கதவுகளுக்கு நன்றி
காவல் தெய்வங்களின் தூதுவனே!
கள்ளங்கபடமற்ற பிள்ளைதானே என்று
அழைப்பு மணி அடித்துவிட்டு ஓடிய என்னை
காட்டிக்கொடுக்காதற்கு நன்றி.
கல் மண்ணன்றி வேறறியா என் கால்களை
உன்னை மிதிக்க அனுமதித்து
பறக்க கற்றுக்கொடுத்ததற்கு நன்றி.
கட்டுக்கடங்காமல் காதலில் தறிக்கெட்டு அலைந்தபோது
என் மீதன்றி உன் மீது, கோழைத்தனமாக
என் காதலின் பெயரைப் பச்சைக்குத்தியதை
பொறுத்ததற்கு நன்றி.
அந்தக் காதல் காலம் கடந்தப்பின்னும்,
கிறுக்கல்களை அழிக்காமல் சுமந்து நிற்க்கும்
உன் நம்பிக்கைக்கு நன்றி.
நான் வளர்ந்து கெட்டு,
இடிந்து விழுந்து அழுதபோது
என் கண்ணீரை கண்ணியம் கருதி
வெளியுலகத்திற்கு காட்டாததற்கு நன்றி.
ஏழை உயிர்க்கு மரக்கதவு,
தங்க நகைக்கு இரும்புக்கதவு
என மனிதன் உன்னை வகைபடுத்தினாலும்;
காலன் முதல் காதலன் வரை
பேதமை பாராமல் நிறுத்திவைக்கும்
உன் வாய்மைக்கு நன்றி.
மனிதக் கோபத்தின் வடிகாலே!
அம்மனிதன் இறந்தப்பின் அவனுடன் எரிவது
விறகுகள் அல்ல,
சிறு சிறு துண்டுகளாய் வெட்டப்பட்ட
அவனுடன் வாழ்ந்த கதவுகளாகிய நீங்கள்.