கவிதை திருவிழா - பெய்யென பெய்தது மழை

பெய்யென பெய்தது மழை..!


உறக்கம் கலைந்‌தும் விடலை கனவுகளில்.....
ஏரில வெட்டுகுழி ரொம்பிடுச்சாம்...
கருவேல வேர் நனைந்து போய் இலை துளுத்துகிச்சாம்..
பச்சைமலை அருவிதண்ணி செந்தண்ணியா வந்துகிட்டு இருக்காம்..
ஊர் பாலம் மேல உபரியா நீர் போவுதாம்...
அண்ணன்..என் காதில்..இன்னைக்கு ஸ்கூல் லீவ்.. வாடா தண்ணி பாக்க பாலத்துக்கு போவோம்...
ஊரே தண்ணி பாக்க போக அரைக்கால் டவுசர் நனைய தண்ணீரை இறைத்து கொண்டே ஓடுகிறோம்..
அங்கே....
சாலைகள் இப்பொழுதாவது சீரானோம் என்ற சந்தோசத்தில் தன் பள்ளங்களை மழைநீரால் நிரப்பி கொண்டது.....
இருகரைகள் முழுக்க வெகுசனத்தின் ஆர்ப்பரிப்பு...
சத்தமே இல்லாமல் சறுக்கிகொண்டு செல்கிறது செந்தண்ணி..
நீர் வடியும் வரை வரை இனி அக்கரையில் இருக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டியது இல்லை...
சிறார்கள்...கும்மாளத்தில்..!
அம்மாவின் சேலைகொசுவத்தினில் ஒளிந்து நின்று பார்க்கும் எதிர் வீட்டு
மழலை...மருண்ட பார்வையோடு..!
தூவானத்தின் தூறல் மறைக்க..தாவணிகள் தலைப்பாகையாய் மாற
வளரிளமங்கைகள்..நாணத்தில்...!
இனி எப்படி வியாபாரத்துக்கு போவேன்..என
அன்றாடங் காய்ச்சியின்...அங்கலாய்ப்புகள்..!
இன்றைக்காவது தன்னோடு கணவன் இருப்பானே..
வியாபாரியின் மனைவிமார்கள்...காதலோடு..!
இந்த மழைக்கு காரணம் கூட எமது கட்சி தான்...அரசியல் பேசும்
கரைவேட்டிகள்...அகம்பாவத்தோடு..!
இனி எப்பொழுது பார்ப்போம் என பரிதவிப்பில் இருகரையிலும்...
காதலர்கள்....ஏக்கத்தோடு..!
ஒரு மழைக்கே மேம்பாலம் தரை பாலம் ஆனதை பற்றி..
வெகுசனம்..கோபத்தோடு..!
ஒப்பந்தக்காரர்கள்...கவலை இன்றி..!
வேலைக்கான நேர்காணல் இன்று...தவறி போச்சே..
பட்டதாரி அழுகையோடு..!
கருக்கல் கூடுகிறது...வெகுசனம் மழையை எதிர்நோக்கி கலைகிறது...
நானும் அண்ணனும் தேடி வந்த அப்பனின் குடைக்குள் அடைக்கலமானோம்..
எத்துணை கலவையான உணர்வுகள் இருந்தாலும் எனக்கென்ன வந்தது...
பெய்யென பெய்தது மழை..!
விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாய் மாறிய அவலம் தெரியாமல்..?

எழுதியவர் : மணிவண்ணன் (27-Sep-17, 10:52 am)
பார்வை : 182

மேலே