காடு முழுவதும் இரத்தம்

மரங்களின் சரணாலயம் உங்களை அன்புடன் வரவேற்க்கிறது என்ற பெயர் பலகையை காணவில்லை..
ஓ! அப்படியென்றால் இங்கு மனிதனின் காலடி படவில்லை போலும்..
போகும் இடமெல்லாம் பறவைகளின் சந்தோஷ கானத்தையும்,விலங்குகளின் மகிழ்ச்சியான சம்பாஷணையையும் காது குளிர கேட்கிறது..
மரங்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
தங்களின் காதல் பரிசத்தில் லைத்து கிடந்தது..
மலர்களின் வாசனையை யாரும் அபகரிக்காததால் நாள் முழுவதும் இலவசமாய் நறுமணத்தை நுகர்ந்து செல்ல முடிகிறது..
தேனீகள் பூக்களில் மது குடித்தது போல் வயிறு நிரம்பி தள்ளாடி பறந்து சென்றது..
செடிகளும் கொடிகளும் சாதி பார்க்காமல் அன்யோன்யமாய் ஒன்றாய் கூடி பகிர்ந்து வாழ்ந்தது படிப்பினையாய் இருந்தது..
காட்டுக்குள் சுற்றுலா வந்து யாரையும் இடர் படுத்தாமல் மகிழ்வாய் திரும்பி கொண்டிருக்கையில்,

திடீரென பறவைகள் கூட்டம் அபாய சப்தமிட்டவாறே அலறி கொண்டு பறந்தது..
ஏதோ புது மிருகம் காட்டுக்குள் நுழைந்திருக்கும் போல என்றென்னம் ஏற்பட்டது.
அய்யஹோ!அந்த மிருகங்கள் மனித பாஷையில் பேசுவதை கேட்டதும் பகீரென இருந்தது..
மரங்கள் காற்றில் தலையசைத்தை பார்த்ததும் சம்மதம் தந்து விட்டதாய் வேரோடு வெட்டினார்கள்.
மர இலைகளிலும்,கிளைகளிலும் தேங்கி நின்ற மழை துளிகள்,வெட்டு பட்டதும் கண்ணீராய் அழுது தீர்த்தது..
ஒவ்வொரு மரமாய் வெட்டினார்கள்.

அதிலிருந்த ஒரு பறவை குடும்பத்தின் வாழ்க்கையை நிர்மூலமாக்கினார்கள்.
கூட்டை பிய்த்தெறிந்து வீடற்ற நாதியாக்கினர்..
நிழலுக்காக ஓய்வெடுக்க வந்த விலங்குகளை அச்சுறுத்தி இடம்பெயர செய்து அகதியாக்கினார்கள்.
வீழ்ந்த மரத்தடியில் வாழ்ந்த செடி கொடிகளுக்கு மரண சாசனம் எழுதினார்கள்.
மலர்கள் உயிர் நீத்து இதழ்கள் சருகானதால்,
அமிர்தம் உண்ண வழியற்ற தேனீக்கள்,
விலக்கு கழிவுகளை சாப்பிட நிர்பந்தமாயிற்றோ.
சுதந்திர காடுகளை வேலியிட ஆரமித்து மின்சாரம் பாய்ச்சினர்.
தப்பித்து வெளியேறிய விலங்குகள் தண்ணீர் அருந்த,
ஊரை ஒட்டிய ஓடைக்கு வந்து போயே ஓய்ந்து போயின.

புதிதாய் திருமணம் செய்த ஆண் யானை ஒன்று,மறுவீடு சென்று இரவில் திரும்பி இருந்தது.
மனைவிக்கு நுனி கிளை பிடிக்குமென்று ஆள் அரவமற்ற நேரத்தில் தினமும் செல்லும் வழித்தடத்தில் என்னற்ற கனவுகளை சுமந்து சென்றது..
மரக்கட்டையை பாதுகாக்க மின்சார வேலியை மனிதன் பின்னியதை யார் அறிவார்.
நேரம் தாமதித்ததை பொறுத்து கொள்ள இயலாமல் இருளை விலக்கி கொண்டு வெளிச்சம் படர துவங்கியது,
காத்திருந்த பெண் யானையின் இதயம் படபடக்க துவக்கியது..
தேடி சென்று வழியிலே ஈக்களும்,வண்டுகளும் ரிங்காரமிட்ட படி சுற்றி வந்ததை பார்த்து திடுக்கிட்டு நின்றது.
ஆசை கனவன் அன்பின் தலைவன், தும்பிக்கையில் நுனி மரக்கிளையுடன்,
மின்சாரத்தால் கரியாக்கப்பட்ட கருப்பு உடலை கண்டதும்.
இருதயங்கள் வெடித்து ஓ! வென கதறி பிளிர்ந்து மூர்ச்சையற்று விழுந்ததும் காடே அதிர்ந்து ஓய்ந்தது..
ஒரு மரத்தை வெட்டினால்,அதை சார்ந்து வாழும் எண்ணற்ற உயிர்களையும் சேர்த்தே சாகடிக்கிறான் என்று சொன்னால்,
சக மனிதனையே வெட்டும் மனிதர்கள்,
யானையின் ஓலத்தை எப்படி அறிவாரோ...

எழுதியவர் : சையது சேக் (23-Sep-17, 5:39 pm)
பார்வை : 222

மேலே