சராசரியாளனின் புலம்பல்

சராசரியாளனின் புலம்பல்
மணி அடித்தால் சோறு
சிறையில் கிடைக்கலாம் !
இங்கு மணி அடிக்குமுன்
ஆஜர், இல்லையென்றால்
ஊதியத்தில் வெட்டு உண்டு
நடத்துநரின் அன்பான வசவுகளை
தினம் தினம் கேட்டு
பழகியதால் சொரணை கெட்டு
அடித்து பிடித்து போனாலும்
அரை மணி நேரம் தாமதம்தான்.
“கரணம் தப்பினால் மரணம்”
இது உயிருக்கு துணிந்து சாகசம்
செய்பவனுக்கு மட்டுமல்ல !
பாதையை கடக்கும்
எங்களுக்கும் தான்
வாழ்நாளின் லட்சியம் என்ன?
இந்த மாதமாவது பிடித்தம்
இல்லாமல் சம்பளம் வாங்க வேண்டும்
வீட்டு வரி, தண்ணி வரி, தொழில் வரி
வரிகளிலே வரிசையாய் கணக்கிட்டு
மாதமோ வருடமோ அழுது
தொலைப்பது? மறந்தால்
அந்த அலுவலகம் முன் அழுது
தொலைக்கவேண்டும்.
இத்தனையும் சகித்து பிடித்து
வருடத்தை ஓட்டிவிட்டு
ஓய்வு என்று வீட்டுக்கு
அனுப்பி விட கிடைக்கவிருக்கும் பணம்
மருந்துக்கு முக்காலும், வயிற்றுக்கு காலும்
பிரித்து தயாராக வேண்டும்.
ஆனால் வரும் தொகையோ
கைக்கு காணாது !