இப்படிக்கு உன் உயிர்
இப்படிக்கு. . . . உன் உயிர் . . .
அம்மா,
உன்னாலே உயிர்வுற்று
உன் ஊணுள் நான்
உருவுற்றேன் . . . . . .
என் நாடி ஓட்டத்தில்
உன்நாடி அடக்கிவிட்டாய் . . .
இங்கே . . .
உன் தியாகங்களே
விளக்கேந்தி நிற்கின்றன
கருவறையின் காரிருளை
விரட்டிக்கொண்டு . . .
நின் ஒவ்வோர்
தீண்டல்களும்
பிரசவிக்கின்றன
எனக்கெனவே
புதிது புதிதாய்
பூவுலகை . . .
என்னை சுமந்தபின்னே
உன் நினைவை
இறக்கிவிட்டாய்
என் நினைவுக் கரம்பிடித்தே
களிக்கின்றாய் பொழுதுதன்னை . . .
என் கால் உதைத்த
வேதனையை
உன் புன்னகையில்
புதைக்கின்றாய்
அன்பின் மொழிதன்னை
உன் வருடலால்
எழுதுகின்றாய் . .
வளையோசை தனை எழுப்பி
என் துயிலை கணிக்கின்றாய்
உன் துயிலை
என் தலையணையாக்கி
துஞ்ச விடாது
விளிக்கின்றாய் . . .
ஈரைந்து மாதத்து
உன் தீமிதி
வேள்விதனை
தீர்த்து களித்திடவே
கருவறையின்
கடைப்படியில்
தலைகீழாய் கிடக்கின்றேன்
உன் முகம் காணும்
ஆவலோடு . . . . .
இப்படிக்கு . . . உன் உயிர் . . .
சு.உமாதேவி

