குமரம்மாவின் பட்டப்பெயர்கள்

மாடி வீட்டு மகேந்திரன்,
பெரிய வீட்டு பெரியநாயகி,
பூந்தோட்ட வீட்டு புஷ்பா;
இவர்களுக்கு நடுவில் இன்னும்
குடிசைக்காரியாகவே வாழ்ந்து வந்தாள் குமரம்மா.

புடலங்காய் தொடும் கைகளை மட்டும்
நேர்த்தியாக கீறிவிட்டு;
அவளின் வெளுத்த வெள்ளை புடவையை
கூறுபோடாத அவள் வீட்டு கருவேலவேலி
வாங்கி தந்த பெயர் ‘முள்ளுச்செடிக் கிழவி’.

தன் குடிசையையும்
அதைச் சார்ந்த நிலத்தையும்
கூறுபோட எண்ணும் குள்ளநரிகளை
வெறுங்கையால் விரட்டும் குமரம்மாவால்
சோற்றுக்கையால் காக்கா ஓட்ட முடியவில்லையாம்;
கருமி என்று கடிந்தன சொந்தங்கள்.

வீட்டு வேலைகள்,
காட்டு கைகாரியங்களை
சொடுக்கு கொடுத்த பொம்மை போல
முடித்துவிடும் அவளின் நாள், நாள்தவறாமல்
நான்கு மணி பன்னீர் சோடாவை நோக்கியே நகர்கிறது.
கடைத்தெருவில் மட்டும் அவள் பெயர் “பன்னீர்சோடா அம்மா”.

பகலெல்லாம் பல உருவங்களாய் உலாவரும் அவள்,
இரவில் கட்டாந்தரையில் கால் நீட்டி அமர்ந்து
நாள் தொலையாமல் நினைப்பது ஒன்றைத்தான்.
எண்ணிக்கை மறந்த வருடங்கள் முன் கடைத்தெருவில்
தொலைந்து போன அவள் தம்பியைதான்.

“அவனுக்கு இந்த குடிசைய விட்டா வேறெந்த திக்கு தெரியும்”,
என்று முணுமுணுத்து விட்டு, அவனுக்காக
தன் ஆயுட்காலம் பற்றி விதியிடம் சமரசம் பேசிவிட்டு,
இரவில் மட்டும் அசட்டு அக்காவாகவே உறங்குகிறாள்
குமரம்மா.

எழுதியவர் : ஹேமலதா (27-Sep-17, 12:47 am)
பார்வை : 2774

மேலே