நிலை
தேர் பார்க்கப் போய்விடும் ஒரு வீட்டில், ஒரு சிறுமி வீட்டிலுள்ள ஒரு வயதான மூதாட்டியுடன் தனித்து இருக்கின்றாள். அவள் அவ்வீட்டில் வேலைக்காக அமர்த்தப்படிருக்கின்ற பெண், அவள் மனப்பார்வை வழி விரிகின்றது தேரோட்டம். அவள் அனுபவத்தில் அறிந்த தேரோட்டத்தை அவள் அன்றாடத்தில் செய்ய நியமித்திருக்கும் வேலைகளினூடே சிலாகித்துக் கொள்கிறாள்.
இருந்தும் சிறுமியவள் தேரோட்டம் இம்முறை பார்க்கவில்லையே எனத் தவிக்கின்றது மனது. அன்றாட வேலைகளினூடே தந்தையை ஒருமுறை சாலை வழியூடாகவேனும் கண்டுவிடத் துடிக்கும் அவள் ஏக்கம் மனதில் ஈரம். அதற்கு மருந்து தடவுகின்றது அவ்வீட்டின் கன்றுக்குட்டியும் அவள் கால்களைக் குளிர்விக்கும் தொழுவத்திற்கான நடைபாதையும் அவ்வீட்டின் தோட்டமும். கன்று நாவினால் வருடிய அவள் கைகளாய் மனது அவ்விடத்தில் குளிர்ந்து விட்டது.
அயலவர் மட்டுமல்ல அவ்வீட்டில் இருப்பவர்களும் கூட அவளிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லையென்பது சற்று நிம்மதியாக இருக்கின்றது.
துணையாக அவளை அவர்கள் விட்டுப் போயிருந்தாலும் படுக்கையில் இருக்கும்
அம்மூதாட்டி அவளிடம் காட்டும் கரிசனம் பெரிது.
"நீ தேர் பார்க்கப் போகவில்லையா....?" என்று
ஒரு தேரோட்டத்தில் நிகழும் அனைத்து சந்தோஷங்களையும் அவள் அனுபவம் வழி நிறைத்திருக்கின்றார் கதாசிரியர். அதனைச் சொன்ன விதம் அவ்வளவு அழகு!
அனைவரும் தேர் பார்த்து இருட்டிய பின் வீட்டடைந்து, அச்சிறுமியை தேவையான பொருட்கள் வாங்கப் பணிக்க, கடைக்குப் போகும் சந்தர்ப்பத்தில் வரும் வழியில் நடை அடைந்த தேரை அவள் பார்கிறாள்.
பார்த்ததும்... அவள் தேர் வடத்தைப் பற்றி நகர்த்த முனைகிறாள். முடியவில்லை.
ஆனால்...
தேர் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறது எனும் முடிவு மிகப் பிடித்திருந்தது.
அனைவரும் தேர் பார்த்திருப்பார்கள் ஆனால் தேர் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
பெரும் நிறைவு
சிறுவயதில் சிற்சிறு சந்தோசங்களைத் தொலைத்து அதற்காக ஏங்கும் சிறுவர்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறது மனது.
'நிலை'
('சமவெளி' வண்ணாதாசன் சிறுகதைத் தொகுப்பு)
நர்த்தனி