங்கிருந்து கிளம்பினாலோ இல்லையோ அங்கங்கு உட்கார்ந்திருந்த அத்தனை பணியாளர்களும் ஏதோ பெரிய சுதந்திரம் கிடைத்தது போல சட்டு சட்டென எழுந்தவர்கள் சோம்பல் முறித்தபடி கூடி பேச ஆரம்பித்தனர். அதுவும் ஆண்களை விட பெண் பணியாளர்களே அதீதமாக இருந்தனர்.
மறு நாள் ராமய்யனிடமிருந்து கிடைத்த விசயங்கள்தான் இவர்களின் நடத்தைக்கு காரணம் புரிந்தது.
ஸ்டெல்லா மிகுந்த கண்டிப்பான பெண்மணி, அவள் இருக்கும்போது அலுவலகம் அமைதியாக வேலை செய்யவேண்டும். நேற்று உங்களை முரளி அனுப்பி வைத்த பின் ஸ்டெல்லா முரளியை கூப்பிட்டு சத்தம் போட்டார்கள். இது சாதாரணமான போனில் சொல்லி செய்ய வேண்டிய வேலை, அதற்கு புதிதாக வந்தவனை அலைய வைக்க அவசியம் என்ன?
இதனால்தான் முரளி உங்களை தனியாக போக சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல “ஸ்டெல்லா” வர வர அராஜகமாக நடப்பதாக போவோர் வருவோரிடம் இங்குள்ள எல்லோரும் “போட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்’.
உங்களுக்கும் அப்படித்தானா? சிரித்தபடியே கேட்டான் ராமய்யன்.
சே..சே..சில சமயங்களில் ஸ்டெல்லாவின் மீது எரிச்சல் வந்தாலும், அவள் செய்வது நியாயம்தானே? நேற்று அவள் முரளியை திட்டியதில் என்ன தப்பு? இன்னைக்கு என்னைய உதவிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? புதுசா வந்தவருக்கு சீக்கிரம் வேலை புடிபடணும்தானே, இப்படி இருக்கறப்ப அவங்க செய்யறதுல தப்பு தோணாது.
இவனுக்கும் அப்படித்தான் அவள் மீது அபிப்ராயம் தோன்றியிருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Mar-25, 10:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 3

மேலே