கோவம்சம் வெள்ளியங்கிரி புதினம் அத்தியாயம்-1
அனைவருக்கும் வணக்கம்..!! எனது நெடுநாளைய கனவு மற்றும் முயற்சியாக இருந்த வெள்ளியங்கிரி பற்றிய புதினம் ஒன்றை எழுத துவங்கியுள்ளேன். அதன் முதல் அத்தியாயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். எந்தவகையான கருத்துக்களையும் பின்னூட்டமாக பதிவு செய்தால் எனக்கு அது பயனளிக்கும்.இதோ முதல் அத்தியாயம்
முழுமுதலோன் (அத்தியாயம் 1)
அதிகாலைப் பனிக்காற்று மெல்லியதாக மேலெழும்பி சில்லென விசும்பத் துவங்கியிருந்தது. கதிரவன் இன்னும் தூக்கம் கலையாதவன் போல மங்கலாக ஒளிரத் துவங்கியிருந்தான். மேகங்கள் மலைமுகடுகளில் வெள்ளிப் போர்வைபோல படிந்திருந்தன. பட்சிகள் குதூகலமாக முணுமுணுத்துக் கொண்டே பறந்து கொண்டிருந்தன. இரவு கொளுத்திய தீவர்த்திகள் அணைந்து புகையை மட்டும் லேசாக பரப்பிக் கொண்டிருந்தது.
மலைப்பாங்கான இடத்தில் ஒரு கூட்டம் கூடாரமிட்டிருந்தது.
கூடாரத்தை சற்று தள்ளி, திறந்த மார்புடன் ஆஜானபாகுவாய் ஒருவர் நின்றிருந்தார். உயரமான தோற்றம், வலிமையான தோள்கள், விரிந்த மார்பு, இரும்பு போன்ற கைகளில் கங்கணங்கள், செதுக்கி வைத்த தொடைகள், தண்டை பூண்ட பாதங்கள், காற்றிலே அசைந்து கொண்டிருக்கும் ஜடாமுடி, கூர்மையான பார்வை, எப்போதும் முகத்தில் தவழும் புன்னகை - இடுப்பில் புலித்தோலை ஆடையாக அணிந்திருந்தார். அவரை தங்களின் மேன்மை பொருந்திய தலைவனாக - கடவுளாக போற்றிவரும் பரிவாரமும் உடன் இருந்தது.
வெட்டவெளியில் தனது கூர்மையான பார்வையை செலுத்திக் கொண்டிருந்தார். குளிர்காற்று கேசத்தின் ஊடாகச் சென்று அலையவிட்டபடி இருந்தது. அவருடைய பார்வையிலும் முகத்திலும் ஏதோவொரு இனம்புரியாத ஆனந்தம் உண்டானதாகவே தோன்றியது. யாருக்குத் தெரியும்? உலகையே தன் அசைவில் வைத்திருக்கின்ற ஒருவரின் திருவுள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணத்தை உணர்ந்தவர்கள் யார்தான் இருக்கக்கூடும்? யாருமற்ற இடத்தில் இருள் சூழ்ந்திருப்பதுபோல, மனதிலே பற்பல எண்ணங்கள் தோன்றுகின்றன.
உறக்கம் கலைந்து மெல்ல வெளியே வந்த பெண்ணொருத்தி அவரை பார்த்து அருகில் வந்தாள். அவள் சர்வ லட்சணம் பொருந்திய பெண்ணாக விளங்கினாள். வட்டமான முகம் நிலவைப்போல இருந்தது. நீண்ட கூந்தல், பொன்னை ஒத்த மேனி, மிக நேர்த்தியான உடலமைப்பு, தீட்சண்யமான பார்வை, பட்டாடை உடுத்தி பார்ப்பவர்கள் கையெடுத்து வணங்கும் தோற்றம். அவள் தேவகன்னிகையாகவே இருக்க வேண்டும். சர்வ வல்லமை பொருந்திய ஈசனுடன் யார் இருக்கக் கூடும்? தட்சனின் மகள்தான்! வேறு யார்?
“அப்படி இந்த வெட்ட வெளியில் என்ன தான் தெரிகிறது? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே?”
“எதுவுமே இல்லை என்பதை புரிந்து கொள்ளத்தான் இந்த உலகமே சுற்றிக்கொண்டு இருக்கிறது!.”
“அடடா! ஆரம்பித்து விட்டீர்களா? புரியாதது போல் பேசுவதில் உங்களை யார் வெல்ல முடியும்?”
“எதுவுமே இந்த வெற்று வெளி போலத்தான்! எப்போது மனம் வெற்றுவெளி ஆகின்றதோ, அப்போது தான் எல்லாம் கடந்த நிலை உருவாகின்றது!”
“புரிகிறது! ஆனால் ஒவ்வொருவரையும் சோதிப்பது தாங்கள் தானே? அதனால் தானே கஷ்டங்கள் வருகின்றது?”
“உண்மைதான், நெல்லைப் பதர் மூடி இருப்பது போல ஒவ்வொரு மனத்திலும் அசுத்தம் இருக்கின்றது. பதர் நீக்கினால் அரிசி கிடைக்கும். அது போல அசுத்தம் நீக்கினால் தான் ஞானம் கிடைக்கும். அனைத்தும் சாதாரணமாக கிடைத்துவிட்டால் அதன் அருமை புரியாது! அதற்குத் தான் சோதனை!”
“மற்றவர்களை சோதிப்பது சரி! என்னையுமா சோதிப்பீர்கள்?”
“என்ன சொல்கிறாய் தேவி?”
“ஆம்! நாம் இந்த மலைக்கு வந்து சேர்ந்து நான்கைந்து நாட்களாகிவிட்டன. இன்னும் இந்த கூடாரத்துக்குள் எவ்வளவு நாட்கள் இருப்பது?”
“இந்த இடம் இப்போது வெட்டவெளியாய் மரங்கள் அடர்ந்த கானகமாய் இருக்கின்றது. இன்னும் சில நாட்களில் புகழ்பெற்ற இடமாய் மாறப்போகின்றது!. அதைப் பார்க்கத்தான் போகின்றோம்!”
“என்ன? பார்க்கப் போகின்றோமா? அப்படியெனில் இனி இங்கு தானா?..!!”
“ஆம், தேவி” என்றார் நமட்டு சிரிப்புடன்.
“இந்தக் காட்டுக்குள் இருந்துகொண்டு நான் என்ன செய்வது? எதோ நகரமாய் இருந்தால் கூட இனிமையாக பொழுதைப் போக்கலாம்”
“”உனக்குள் இருக்கின்ற சாதாரண பெண்ணின் குணங்களைத்தான் நான் நிரம்பவும் விரும்பு கின்றேன். அதுதான் உன்னைத் தேட வைக்கின்றது. எங்கு இருந்தால் என்ன? உனக்குத் தேவையானதைச் செய்து தர நான் இருக்கின்றேனே..! இல்லையென்றால் சும்மா விட்டுவிடுவாயா என்னை?
“என்னை கிண்டல் செய்யவில்லையென்றால் உங்களுக்குப் பொழுதே போகாதே?”
“விளையாடுவதுதானே என் வேலை” எனக் கண்ணடித்தார்.
“அதுதான் தெரியுமே, நீங்கள்தான் ஒருத்தர் விடாமல் திருவிளையாடல் செய்கிறவராயிற்றே?, இங்கே என்ன திட்டம் போட்டுக் கூடாரம் போட்டீர்களோ?”
“பெண்ணிடம் இரசியமா?” என்றார் நக்கலாக.
“நீங்கள் என்னவோ செய்யுங்கள்! என்னை வம்பில் மாட்டி விடாமல் இருந்தால் அது நான் செய்த புண்ணியம்!
“என்னுடைய வேலையில் உனக்கு பங்கு இல்லையென்றால் எப்படி சக்தி?”
“ஓஹோ..! அதற்குத் தான் ஏழுமலை ஏறி வந்திருக்கின்றோமா? அப்படி என்ன இருக்கின்றது இந்த மலையில்?”
“இது சாதாரண மலை இல்லை, இந்த ஏழுமலைக்குத் தனி வரலாறும் சக்தியும் உண்டாகப் போகின்றது. பல முனிவர்களும், மகான்களும் உருவாகின்ற புனிதமலையாய் மாறப் போகின்றது. மக்களுக்கு நோய் தீர்க்கும் மதுரமாய் மாறப் போகின்றது.”
“அப்படியெனில் இன்னொரு கயிலாயமா?” ஆச்சரியம் குறையாமல் கேட்டாள் தேவி.
“தென்னாட்டவருக்கு இதுதான் கயிலாயம். எல்லோரும் இதனை தென்கயிலாயம் என்றும் வெள்ளியங்கிரி என்றும் அழைப்பர்” என்றார்.
அவர்களது பரிவாரம் தங்கிய இடம் பூண்டி எனப்பெயர் அடைந்து கயிலாயத்திற்கான வாயிலாகவும் நிலைபெறும் என நினைத்துக்கொண்ட முழுமுதலோனின் குரல் மலையெங்கும் ஓங்கி ஒலித்தது.
“வெள்ளியங்கிரி”.