பொது மகளிரியல்பு 2 - கலி விருத்தம்
யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை
வேறோர் இடத்து வெளிப்படல் நன்றாம். 51 வளையாபதி
பொருளுரை:
அகவை முதிர்ந்தவளாகிய கணிகையொருத்தி தன் மகளாகிய இளங்கணிகைக்குச் செவியறிவுறுப்பவள், ’ஏடி! யாறு போலவும், யாழ் போலவும், தீக்கடைகோல் போலவும், மலர் நிரம்பிய பூங்கொடி போலவும், மரக்கலம் போலவும், கற்புடை மகளிர் போலவும், விலங்குகள் போலவும் நின்பால் வருகின்ற காமுகரிடத்திலே நீ ஒழுகுவாயாக என்று அறிவுறுத்தினாள்; இவ்வுவமைகளின் பொதுத்தன்மை நன்றாக பின் வரும் பாடல்களில் (விரிவகையாற் கூறப்படுகிறது) விளக்கமாகும் என்பதாம்.
நெலிகோல் – தீக்கடைகோல், பாறு - மரக்கலம். பாறு என்னும் சொல் மரக்கலம் என்னும் பொருளும் உடையது என்பது இவ்வாசிரியர் இதற்கு அப்பொருளே பிற்கூறுதலாற் பொருத்தமே.