வெண்துறவி
வெண்துறவி
மகாத்மா
உன்
விலா எலும்புக் கூடுகளில்
இந்த தேசம்
இன்னமும் கூடுகட்டி வசிக்கிறது
உன்
புன்முறுவல்களோடு
ரூபாய் நோட்டுகளில்.
அன்று
மக்கள்
சுதந்திரக் காற்றை
சுவாசிப்பதற்காக
நீ
துறந்த
உனது
மூச்சுக் காற்றை
சுவாசித்தே பறக்கிறோம்
நாளும்.
உன்
விழிகளில்
ஓடிய
செந்நரம்புகள்
கண்டு
அஞ்சியோடினர்
அன்னியர்.
அன்று
ஊர்தோறும்
ஊன்று கோல்
ஊன்றி
விடுதலை
வித்துக்களை
விதைத்தாய்...
இன்று
அவை
விருட்சமாகி
வேட்டைக்காடானது
பெரும்பாலான
அரசியலருக்கும்
ஆட்சியருக்கும்.
அன்று
ஆசையைத் துறக்க வேண்டும்
என்றவர்
வரிசையில்
ஏழை விவசாயிக்காக
வெண்துறவி
ஆனாய்
இன்னொரு
புத்தனாய்...
இன்று
இருந்ததையும்
இழந்து
நிர்வாணத்தை
அணிந்துள்ளனர்
எம்முயிர் விவசாயத்
தோழர்கள்.
மனித மனங்களை
இணைத்து வைக்க
முயன்றிட்ட
முதல்
மனித
இணையம்
நீ.
தேசத்தைக்
கூறு
போடுவதற்கு
எதிரான
உன்
குரல்
இன்றும்
குமரிக் கடல்
அலைமீதும்
இமயத்தின்
பாறை அடுக்குகள் மீதும்
எதிரொளிக்கின்றது
அனாதையாக.
உன்னோடு
போராடிய
தியாகிகள் பலர்
மறைந்து விட்டனர்.
என்றாலும்
உன் பிறந்த நாளில்
மட்டும்
மது அருந்தாமல்
ஒரு நாள்
தியாகிகள்
ஆகி விடுகின்றனர்
குடிப்பிரியர்கள்.
நள்ளிரவில்
நங்கையர்
சுதந்திரமாக உலவும்
நாளே
சுதந்திர நாள்
என்றாய்.
இது
இன்றும்
ஒரு
நடுப்பகல் கனவு...
காவல்
இராணுவம்
குவிந்துள்ள
தலைநகரில்
கூட
பாதுகாப்பில்லை.
தாழ்த்தப்பட்டோரை
இறைவனின்
புதல்வர்கள் என எண்ணி
அரிஜன்
என
பெயர்
சூட்டினாய்...
அவர்கள்
கடவுளர்
கற்சிலைகள் போல்
பேசா மடந்தையர்களாகவே
மாற்றப்பட்டு விட்டனர்.
உனது
தேசத்தில்
இன்று
எழுத்துரிமை
பேச்சுரிமை
கருத்துரிமை
எல்லாம்
நீதிமன்றங்களை
நம்பியே
உள்ளது.
இன்றைய
தலைமுறைக்கு
உன்னைப்பற்றி
சிறு குறிப்பு எழுத மட்டுமே
கற்றுத் தரப்பட்டுள்ளது
என்றாலும்
அவர்கள் உள்ளங் கவர்ந்த
தாத்தா
நீ மட்டுமே.
உன்னை
மகாத்மாவாக
உணரும் நாளில்
அவர்கள்
உள்ளங்களில்
உன்
ஒருவனால்
மட்டும்
ஒளிர இயலும்.
- சாமி எழிலன்
9080228609
02 10 2017