காந்தியும் நாமும் என்ன செய்துகொண்டிருக்கிறோம்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி . மகாத்மா காந்தியின் பிறந்தநாள்.

தேச தந்தையை பெருமைபப் படுத்துவதற்காக சுதந்திரம் பெற்ற நாம் நம் பண நோட்டுக்களில் அவர் முகத்தை பதித்துக்கொண்டோம்.

தவறாமல் சுதந்திர தினம் அன்று மட்டும் காந்தியின் வரலாறு பேசிக்கொள்கிறோம். போட்டிகள் நடத்தி ஒரு கலக்கு கலக்கி விடுகிறோம். அனால் அவர் அன்றும் கலங்கவே கூடும் . என்றும் நீங்காத இந்தியாவின் அழுக்குகளுக்காக என்றும் நினைவுகூரப்பட வேண்டிய காந்தியின் கொள்கைகள் அன்று மட்டும் நினைவு கூறப்படுவதற்காக அவர் கட்டாயம் கலங்கவே கூடும்.

சத்தியத்தின் தந்தை சத்தியாகிரகத்தை வழிநடத்திய நம் தேச தந்தை ஒட்டிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுக்கள் சத்திய வழிகளில் பரிமாறப்படுகிறதா. எத்தனை பதுக்கல்கள் , எத்தனை பினாமி போர்வைகள் ,எத்தனை லஞ்சம், எத்தனை அசிங்கம் என அவர் அந்தரங்கமாக பரிமாறப்படும் அந்த நோட்டுகளில் அசிங்கப்பட்டு போகிறார்.

நம் ருபாய் நோட்டுக்களில் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் அவர் நிச்சயம் ஊழல் என்ற பெயரில் அவர் முகம் பெட்டி பெட்டியாக பரிமாறப்படும் போது அந்த பெட்டிக்குள் மூச்சி திணறி போகிறார். காந்தியின் கனவுகளுக்கு கருப்பு வண்ணம் அடித்து அவர் கனவுகள் கசக்கப்பட்டு கருப்பு பணமாக அவர் பதுக்கப்படும்போது அவர் கட்டாயம் கண்ணீர் விடுகிறார் .

எல்லா சாமானியன் கையிலும் உழைப்பாளியின் கைகளிலும் தவழ்ந்து உழைப்பின் வியர்வைகளை சுவாசித்து துயில வேண்டிய காந்தியின் தாள்கள் சில மேல் தட்ட வர்க்க சுயநலக்கார பணக்கார கைகளுக்குள் கட்டு கட்டாக அடுக்கிவைக்கப்பட்டு அந்த விரல்களுக்குள் நசுங்கி கிடக்கும் போது தூங்க முடியாமல் விழித்தே கிடக்கிறார். விழித்து விடாதா இந்த தேசம் என்ற எண்ணத்தோடும் எல்லாமும் எல்லாருக்கும் என்ற சமத்துவ நேச மலர்கள் இந்த மனங்களில் மலர்ந்துவிடாதா தனக்கு மட்டும் என்ற இந்த பேராசை இல்லாதா இதயம் இவர்களுக்கு இருக்கக்கூடாதா என்ற வலியோடு தவிப்போடு தூங்காமல் விழித்தே கிடக்கிறார் அவர்.

காந்தியின் கொள்கையில் ஒன்றான அகிம்சையை மட்டும் கட்டிபிடித்துக்கொண்ட இந்தியா அதை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தியா அகிம்சை நாடு என்று அடையாளம் சூட்டிக்கொண்டது . அடையாளத்தை பெற்றும் கொண்டது. அவரின் சத்திய நெறிகளை நம் இந்தியா முழுமையாக தனக்குள் எடுத்துக் கொள்ளவில்லையே .இன்றும் கூட இது தானே உண்மை. அவரின் சத்திய நெறிகளை நம் சந்ததி அணு அணுவாய் தங்கள் அணுக்களுக்குள் எடுத்திருக்க வேண்டாமா . அப்படி எடுத்திருந்தால் இன்று என் இந்தியா எப்படி இருந்திருக்கும்!!!

நாட்டின் உயர்மட்ட துறையிலிருந்து கடைகோடி துறை வரை எங்குப் போனாலும் எங்கு நோக்கினாலும் காசைத் தள்ளினால் தான் காரியங்கள் நடக்கும் என்று பல்லை இளித்துக் கொண்டே சொல்லும் ஏஜெண்டுகளின் ஆதிக்க உலகத்தில் அடிமை மக்களாய் நாம்,

ஊழலுக்கு காரணமான அந்த அதிகாரியிலிருந்து இந்த ஏஜென்ட் வரை வீசப்படும் காந்தி அவர்களுக்கிடையில் மேசைக்கடியில் உருண்டு பந்தாடப்படுகிறார். நாம் மட்டும் என்ன குற்றமில்லாத உத்தமர் என்று ஒளிந்து கொள்ள முடியுமா. சாமானியன் என்ன செய்ய முடியும் என்ற சாக்கு போக்கு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு என்ன செய்ய என்ற சலிப்பான புலம்பலோடு சட்டை பாக்கெட்டுக்குள் கையைப் போட்டு காசை எடுத்து குடுத்து விட்டு அடுத்த வேலைக்கு செல்ல நினைக்கும் நம் விழிப்பற்ற சமூக சிந்தனையற்ற சுயநல ஓட்டத்தில் தான் இந்த அசிங்கமான ஊழல் கலாச்சாரம் ஆரம்பிக்கிறது. ஆழமாக வேர் விடுகின்றது.

ரமணா மாதிரி ஒரு இந்தியன் மாதிரி புரட்சி எல்லாம் பண்ண முடியாது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய நிதர்சனமான விஷயம் தான். யதார்த்தங்களுக்கு உள்ளே நுழைந்தே யோசிப்போம். ஒரு அலுவலகத்தில் இந்த காரியம் இவ்வளவு கொடுத்தால் முடியும் என்று பொடி வைத்து பேசுபவனிடம் பணத்தை திணித்து விட்டு நகராமல் நாம் கால் கடுக்க வரிசையில் நின்று தான் பார்ப்போமே . அந்த அலைக்கழிப்புகள், அதட்டல்கள்,அதிகார தோரணை செயல்கள், இழுத்தடிப்புக்கள் எல்லாம் கடந்து தான் சென்று அதிகாரிகளை சிந்திப்போம். காந்தியின் நோட்டுக்களோடு இல்லை. கண்ணியதோடும் தேவைப்பட்டால் பாரதியின் கோபக்கண்களோடும்.

இந்த உலகத்தில இன்றைக்கு தப்பு செய்றவன் எண்ணிக்கையில் அதிகம் ஆகிவிட்டான். நல்லது பேசுறவன் எல்லாம் குறைந்து விட்டதால் அவன் புத்தி இல்லாதவனாகவும் பிழைக்க தெரியாதவனாகவும் மாறி விட்ட அவலம் தான் அரங்கேறி இருக்கிறது.

ரொம்ப வழிமாறி தவறான பாதை சரி என்று நினைத்து பயணப்பட்டுக்கிட்டு இருக்கிற நாம் கொஞ்சம் திரும்பி பாக்கறதுக்குரிய நேரம் தான் இந்த காந்தி ஜெயந்தி நாள். மொத்தமாய் திரும்பிட முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பாதைகளை மாற்றுவோம். பொய்யின் வாசல் விசாலமானது எளிதில் சேர்ந்துவிடலாம் அனால் இறுதி முடிவு என்னவோ இருட்டுதான். ஆனா சத்தியத்தின் பாதை கொஞ்சம் குறுகலானது. போகுற பாதை கஷ்டமா கொஞ்சம் இருட்டா இருக்கலாம் ஆனா அது பொய் முடியிற இடம் ரொம்ப வெளிச்சமானது. அழகானது. அமைதியானது. அப்படி ஒரு இடத்தை நோக்கி பயணிக்கட்டும் நம் கால்கள் இன்று முதலாவது. அப்படி நம் இதயமும் கால்களும் இணைந்து பயணிக்கும் போது நம் இந்தியாவின் அழுக்குகளும் நம் இதயத்தின் அழுக்குகளும் உதிர்ந்து ஒரு அழகிய உலகத்தை பிரசவிக்கும் அந்த பயணம்.

இன்று காந்தியை பற்றி அறியாத காக்கைகள் அவர் மேல் எச்சம் இட்டு செல்வதைபோல தான் அவரின் முகம் பதித்த ரூபாய் நோட்டுக்களை தவறான வகையில் பயன்படுத்தும் நாமும் ஊழல் என்ற எச்சிக்குள் . நம் தேச தந்தை காந்தியை சாட்சியாய் வைத்து கொன்டே நடக்கும் ஊழல் புழக்கங்கள் ஒளிந்து போகுமா இந்த காந்தி ஜெயந்தியிலாவது என்ற கேள்வியோடு நானும் என் காந்தியும்.

எழுதியவர் : (2-Oct-17, 8:21 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 752

மேலே