பெண்ணாய் வாழ விடுங்கள்

பரஸ்பரம் அன்பு இல்லம் என்ற பெயர் பொறித்த காம்பௌண்ட் சுவரினை தாண்டி உள்ளே நுழைந்ததும் அந்த இடம் அப்படி இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. பத்திரிகையாளன் என்ற முறையில் எப்போதாவது இது போன்ற முதியோர் இல்லங்களுக்கும் , அநாதை ஆசிரமங்களுக்கும் நான் விஜயம் செய்வதுண்டு. போய் அவற்றை நடத்துபவர்களை சந்தித்து அங்குள்ளவர்களின் சொந்த கதை , சோக கதைகளை கேட்டு அவற்றிலிருந்து கருணை ஏற்படுத்தக்கூடிய சிலதை தேர்வு செய்து அவர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதுண்டு . இப்போது வந்தது கூட அது போன்ற ஒரு கட்டுரைக்காகத்தான்.
இதுவரை போன இடங்களிலெல்லாம் முதியோர் என்றாலே ஒரு அமானுஷ்ய அமைதி நிரம்பி இருக்கும். உள்ளே சென்றாலே முடை வீச்சம் லேசாக அடிக்கும் , அறைகளில் , படுக்கையில் கிடக்கும் மூத்தவர்களும், அவர்களின் வற்றிய தேகமும், பஞ்சடைந்த கண்களில் ததும்பிவழியும் இயலாமையும் அதுவரை இருந்த மனநிலையை சோகமாய் மாற்றி விடும். ஒரு முறை உள்ளே சென்று பேட்டி எடுத்துவிட்டு வந்துவிட்டால் அடுத்த மூன்று நாட்களுக்கு நமக்கும் வயதானால் இப்படித்தான் உருக்குலைந்து தவிக்கிற வாய்க்கு தண்ணீர் கூட தர சொந்தமில்லாமல் அனாதையாய் கிடப்போமோ என்கிற பீதியிலேயே மூளை உழன்று கொண்டிருக்கும்.
அதனாலேயே எங்கள் ஆசிரியர் இது மாதிரி கட்டுரைகளுக்கு பேட்டி எடுக்க போகச் சொன்னால் தவிர்த்து விடுவேன். வேறு யாரையாவது அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு நான் வேறு சுவாரஷ்யமான கட்டுரைகளுக்குத் தாவி விடுவேன். இன்று வேறு வழியில்லை. நானே போகவேண்டுமென்று ஆசிரியர் கேட்டுக் கொண்டதால் தவிர்க்க முடியாமல் சலிப்புடன்தான் வந்தேன்.,
ஆனால் இங்குள்ள சூழலோ நான் இதுவரை கண்டதற்கு நேர் மாறாய் இருந்தது . காம்பௌண்டின் உள் ஓரங்களில் வரிசையாக இடுப்புயர மரங்கள். இடையிடையே வண்ண வண்ண செடிகள். சுத்தமான பாதை. வெளிர் நீல வண்ண பூச்சுடன் கூடிய கட்டிடம். சுவர்களில் எளிய ஓவியங்கள். பெரிய சன்னல்களுடன் கூடிய வெளிச்சமானஅறைகள். குட்டியாய் நூலகம். அதன் நடுவே போடப்பட்ட செவ்வக மேசை மேலே செய்தித்தாள்கள் .. அவற்றை , மூக்கின் மேலே அமர்ந்திருந்த கண்ணாடிகளை சரி செய்த படியே படித்துக்கொண்டிருந்த ஆண்கள். இருவர் அலச, இருவர் பிழிய...மூன்று பெண்கள் துணிகளை காயபோட்டுக் கொண்டிருந்தார்கள். யார் முகத்திலும் வாட்டமில்லை .
இல்ல நிர்வாகியை சந்திக்க வந்ததை சொன்னதும் ஒரு முதியவர் கை குலுக்கி வரவேற்று என்னை வரவேற்பறையில் அமரவைத்தார். சிறிது நேரத்தில் நிர்வாகியும் வர... நான் வந்த விவரத்தை சொன்னேன். ஓ.. பேட்டி தானே தாராளமா தரச்சொல்றேன். என்று விட்டு அட்டெண்டரை அழைத்து " இவரை கிரிஜா அம்மா கிட்ட கூட்டிட்டு போ" என்கிறார்.
அட்டெண்டர் கொண்டு விட்ட கிரிஜா அம்மாவின் அறை கதவு லேசாக சாத்தி இருந்தது. நான் மெல்ல தள்ளி விட்டு உள் நுழைய.. மடியிலிருந்து தம்புராவை கீழிறக்கி அதை உறையிலிட்டு சுவரோரம் சாத்திவைத்துவிட்டு வந்து என்னை வணங்கி வரவேற்ற கிரிஜா அம்மாவை கண்ட நொடிக்குள் பிடித்து போனது எனக்கு. முக்கியமாய் அவரின் கூப்பிய விரல்களை. வெளிர் மஞ்சள் விரல்களுக்கு கிரீடம் சூட்டியது போல சிவப்பாய் மருதாணி.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
" பேட்டிக்கு முன்னால ஒரு கேள்வி கேக்கலாமா?"
கேட்ட அவரை , என்ன என்பது போல் பார்த்தேன் .
" எதுக்காக இந்தமாதிரி முதியோர் இல்லங்களில் எங்களை மாதிரி இருக்கிறவங்களை பேட்டி எடுத்து போடறீங்க..? படிக்கறவங்களுக்கு எங்க மேல பரிதாபம் வரணும்னா... "
" அது மட்டுமல்ல . உங்களை பத்தி படிக்கறவங்க.. வயசானவங்களை அவங்களோட முடியாத காலத்துல பாரமா நினச்சு இது மாதிரி இல்லங்களில விட்டுட்டு போகமாட்டாங்களே . அதுக்குதான் " .
" ஓ அப்போ ... என் சோக கதையை கேக்கத்தான் வந்திருக்கீங்க..."
" அப்படியில்ல. " என்று நான் மெல்லிய குரலில் மறுத்ததும் .. கிரிஜாம்மா சிரித்தார்.
" நீங்க என்ன கேக்கணுமோ கேளுங்க.. நான் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்." என்று ஆசிரியர் சொல்லும் கேள்விக்கு விடை சொல்ல காத்திருக்கும் குழந்தை போல என் முகத்தை பார்த்தார் கிரிஜா அம்மா.
" எப்படி இந்த ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தீங்க... யார் கொண்டு வந்து விட்டாங்க ? அதிலிருந்து சொல்லுங்க.." என்று விட்டு நான் என் மொபைல் வாய்ஸ் ரெகார்டரை ஆன் செய்தேன்.
" என்னை யாரும் பாரம்னு நினச்சு இங்க கொண்டு வந்து தள்ளிட்டு போகல. நான்தான் என் உறவுகளையெல்லாம் பெரும் பாரமா நினச்சு விட்டா போதும்டா சாமின்னு சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். என்னை யாரும் தேடிடக்கூடாதேன்னு இந்த மாதிரி ' தேசாடனம் போறேன். கோயில் கோயிலா சுத்த போறேன். என்னை தேட வேண்டாம்.' னு துண்டு ஸீட்டுல எழுதி வச்சுட்டு இங்க வந்துட்டேன் . " என்ற அந்த அம்மாவை ஆச்சர்யமாக பார்த்தேன்.
கண்களில் ஆழத்தையும்.. உதட்டில் புன்சிரிப்பையும் நிரந்தரமாய் ஒட்டி வைத்ததுபோல் முகம். வயது 50 ஐ தாண்டிய தோற்றம். சிறு வயதில் மிக அழகானவராக இருந்திருக்கலாம். அவர் கண்களில் தீட்டி இருந்த மையும்...நெற்றியின் நடுவில் வைத்திருந்த வட்ட குங்குமமும் அவர் முகத்துக்கு தெய்வீக தோற்றத்தை தந்தது. நான் அவரிடம் கண்டதில் பெரிய ஆச்சர்யத்தை தந்தது அவரின் கால்களில் இருந்த கொலுசு. அடுக்கி வைத்தாற்போல் கொஞ்சும் சலங்கைகள் நிறைய வைத்த ஜல் ஜல். இந்த வயதில் நான் இதுவரை கண்ட யாரும் இப்படி அணிந்து நான் பார்த்ததில்லை
" ம்.. அடுத்த கேள்வி... ? "
" இல்லம்மா .. நான் கேள்வி கேட்டு நீங்க சொன்னா அது ரொம்ப பார்மலா இருக்கும் உங்க அனுபவங்களை நீங்க சொல்லிட்டே வாங்க.. நான் ரெகார்ட் பண்ணிக்கறேன். அப்புறம் எடிட் பண்ணிக்கறேன்."
கிரிஜா அம்மா சொல்ல துவங்கினார்
" பெண்களை பத்தின உயர்வான எண்ணங்கள் எதுவுமே இல்லாத பிற்போக்குத்தனமான மனிதருக்குத்தான் நான் மகளா பொறந்தேன்.
பொதுவா பொண்ணுங்கனா அப்பாக்களுக்கு பசங்கன்ன அம்மாக்களுக்கும் ரொம்ப பிடிக்கும்னு சொல்லவங்க. எங்க வீட்ல அப்படியெல்லாம் இல்ல. தான்தான் பெரிய புத்திசாலின்னு நினச்சு ஆட்டம் போட்ட எங்கப்பா ஒரு அடிமுட்டாள். அவரை பொறுத்தவரை பொண்ணுங்க எல்லாம் விறகடுப்புல வேகவும், அண்டா நிறைய தண்ணி விளாவவும் , அழுக்கு முதுகை தேய்ச்சு விடவும் தான்னு நினைக்கற ஆம்பள திமிர் நிறைஞ்ச ஜென்மம். . முரட்டுத்தனத்தோட மொத்த உருவம். அம்மா.. ஒரு பாவப்பட்ட ஜீவன்.
ஒரு பெண்ணை உடல் அளவுலதான் எல்லோரும் பெண்ணாய் பாக்கறாங்க. உணர்வளவுல இல்ல. அப்பா அம்மா கூட இருக்கிற வரை மகளா பாக்கப்படறா. கல்யாணம்னு ஒன்னு ஆனதும் மனைவியா பாக்கப்படறா... அவளுக்கு குழந்தைகள் பிறந்ததும் அம்மாவா பார்க்கப்படறா . அவள் குழந்தைகளுக்கு கல்யாணம் ஆனதும் மாமியாரா பார்க்கப்படறா . அப்புறம் பேரகுழந்தைகள் ஆனதும் பாட்டியா பார்க்கப்படறா. ஆகமொத்தம் அவளுடைய முழு வாழ்க்கையில பொண்ணா மட்டும் பார்க்கப்படறதில்ல.
ஆண்களை போலவே எங்களுக்கும் ஆசை இருக்கும். நினச்சபடிதங்களுடைய ஆசைகாலை நிறைவேத்திக்கறதுக்கு உண்டான சுதந்திரமும் , அதுக்கு எதாவது தடை வந்தா , அதை மீறியும் நடந்துக்க ஆண்கள் தயங்கறதில்ல. ஆனா பெண்கள் நிலை அப்படியில்ல. பெருசா கூட வேண்டாம். ஒரு சாதாரணமா தோன்றக்கூடிய சின்ன சின்ன ஆசைகளைக்கூட பொண்ணுக நிறைவேத்திக்க முடியாது . அவ்ளோ தடை ஒண்ணு சொல்லட்டுமா கண்ணா . நினைவு தெரிஞ்ச வயசுல இருந்து எனக்கு கொலுசு போடறதுன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நடக்கும்போது சங்கீதமா ஜதிசொல்றமாதிரி சிணுங்கி சிரிக்கிற குழந்தை போல சத்தம் வர்ற கொலுசு போட அவ்வளவு ஆசையா இருக்கும். கேட்டா அப்பா குரைப்பார். ஏன் நீ நடக்கறதை ஊரே பாக்கணுமா? பொட்டப்புள்ளைன்னா போற தடம் தெரியாம இருக்கணும்.. ம்பார். இதுக்கு அம்மாவும் ஜால்றா. எதுத்து பேசி யார் அடி வாங்கறது . ஸ்கூல் போன காலத்துல நிறைய படிக்கணும்னு ஆசை பட்டவ நான் . நிறைய படிக்கணும். பிடிச்சதை மத குழந்தைகளுக்கு சொல்லித்தர டீச்சர் வேலை பாக்கணும் னு ஆசை. ஆனா அதுவும் கானல் நீரைப்போச்சு... டென்து முடிச்சுட்டு +௨ சேரரதுக்கே படாத பாடு பட்டேன். அழுது அடம்பிடிச்சு சாப்பிடாம இருந்து , போனா போகுதுன்னுதான் பெரிசியுங் மனசு பண்ணிதான் எங்கப்பா ஸ்கூல் போக ஆளா பண்ணினார். அப்பவே சொல்லிட்டார். ஸ்கூலோட சரி. காலேஜ் கீலேஜ்னு சேரணும்னு வந்து அடம் பிடிச்ச.. வெட்டி போட்ருவேன்னு . இதுக்கு காலேஜ் போனா அண்ணனும் ஒத்தூதுவான். என்கூட +௨ முடிச்சவங்க எல்லாம் காலேஜ்க்கு போகும்போது என்னால வீட்ல இருந்து ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டு டாடா காடாட்தான் முடிஞ்சுது. ஒரு கட்டத்துல நான் எதுக்கு இந்த வாழ்க்கை வாழறேன்னு தோணுச்சு.. நார்மலா வாழ்க்கையில விரக்தி வந்தா சாகத்தான் தோணும். ஆனா எனக்கு இன்னும் இருக்கிற காலங்களில் எனக்கு பிடிச்சா மாதிரி வாழணும்னு தோணுச்சு,, எனக்கு கிட்டத்தட்ட ௬௦ வயசாச்சு. இனி நான் நெவ்லோ நாள் இருக்க போறேன். ஒரு வயசுக்கு மேல. நாம் வாழற நாட்கள் ஒவ்வொண்ணும் நமக்கு கடவுள் குடுத்த பெரிய கோடை. அந்த கொடைல ஒரு ஒரு நிமிஷமும் சுதந்திரமா , சந்தோசமா,, எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னு நினச்சேன். இது மகன் வீட்ல இருந்தா முடியாது. மருமகள் கிட்ட சொன்னாலும் புரியாது. போகப்போற வயசுல எதுக்கு இதெல்லம்பாங்க. பேசும்போது ஆடி அடங்கற வயசு. போக போற வயசுன்னு யாராவது பேசினாலே எனக்கு கோவமா வருது. இப்டி சொல்லி சொல்லியே கடைசி நாளுக்கு உந்தி தள்றாங்க, இந்த மட்டம் தட்டற வார்த்தைகள் என் உற்சாகத்தை குப்புற தள்ளுது,.
கூடு விட்ட ஆவி போறவரைக்கும், இந்த உடம்புல யோசிக்கற மூளையும்,, பாயிர ரத்தமும்,, நரம்பு சதையும் இருக்கிற வரைக்கும் உணர்ச்சிகளும் இருக்கத்தானே செய்யும். உயிரோட இருக்கும்போதே மண்ணா,, கல்லா கிடைக்கறதுக்கு மனுஷ ஜென்மமா எதுக்கு பொறக்கணும்.
எனக்கு அழுக்கா இருந்தா பிடிக்காது. பொண்ணுக எப்பவுமே பளிச்சுனு துலக்கி வச்ச குத்து விளக்காட்டம் இருக்கணும். அதுக்காக அரை இஞ்ச் தடிமனுக்கு பவுடர் அப்பிட்டு உதடு மட்டுமே தெரியற மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கறது இல்ல. பளிச்சுனு முகம் கழுவி நெத்தில போட்டு வச்சு பாந்தமா காட்டன் புடவை நேர்த்தியாக் கட்டினாலே போதும் . அழகு அள்ளிக்காதா. அப்படிகூட என்னால இருக்க முடியல. கல்யாணம் ஆனா கொஞ்ச நாள்ல , வேலை விட்டுட்டு புருஷன் வரும்போது பங்கரையா இருக்கவேண்டாமேன்னு குளிச்சு , நான் சொன்னனே அந்த மாதிரி போய் கதவை தொறந்தப்போ,, என் வீட்டுக்காரர் கேட்டார். என்னடி ராத்திரி 8 மணிக்கு இப்டி பளிச்சுனு வந்து நிக்கறே. எவனாவது வரானா என்னன்னு கேட்டார். நொந்துட்டேன். பொண்டாட்டி நீட்டா இருந்தாலே கண்டவனையும் மயக்கறதுக்குத்தான்னு மண்டைக்குள்ள சந்தேகப்புழுவா நெளிஞ்சிட்டிருக்கிற மனுஷன்கிட்ட என்னனு பேச. அவர் இருந்தவரைக்கும் அதுக்கப்புறம் வீட்டுல நான் அழுக்கு சாமியாரிணிதான்.
சரி அவர் போனப்புறமாவது அப்டி இருக்கலாம்னு பார்த்தா,, அக்கம் பக்கமெல்லாம் , புருஷன் போனதுக்கப்புறமும் எப்படி மினிக்கிட்டு அயரா பாருன்னுச்சு. போச்சா... புகை படிஞ்ச ஓவியம் மாதிரியே வாழ்ந்தேன்
அப்பா அம்மாவுக்கு அடங்கி போற மகளா நடிச்சு.... புருசனுக்கு மனைவியா நடிச்சு.. புள்ளைங்களுக்கு அம்மாவா நடிச்சு ... பேரன் பேத்தின்னு ஆனவுடன் .. பாட்டியா நடிச்சு... உ ஷ் ஹப்பா.. வேஷம் போட்டு போட்டு முகமூடி போட்டுட்டே காலம் முழுக்க வாழ்ந்து என சொந்த முகமே எனக்கு மறந்து போய்டுச்சு... இனியும் இப்டி இருந்தா நான் எனக்கான வாழ்க்கையை வாழ முடியாதுன்னு முடிவு செஞ்சேன்.
எப்ப பார்த்தாலும் மத்தவங்களோட நாடகத்துல வேலைக்காரியாயும். ஆயாவாவும் அடிமையாவுமே நடிச்சா , என் நாடகத்துல எனக்கு சொந்தமான மேடையில எனக்கு பிடிச்ச மாதிரி நான் எப்போ நடிக்கறது. அதான் முடிவு பண்ணி களமிறங்கியினேன். இனி நான் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எது சந்தோசம் தருதோ அப்படி வாழனும்.
இங்க வந்தப்போ அனாதையா சேர வந்தவள் மாதிரி நான் இருக்கணும்னு நினைக்கல. யாராச்சும் நம்ம கிட்ட ரெண்டு வார்த்தை நல்ல பேசமாட்டங்கள்னு ஏங்கிட்டிருக்கிறஎன் போல பல வயசானவங்க கூட மனம் விட்டு பேசினேன். பெண்களை எல்லாம் என் தோழிகளா மாத்தினேன். ஆண்களையெல்லாம் என் நண்பர்களாக்குனேன்.
சிலர் தங்களோட சோகங்களை சொல்லி அழுதாங்க. மனா பாரம் தாங்க முடியாம சில ஆண்கள் வாய் விட்டு கதறுனாங்க.. அலுது முடிஞ்சதும் கதறி ஓஞ்சதும் இனி யாரும் இந்த முதியோர் இல்லத்துல அழகூடாதுன்னு சொன்னேன். நாம ஏன் இன்னொருத்தர் அன்பு காட்டாமாட்டாங்களானு ஏங்கணும். நாம தான் வச்சிருக்கோம் வண்டி வண்டியா அன்பை மனசு முழுக்க .. அதை மத்தவங்களுக்கு குடுப்போம்னு அங்க புத்திய திருப்பி விட்டேன்.
தங்களுக்குள்ள மட்டுமில்ல.. வெளியிலிரிந்து யார் வந்தாலும் புலம்பக்கூடாதுன்னேன். எல்லோரும் ஒத்துக்கிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை தெரியும் . அவங்களால முடிஞ்ச வேலைய செய்ய வச்சோம். நாங்களே மரம் நட்டோம். தினமும் தண்ணி ஊத்தி எங்க பசங்களை போல பார்த்துக்கிட்டோம். அதுல ஒவ்வொரு துளிர் விடும்போதும் உற்சாகமானோம்.
ரொம்ப வயசானவங்க இருக்காங்க. நிரந்தர நோயாளிகளும் இருக்காங்க. அவர்களையெல்லாம் நாங்களே கவனிச்சுக்கிட்டோம். எதுவுமே செய்யாம மோட்டுவளைய பார்த்துட்டு உக்கார்ந்திருந்தா மனோ வியாதிதான் வரும். என் பையன். என் பொண்ணுன்னு தன்னலமா யோசிக்கறதை விட்டு... இங்க வரவங்களையெல்லாம் எங்க பசங்களா, கூட வர குழந்தைகளை எல்லாம் பெற பசங்கள நினைச்சு பழகினோம்.
மார்னிங் எந்திரிச்சு வாக்கிங் போறதுல இருந்து நைட் தியானம் பண்ணிட்டு படுக்கைக்கு போற வரை.... இப்போ இங்க எல்லோருமே பிஸி.
உடல் உழைப்பு இருக்கிறதால எல்லோரும் நிம்மதியா அசந்து தூங்கறோம். மனசுல எந்த சங்கடமும் இல்ல. ஏதாவது நடந்தா யார் நம்மை பார்த்துப்பாங்களோங்கற பயமில்லை. மகன் , மகள்னு உறவுகள் இல்லாம இருந்தா எனா. இங்க தோழரா .. தோழியா பலகாரத்துக்கு இவ்ளோ பெரு இருக்கும்போது நமக்கென்ன கவலைன்னு தைரியம் வந்திருக்கு...
நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கும்மா. வயசானாலே வாழ்க்கையை அலுப்பா பாக்கறவாங்க மத்தியில இன்னும் மனசையும் புத்தியையும் இளமையா வச்சுக்கற உங்க நேர்மறை எண்ணங்களுக்கு நான் தலை வாங்கறேன். உங்களுக்கு ஏதாவது பரிசா தரணும்னு ஆசைப்படறேன். என்ன வேணும்னு சொல்லுங்க... வாங்கிட்டு வந்து தரேன்... என்றேன்..
இப்டி யாராவது என்னை முன்னாலேயே கேட்டிருந்தா நான் இப்போ இப்படியெல்லாம் பேசிட்டிருந்திருக்க மாட்டேன்,. நீங்க கேட்டதே போதும் தம்பி.. சந்தோசம். உங்க பேரன்ட்ஸ் இருக்காங்களா...?
அப்பா இல்லம்மா... அம்மாதான் இருக்காங்க.. ஊர்ல தம்பி கூட...
ஓ... உங்கம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா ?
நான் யோசித்தேன். என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும். ...
எனக்கு எதுவும் நினைவில் உதிக்கவில்லை. என்னத்தம்பி யோசிக்கறீங்க. ஒண்ணும் தெர்யலயா... என்கிறார் லேசான சிரிப்புடன்.
பெத்தது பத்தா இருந்தாலும் ஒவ்வொன்னுக்கும் என்ன பிடிக்கும்னு விறல் நுனில அம்மாக்கள் வச்சிருப்போம். ஆனா பத்து பிள்ளைகளுக்கும் ஒரு அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு தெரியறதில்ல. போகட்டும். உங்கம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சுட்டு அத அவங்களை அனுபவிக்க வையுங்க... அதைவிட அவங்களை கேக்காமயே நீங்க அதை தெரிஞ்சுட்டு அது கிடைக்க ஏற்பாடு பண்ணுனிங்க. அது இன்னும் அவங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.. எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா இதை செய்யுங்க. போதும்,
அந்த அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்ததும் தம்பியின் மொபைலுக்கு அழைத்தேன். எதிர் முனையில் தம்பியின் ஹலோ சொல்லுண்ணா கேட்டதும் அம்மாவிடம் போனை தரச்சொன்னேன். அம்மா ரவீ என்றதும்.. நைட் புறப்பட்டு ஊருக்கு வரேன்மா .. என்றேன். அம்மா சந்தோஷமாகி வா வா என,, நான் தொடர்ந்தேன் .. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லும்மா. வாங்கிட்டு வரேன்.
இப்டி திடு திப்புனு கேட்டா நான் என்னனு சொல்ல... ஒண்ணும் வேணாம். நீ பத்திரமா வா போதும். என்றாள். இல்ல நீ நைட்டுக்குள்ள கூப்பிட்டு சொல்லு சரியா என்று விட்டு போனை அணைத்தேன்.. அம்மா ஆச்சர்யமாகி யோசித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள நான் ஆவலாய் காத்திருந்தேன்.

=====================================================================================================

எழுதியவர் : கே. ரவிச்சந்திரன் ( ௯௯௯௪௩௨ (3-Oct-17, 5:54 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 400

மேலே