புவியும் தாயும்
புவியும் தாயும்
யுகம் யுகமாய்
புற்கள் முதலாய்
புதல்வர்கள் வரை
எதுவானாலும்
எவரானாலும்
நீக்கமற
தாங்கி மகிழ்கிறது
புவி.
நேற்றைய
தலைமுறைகள்
முதல்
இன்றைய
தலைமுறைகள்
வரை
நேசித்தாலும்
துவம்சித்தாலும்
தலைமேல் வைத்தே
கொண்டாடுகிறது
புவி.
மலைகளையும்
காடுகளையும்
நதிகளையும்
கடல்களையும்
அணைத்து
அமைதி
கொள்கிறது...
ஓய்வின்றி
தொய்வின்றி
புவி.
மனிதனைச் சுமக்கும்
கால்கள்...
வாழ்நாளின்
கால்பங்கு
கணப்பொழுதுகளை சுமந்ததையே
சுமையென்கின்றன.
அரைநூற்றாண்டு
கடக்கும்
போது
துணை
தேடுகின்றன.
கரங்களின் பணியை
கால்களும்
கால்களின் பணியை
கரங்களும்
செய்துகொள்ள
ஒப்பந்தம்
போட்டால்
பந்தம்
போகும்.
இங்கு
யாரை யார்
சுமந்தாலும்
யார்மீது
யார்
நின்றாலும்
கடனாகிப்
போகிறது.
கடன் என
பாராதது
புவியும்
சுமையென
கருதாதது
தாயும்
மட்டுமே.
புவியுள்ள வரை
தாயும்
தாயுள்ள வரை
புவியும்
தாங்கியும்
ஏந்தியும்
உழலும்
உலகம்.
- சாமி எழிலன்
28 09 2017
9080228609