கோவம்சம் வெள்ளியங்கிரி புதினம் அத்தியாயம்-2

அத்தியாயம் - 2
இருமுகன்
மதிய வேளை . . .
சூரியன் தன் செந்நிறக் கதிர்களால் வெம்மையை பரப்பிக் கொண்டிருந்தான்.மூங்கில்கள் இல்லாத இடமே இல்லை என்று எண்ணும் அளவிற்கு மூங்கில்கள் எங்கும் திட்டுத் திட்டாக அடர்ந்து வளர்ந்திருந்தன. கொன்றை மரங்களும், புன்னை மற்றும் வேங்கை மரங்களும் தன்னுடைய இலைகளை தரையில் பரப்பி வைத்திருந்தன. சூரியன் அதன் பச்சையை உறிஞ்சிக் குடித்ததில் பழுப்பேறிய இலைகள் சருகாகி தரையில் வீழ்ந்து கிடந்தன.. வெம்மை ஏறியிருந்த வனத்தில் காற்றானது மெல்ல ஊர்ந்து வந்து தரையில் கிடந்த சருகுகளை சர்ரென்று நகர்த்திச் சென்றது.
காட்டில் விருட்சமொன்று நன்கு வளர்ந்திருந்தது. அது தன் கிளைகளை நாலாப்புறமும் நீட்டி அடர்ந்திருந்ததால் அதனடியே நிழலானது வட்டமிட்டிருந்தது. அந்த மரத்தினடியில் ஆசனமிட்டு சிவன் அமர்ந்திருந்தார். அவர் அங்கு நடப்பவற்றைக் காட்சிப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே நடந்து கொண்டிருப்பதைக் காண்பதில் சிவனுக்கு அலாதியான ஆர்வம் உண்டாகியிருந்தது. ஒரு செயல் நடைபெறும் போது அதைப் பொதுவாக நின்று காண்பவருக்கு உண்மை புலப்படுகின்றது. அதில் தொடர்புடையவர்கள் ஏதோவொன்றுடன் சார்புடையவர்கள் ஆகின்றனர். சிவன் சாட்சிப் பொருள் ஆனதற்கு அதுவும் கூடக் காரணமாயிருக்கலாம்.
மரத்தின் இரு கிளைகள் சந்திக்கும் இடத்திற்கு இடையே ஒரு சிலந்தியானது தனக்கான கோட்டையை எழுப்பிக்கொண்டிருந்தது. சிலந்தி வலையே ஆனாலும் தன் வலை அதற்கு கோட்டையாகத்தானே தோன்றும். அது தனது வலையை மிக பொறுமையுடன் நேர்த்தியாக பின்னிக் கொண்டிருந்தது. அதன் கவனம் முழுவதும் தனக்கான இடத்தை உருவாக்குவதிலேயே இருந்தது. யாருடைய கவனம் ஒன்றின் மீதே நிலைபெற்றிருக்கிறதோ அவனே யோகவான் - அதாவது யோகி ஆகின்றான். அந்த சிலந்தியின் ஈடுபாட்டைக் குலைக்கும் பொருட்டு காற்றானது வேகமாக வீசி வலையை அங்கங்கே தகர்த்துக் கொண்டிருந்தது.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலந்தி தன்னுடைய வேலையை எந்தத் தொய்வுமின்றி முழுவீச்சுடன் செயல்படுத்திக்கொண்டே வந்தது. ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலமுறை இந்த நிகழ்வானது தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் தனது கோட்டையை பலமாகக் கட்டி முடித்தது.
முயற்சி என்னும் செயலில் ஒருவன் அயராது தனது முழு உழைப்பினைத் தருவானாயின் அவனது வெற்றியானது உறுதி செய்யப்பட்டு அவனது வாழ்க்கை மேன்மையடைகிறது. செய்யும் செயலின் மீதான ஈடுபாடே ஒருவனை மேன்மையடைய வைக்கும் தூண்டுகோலாகும். வெற்றிக்கான பாதையும் அதுவே என சிவன் மனதில் எண்ணிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் கஜமுகனை தேடிக் கொண்டே பார்வதி தேவி அங்கே வந்து சேர்ந்தார்.
“இங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? கஜமுகனைப் பார்த்தித்தீர்களா?”
“இந்தப் பக்கமாகத் தான் போயிருப்பான்! எங்கேயாவது விளையாடிக்கொண்டு இருப்பான்!”
“அவனைத் தேடியே கால்கள் காணாமல் போய்விடும் போலிருக்கிறது!" என்று சிலாகித்துக் கொண்டாள் தேவி.
“நீ பெற்ற மகன் தானே? ஏன் சலித்துக்கொள்கிறாய் தேவி?”
“நான் பெற்ற மகன் தான்! யார் இல்லையென்றார்கள்? அடங்கி ஒரு இடத்தில் இருந்தால் தானே? எங்கேயாவது தீனி கிடைக்குமா என்று சுற்றப் போய்விடுகிறது! லட்டு கொளுக்கட்டை என்றால் எப்படித்தான் இருக்குமோ? யார் கொடுத்தாலும் பின்னாடியே ஓடிவிடுகிறது!”
“அவன்தான் இருமுகனாயிற்றே..!! இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருக்கின்றவனை என்ன செய்யச் சொல்கிறாய்?”
“எவ்வளவு அழகாய் இருந்த பையனை இப்படி யானைத் தலையுடன் சுற்றவிட்டது நீங்கள் தானே? இப்பொழுது மட்டும் குழந்தையென்று பாசம் வந்துவிட்டதோ? விட்டால் இன்னமும் சொல்வீர்கள்!!”
“எல்லா அம்மாக்களும் விவரமானவர்கள்! தகப்பனை பயங்கரமாகக் காட்டியே குழந்தையுடைய அத்தனை பாசத்தையும் நீங்களே எடுத்துக்கொள்வீர்கள்!! தேவி, இங்கு காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை. நடக்கின்ற எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு.”
“இதில் என்ன காரணம் இருக்கின்றது? உங்களுடைய கோபத்தினால்தான் அவனுக்கு யானைத் தலை கிடைத்தது! அதுதான் உண்மை!”
“உண்மை அதுவல்ல, கஜமுகன் ஒரு உதாரணம். அவன் உன்னைக் காக்கும் கடமையிலிருந்து தவறியதால் இப்படி நடந்ததென்று எடுத்துக்கொள்ளலாம். ஒருவன் தன் கடமையை நினைக்கும்போது வேழமுகம் நினைவுக்கு வரவேண்டும். கடமையை செய்யாமல் போனால் தேவனாய் இருந்தாலும் - ஏன் பரமேஸ்வரனே ஆனாலும் தண்டனை கிடைக்கும் என்று நினைக்கவேண்டும். கடமை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். தன்னுடைய வேலையில் எப்போதும் சரியாய் இருக்க வேண்டும்.”
“அப்படியெனில் கஜமுகன் தவறுக்கு அடையாளமா? இல்லை முன்னுதாரணமா?”
“இரண்டுமே இல்லை! அவன் ஒரு யோகி, எல்லாவற்றுக்கும் முதலானவன்! புத்தி சித்திகளுக்கு ஆதாரமானவன்! வேதங்களில் முதன்மைப் பொருளானவன்! மூலப்பொருட்களின் கலவையானவன்! அவனுருவம் மெய்ஞான பொருளின் விளக்கம்! கஜமுகன் - ஞானத்தின் அடையாளம்.”
“புத்தி, சித்தி அப்படியென்றால் என்ன?”
“புத்தியென்றால் அறிவு! அறிவென்று எதைச் சொல்கிறோம்? எந்த விஷயத்தையும் பிரித்துப் பார்ப்பது நல்லது. கெட்டதை புரிந்துகொண்டு, தெளிவான புத்தி இருக்கின்ற ஒருவனால் திறமையாகச் செயல்பட முடியும். ஒரு மனிதனுக்கு புத்தி மிகவும் அவசியம். தவறு செய்கின்றவனை புத்தி இருக்கிறதா? என்று கேட்கின்றோமே? - அதுதான் சித்தி என்பது. வெற்றி, சாதனை, நிறைவு என்று எப்படி வேண்டுமென்றாலும் இடத்துக்குத் தகுந்தாற்போல் சொல்லலாம். புத்தி நன்றாக இருக்கின்றவனுக்கு அவன் போக வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும் . அதனால் சித்தி உண்டாகும். சித்தி உண்டானால் நிறைவு உண்டாகும். புத்தி சித்தி இரண்டுமே கிடைத்தால் அதனால் ஞானம் உண்டாகின்றது. வேழமுகம் ஞானத்தின் அடையாளம்”
“இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?” ஆச்சரியம் அடைந்தாள் தேவி.
“அதுமட்டுமல்ல, அவனுடைய முழு உருவத்துக்கும் காரணம் இருக்கின்றது. கஜமுகனின் பெருவயிறு - அதுதான் தொந்தி - ஆகாயம் இருக்கின்றதே, எல்லாப் பொருளும் அதற்குள் ஒடுங்கவும், உண்டாகவும் இடம் கொடுப்பதுபோல் எல்லாம் தமக்குள் அடக்கமென்று காட்டுகின்றது. கொம்புகள் - வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை குறிக்கும். முறம் போன்ற காதுகள் ஏதாவது வார்த்தை காதில் விழும்பொழுது கெட்டவைகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகின்றது. பாதம் - ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி மாயையை அழித்து ஞானத்தைத் தர வல்லது.”
“நீங்க சொல்வது எல்லாம் உண்மைதான்! இந்த ஐந்து கரம் எதைக் குறிக்கின்றது? அதில் ஏதும் இருக்கின்றதா?”அவசரமாக இடைமறித்தாள்.
“நானும் அதைத்தான் சொல்ல வருகின்றேன்! பெண்களின் ஆர்வத்தை அடக்க ஏதும் கண்டுபிடிக்கவேண்டும். கஜமுகனின் ஒரு கை பாசத்தைக் கொண்டுள்ளது. எனவே அது படைத்தலைக் குறிக்கிறது. படைத்தல் பிரம்மாவின் அம்சம். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. அது மகாவிஷ்ணுவின் அம்சம். துதிக்கை அனுக்கிரகத்தின் அம்சம். அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. அது ருத்ரனின் அம்சம். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது.”
“இங்கு படைப்பு என்று எடுத்துக்கொண்டாலே அததற்கு என்று ஒரு குணம், ஒரு செயல் எல்லாம் உருவாகிவிடுகிறதில்லையா? வஞ்சமில்லாத மனதில் அன்பும், அன்பு இருக்கின்ற இடத்தில சந்தோஷமும் உண்டாகின்றாற்போல எல்லாவற்றிற்கும் அர்த்தம் இருக்கின்றது, உங்களை ஏன் மணந்து கொண்டேன் என்று தான் இன்னமும் தெரியவில்லை!” என்று தேவி குறும்பாக சிரித்தாள்.
இருவரும் அன்பினால் உந்தப்பட்டு சிரித்துக்கொண்டிருக்கவும், கஜமுகன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. பின்னாளில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் வெள்ளைவிநாயகர் சன்னதியாக மாறும் என்பதை அறிந்தோ என்னவோ அவனை அழைத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். அன்னையின் அணைப்பைவிட பெரும்பாக்கியம் வேறேதும் இந்த உலகினில் உண்டோ..!!!

எழுதியவர் : பூபதி கண்ணதாசன் (25-Sep-17, 11:50 am)
சேர்த்தது : boobathi kannathasan
பார்வை : 120

மேலே