தூரத்து நிலவு
அது ஒரு தூரத்து நிலவு.
என்னை வந்து அவ்வப்போது எட்டிப் பார்த்து செல்லும்.
வாடிய என் முகம் கண்டால் என்னை நோக்கி ஓடி வந்து விடும்.
என்னை பார்த்து கண் சிமிட்டும்.
என்னிடம் லாலி லல்லி கானம் பாடும்.
என்னை முறைக்கும். ஆனாலும் சிரித்துவிடும்.
பல முகங்களை எனக்கு காட்டும்.
என்னிலே புன்முறுவல் வரும் வரை இத்தனை இத்தனை நாடகங்கள் என்னிடம் நிகழ்த்தும்.
என் கண்களில் மகிழ்ச்சி 'வெள்ளம்' வரும் வரை என்னை பாடாய்படுத்தும்.
கட்டுக்கடங்கா சிரிப்பலைகளை என் வதனத்தில் தோன்றச் செய்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்.
இது வாடிக்கை ஆனது.
மாதங்கள் உருண்டோடின.
இப்போது அந்த தூரத்து நிலவு என்னிடம் வருவதில்லை.
பாசாங்கு செய்து பார்க்கிறேன் என்னிலே சோகம் அரும்புவதாகவும், நான் கவலைகளில் மாய்வது போலவும்.
அடிக்கடி எட்டிப் பார்க்கிறேன்.
"காணவில்லை" பத்தியில் ஒரு விளம்பரம் தரலாமா என்றும் யோசித்து விட்டேன்.
விலாசம் தெரியாமல் அந்த தூரத்து நிலவு மறைந்து போனது.
என் எதிர்பார்ப்புகளுக்கு விடை இல்லாமல் போய்விட்டது.
நாடி, ஓடி, தேடி களைத்து போய்விட்டேன்.
அது என்னை ஏமாற்றி விட்டதென சில காலம் இப்படி தேடல் வேட்டையில் இனிதே கழிந்தது.
சற்றே யோசித்தேன். புது வழி பிறந்தது.
என்னையா ஏமாற்றுகிறாய்? இப்போது பார்! என்றேன்.
மீண்டும் அதே தூரத்து நிலவின் அன்பு 'சேட்டைகள்' தொடங்கிவிட்டன.
அதே கண் சிமிட்டல், லாலி லல்லி பாடல், முகம் காட்டல்.... என
எல்லாம் அச்சு பிசகாமல்.
அந்த தூரத்து நிலவு மீண்டும் வந்தது.
என் பிரதிபலிப்பாக.
என்னிலே நிரந்தரமாக.
இப்போது நானே அந்த நிலவு.